Published:Updated:

Matheesha Pathirana: "தோனி சொல்வதில் எனக்குக் கொஞ்சம் கூட உடன்பாடில்லை!" - லசித் மலிங்கா

Matheesha Pathirana, MS Dhoni, Lasith Malinga

"15-20 டெஸ்ட் போட்டிகள் ஆடினால் கூட பதிரனாவின் பௌலிங் ஃபிட்னஸ் அதிகரிக்கும், அவரது திறனும் மேம்படும்" - மலிங்கா கருத்து

Published:Updated:

Matheesha Pathirana: "தோனி சொல்வதில் எனக்குக் கொஞ்சம் கூட உடன்பாடில்லை!" - லசித் மலிங்கா

"15-20 டெஸ்ட் போட்டிகள் ஆடினால் கூட பதிரனாவின் பௌலிங் ஃபிட்னஸ் அதிகரிக்கும், அவரது திறனும் மேம்படும்" - மலிங்கா கருத்து

Matheesha Pathirana, MS Dhoni, Lasith Malinga

டெத் பௌலிங்தான் என்றுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெரிய தலைவலியாக இருக்கும். ஆனால், இந்த சீசனில் அந்த பிரச்னையை இலங்கை மதீஷா பதிரனாவைக் கொண்டு பெருமளவில் சரிகட்டியிருக்கிறார் கேப்டன் தோனி. இந்த சீசனில் 15 விக்கெட்களை வீழ்த்தியிருக்கும் பதிரனா பிளே-ஆஃப் சுற்றிலும் சென்னையின் முக்கிய துருப்பு சீட்டாக இருக்கப்போகிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தொடர்ந்து பதிரனாவின் பௌலிங்கைப் பாராட்டி வரும் தோனி, மும்பைக்கு எதிரான போட்டிக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு பதிரனாவின் கரியர் குறித்த ஆலோசனை ஒன்றையும் அளித்திருந்தார்.

Matheesha Pathirana  and Lasith Malinga
Matheesha Pathirana and Lasith Malinga
Courtesy: Sri Lanka Cricket/Twitter

"இப்படியான ஆக்ஷன் கொண்ட அவர், அதிகம் கிரிக்கெட் ஆடக்கூடாது. குறிப்பாக ரெட் பால் கிரிக்கெட் போட்டிகளில் அவரை ஆட வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இலங்கை நிர்வாகம் பெரிய ஐசிசி தொடர்களுக்காக மட்டும் அவரை பாதுகாக்க வேண்டும். இப்போது அவர் ஏற்படுத்தும் தாக்கத்தை எப்போதுமே அவரால் ஏற்படுத்தமுடியும்." என்று அப்போது கூறியிருந்தார் தோனி. 'குட்டி மலிங்கா' எனச் செல்லமாக அழைக்கப்படும் பதிரனாவின் வளர்ச்சி பற்றியும் அவரது வருங்காலம் பற்றியும் ESPNCricinfo தளத்திற்கு அளித்த பேட்டியில் மனம் திறந்திருக்கிறார் லசித் மலிங்கா.

"பதிரனாவை ஐசிசி தொடர்களில் மட்டும் ஆட வைக்கவேண்டும் என தோனி விளையாட்டாகச் சொல்கிறார் என நினைக்கிறேன். தேசிய அணிக்காக ஆடும்போது அப்படி உங்களால் ஆட முடியுமா என எனக்குத் தெரியவில்லை.

அவரை ரெட்-பால் கிரிக்கெட் ஆட வைக்கக்கூடாது என சொல்பவர்கள் அவர் காயமடைந்து விடுவார் என்ற பயத்தில் அப்படிச் சொல்கிறார்கள். ஆனால், நான் ரெட்-பால் கிரிக்கெட் ஆடும்போது இப்படி யாரும் என்னை எச்சரிக்கவில்லை. 2004-லிருந்து 2010 வரை டெஸ்ட் கிரிக்கெட் ஆடினேன். அப்படியும் 16 ஆண்டுகள் சர்வதேச அரங்கில் என்னால் பந்துவீச முடிந்தது. நிறைய ஐபிஎல் ஆடியிருக்கிறேன், பிக் பாஷ் மற்றும் பிற டி20 லீக்குகளிலும் ஆடியிருக்கிறேன். ஆனால், காயம் என பாதியில் களத்திலிருந்து நான் வெளியேறியதே இல்லை. நிறைய பேர் என் கருத்தை எதிர்ப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால், காயமடைந்துவிடுவார் என நாமே ஒரு முடிவுக்கு வந்துவிடுவது சரி ஆகாது. நான் அவரை போன்றே பந்துவீசியவன், அதில் இருக்கும் சவால்கள் என்ன என்பது எனக்குத் தெரியும்!"

Matheesha Pathirana
Matheesha Pathirana

முழங்கால் மற்றும் கணுக்கால் காயங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "எலும்பு தொடர்பான காயங்களால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. ஆனால், அது ஒவ்வொரு பந்திலும் எவ்வளவு எஃபர்ட் போடுகிறோம் என்பதில் இருக்கிறது. என்னைக் கேட்டால் 'டெஸ்ட் தொப்பியை எப்படியாவது பெற்றுவிடு' என்றே பதிரனாவிடம் சொல்லுவேன். அவர் ஒரே ஒரு டெஸ்ட் மட்டும் ஆடலாம். 10 டெஸ்ட் ஆடலாம், 100 டெஸ்ட் கூட ஆடலாம். அதை யாருமே கணிக்க முடியாது. 15-20 டெஸ்ட் போட்டிகள் ஆடினால் கூட அவரது பௌலிங் ஃபிட்னஸ் அதிகரிக்கும், அவரது திறனும் மேம்படும். பேட்டர்களை எப்படி விக்கெட்டுக்காகத் தயார்படுத்துவது, எப்படி ஒரு ஸ்பெல்லைக் கட்டமைப்பது என அனைத்தையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கற்றுக்கொள்ள முடியும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவர் உடல் ஒத்துழைக்கவில்லை என்றால் உடனே திட்டங்களை மறுபரிசீலனை செய்யலாம்.

எப்படியாவது என்னைவிட சிறந்த வீரராக பதிரனாவை ஆக்கி விடவேண்டும் என நினைக்கிறேன். அடுத்த டெஸ்ட் டூரில் அவரை ஈடுபடுத்துங்கள், ஒருநாள் போட்டிகளிலும் ஆட வையுங்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் எப்படி ஆடுகிறார் என்பதை வைத்து அவரது வருங்காலத்தைத் திட்டமிடுங்கள். அதற்குள் 10-15 டெஸ்ட் போட்டிகள் ஆடிவிட்டாலே அது அவரது முன்னேற்றத்திற்கு பெருமளவில் உதவும். நான் ரிவெர்ஸ் ஸ்விங் செய்யக் கற்றுக்கொண்டது டெஸ்ட் கிரிக்கெட்டில்தான். அப்படி என்னவெல்லாம் மதீஷா கற்றுக்கொள்வார் என்று யாராலும் சொல்ல முடியாது.

லசித் மலிங்கா
லசித் மலிங்கா

இன்னும் இலங்கை அணிக்காக ஆடவே ஆரம்பிக்காத ஒருவரை பாதுகாப்பது பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். அவருக்கு வெறும் 20 வயதுதான்!" என்றார் மலிங்கா.

இந்த விஷயத்தில் தோனி சொல்வது சரியா? மலிங்கா சொல்வது சரியா? கமென்ட்டில் உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்!