Published:Updated:

யார்க்கர்ஸ்... டோ க்ரஷ்ஷர்ஸ்... கடைசிப்பந்தில் விக்கெட்! #ThankyouMalinga

கார்த்திகா ராஜேந்திரன்

போட்டி நடப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னரே முதல் போட்டிக்கான டிக்கெட்டுகள் மளமளவென விற்றுத்தீர்ந்தன. காரணம், லசித் மலிங்கா!

லசித் மலிங்கா
லசித் மலிங்கா

கொழும்பு ஆர்.பிரேமதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியின் முடிவில், ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றதற்கான கொண்டாட்டம் அல்ல அது... இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவுக்கு விடைகொடுக்க எழுந்த உற்சாக அலை அது. இலங்கை அணியின் தவிர்க்க முடியாத வேகப்பந்துவீச்சாளர், யார்க்கர் நாயகன், மேட்ச் வின்னர் மலிங்காவின் ஒரு நாள் கிரிக்கெட் பயணம், கடைசிப் பந்து விக்கெட்டுடன், ரசிகர்களின் ஆரவாரத்துடன் மகிழ்வாய் முடிவுக்கு வந்தது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச அணி, மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. போட்டி நடப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னரே முதல் போட்டிக்கான டிக்கெட்டுகள் மளமளவென விற்றுத்தீர்ந்தன. காரணம், லசித் மலிங்கா! 2019 உலகக்கோப்பைக்குப் பிறகு, வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியுடன் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மலிங்கா அறிவித்திருந்தார்.

15 ஆண்டுகளாக இலங்கை அணிக்கு விளையாடிய மலிங்காவின் கடைசிப் போட்டியைக் காண ரசிகர்கள் மைதானத்துக்குப் படையெடுத்திருந்தனர். 'We miss you Malinga' , 'Thank you Malinga' போன்ற போஸ்டர்களை ஏந்திய ரசிகர்கள் மைதானத்தை ஆக்கிரமித்திருந்தனர்.

சிறப்பாக விளையாடவில்லை என அணியிலிருந்து நீக்கப்படும்படியான சூழல் ஏற்படவில்லை. மாறாக, கடைசிப் போட்டி வரை மேட்ச் வின்னிங் பர்ஃபாமன்ஸைக் கொடுத்து, தன்னுடைய ஓய்வை தானே முடிவு செய்து விடைபெற்றுள்ளார் மலிங்கா.

2019 உலகக் கோப்பையில் தடுமாறிக் கொண்டிருந்த இலங்கை அணி, திடீரென இங்கிலாந்தை வீழ்த்தி எழுச்சி கண்டது. இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பிய மலிங்கா, அந்தப் போட்டியில் மொத்தம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். உலகக் கோப்பையின் முக்கியமான கட்டத்தில் இலங்கை அணிக்கு கிடைத்த பெரு வெற்றி அது.

லசித் மலிங்கா
லசித் மலிங்கா

அதேபோல, 2007 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதிய போட்டியைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. 210 ரன்கள் வெற்றி இலக்கை சேஸ் செய்தது தென்னாப்பிரிக்க அணி. கிராம் ஸ்மித், ஜேக் காலிஸின் அதிரடியால் ரன் சேர்த்த தென்னாப்பிரிக்காவுக்கு கடைசியில் 32 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தென்னாப்பிரிக்கா கையில் 5 விக்கெட்டுகள் இருந்தன.

45-வது ஓவரை வீச களமிறங்கினார் மலிங்கா. ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள். அடுத்து சமிந்தா வாஸ் வீசிய ஓவரில் 1 ரன். மீண்டும் 47-வது ஓவரை வீச மலிங்காவை அழைத்தார் அப்போதைய இலங்கை அணி கேப்டன் ஜெயவர்தனே. ஓவரின் முதல் இரண்டு பந்துகளிலும் விக்கெட்டுகள். அந்தப் போட்டியில் 86 ரன்கள் எடுத்து களத்தில் இருந்த காலிஸை வெளியேற்றினார் மலிங்கா. 10 பந்துகளில் 1 ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகள் சரிய, தென்னாப்பிரிக்காவுக்கு மரண பயம் காட்டினார் மலிங்கா. கடைசியில் தட்டுத் தடுமாறி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்ற தென்னாப்பிரிக்கா, பெருமூச்சுவிட்டது.

