‘யார்க்கர் மன்னன்’ மலிங்கா பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர். மின்னல் வேகத்தில் வரும் அவரது பந்துகள் ஸ்டெம்புகளை துல்லியமாக தாக்கும். வேகம் தான் மலிங்காவின் ப்ளஸ் பாயின்ட். இந்திய ரசிகர்கள் பும்ராவை கொண்டாடி வருகிறார்கள். `ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியில் விளையாடியபோது மலிங்கா பந்துவீசுவதில் எனக்கு சில யோசனைகளை வழங்கினார்' என பும்ரா கூறினார். முன்புபோல் மலிங்கா பந்துவீச்சில் வேகம் இல்லை. ஆனாலும் தனது அனுபவத்தால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். 2019- ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு தனது அனுபவத்தின் மூலம் பந்துவீச்சில் டஃப் கொடுத்தார். இறுதிஓவரை வீசிய மலிங்கா மும்பை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் வங்கதேச அணிக்கு எதிரான தொடருடன் ஒருநாள் போட்டியில் தனது ஓய்வை முடிவை அறிவித்தார். டி20 போட்டிகளில் கவனம் செலுத்தப்போவதாக கூறினார். அடுத்தாண்டு நடக்கவுள்ள உலகக்கோப்பை போட்டியைக் கருத்தில் கொண்டு மலிங்கா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது விளையாடிவருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அந்தப்போட்டியில் மலிங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச அரங்கில் டி-20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை மலிங்கா பெற்றார். சர்வதேச அரங்கில் மலிங்கா 99 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறினார். இரண்டாவது இடத்தில் 98 விக்கெட்டுகளுடன் பாகிஸ்தானின் அஃப்ரிடி இருக்கிறார்.
இந்நிலையில் நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி-20 போட்டி இன்று நடந்தது. இந்தப்போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றினால் மலிங்கா டி-20 போட்டியில் 100 விக்கெட்டுகளை சாய்த்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். அதனால், இலங்கை ரசிகர்கள் மலிங்காவின் சாதனையை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால் மலிங்கா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.
இதன் பின்னர் நீயூசிலாந்து தனது இன்னிங்ஸை தொடங்கியது. மலிங்கா வீசிய முதல் ஓவரில் நீயூசிலாந்து அணி 3 ரன்கள் எடுத்தது. இரண்டாவது ஓவரில் முன்ரோ சிக்ஸர், பவுண்டரி என விளாச 15 ரன்கள் கிடைத்தது. மூன்றாவது ஓவரை வீசிய மலிங்கா முதல் இரண்டு பந்துகளை டாட் பந்துகளாக வீசினார். 3-வது பந்தில் முன்ரோவை க்ளின் போல்ட் ஆக்கினார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் டி-20 போட்டியில் 100 விக்கெட்டுகளை சாய்த்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். 4-வது பந்தில் ரூதர்ஃபோர்ட் எல்.பி.டபிள்யூ முறையில் வீழ்ந்தார். 5-வது பந்தில் கிராண்ட்ஹோம்மை போல்டாக்கி ஹாட்ரிக் அடித்தார். அடுத்த பந்தில் ராஸ் டெய்லரை எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாக்கினார். இதன் மூலம் போட்டியை இலங்கையின் பிடிக்கு கொண்டுவந்தார். மீண்டும் தான் ராஜா என்பதை நிரூபித்தார் மலிங்கா.
இந்தப்போட்டியில் நியூசிலாந்து அணி 88 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 4 ஓவர்கள் பந்துவீசிய மலிங்கா 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.