இப்படி மலிங்காவின் டெத் ஓவர் அசத்தல்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அதனால்தான், வழக்கமான டெத் ஓவர் விக்கெட்டுகளை காண மலிங்காவின் கடைசிப்போட்டிக்கு ரசிகர்கள் திரண்டிருந்தனர். போட்டியின் முதல் ஸ்பெல்லில் கேப்டன் தமீம் இக்பாலை வெளியேற்றிய மலிங்கா, அடுத்த ஓவரில் சவுமியா சர்க்காரை பெவிலியன் அனுப்பினார்.

மீண்டும் மலிங்கா 41-வது ஓவரை வீச வரும்போது, 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது வங்கதேச அணி. இலங்கையின் நுவான் பிரதீப் (3), தனஞ்செய டி சில்வா (2) விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். மலிங்கா வீசிய 41-வது ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட முஸ்தாஃபிசுர் ரகுமான் கேட்ச் கொடுத்து அவுட்டாக, ரசிகர்கள் 'மலி..மலி...' என ஆர்ப்பரிக்கத் தொடங்கினர்!

ரசிகர்களின் உற்சாகத்தோடு சர்வதேச ஒரு நாள் போட்டியின் கடைசிப் பந்தில் விக்கெட்டோடு முடித்துக் கொண்டார் மலிங்கா. கடைசி விக்கெட் சரிந்த அந்த மொமன்ட், ரசிகர்களுக்காக மலிங்காவும், அவருக்காக ரசிகர்களும் பகிர்ந்துகொண்ட ஸ்பெஷல் மொமன்ட்ஸ்!

குமார் சங்ககரா, மஹிலா ஜெயவர்தனே போன்ற முன்னாள் இலங்கை வீரர்களைப் போலவே, சரியான நேரத்தில் தனது ஓய்வை அறிவித்திருக்கிறார் மலிங்கா. 2023 உலகக்கோப்பைக்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்பதை மனதில் கொண்டு இம்முடிவை எடுத்தது பாராட்டப்பட வேண்டியது!

15 ஆண்டுகளாக இலங்கை அணிக்காக விளையாடியுள்ளேன். 2023 உலகக் கோப்பைக்கு இளம் வீரர்கள் கொண்ட இலங்கை அணியைத் தயார் செய்ய வேண்டிய நேரமிது. எனவே நான் ஓய்வு பெற இதுவே சரியான நேரம்
லசித் மலிங்கா

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் சமிந்தா வாஸ் விடைபெற்றபோது, அந்த இடத்தை நிரப்பினார் லசித் மலிங்கா. இலங்கை அணியின் தவிர்க்க முடியாத வேகப்பந்துவீச்சாளராக மலிங்காவின் 15 ஆண்டுக்கால கிரிக்கெட் பயணம் சாதனைகளால் நிரம்பியது.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்று ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். 2007-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும், 2011-ம் ஆண்டு கென்யா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராகவும் ஹாட்ரிக் எடுத்தார்.

லசித் மலிங்கா
லசித் மலிங்கா

ஒரு நாள் கிரிக்கெடில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் மலிங்கா ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் மலிங்கா

226 போட்டிகள் - 338 விக்கெட்டுகள்

2004-ம் ஆண்டு ஐக்கிய அமீரகம் அணிக்கு எதிராக தொடங்கிய லசித் மலிங்காவின் ஒரு நாள் கிரிக்கெட் பயணம், 2019-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போட்டியோடு நிறைவடைந்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து 2011-ம் ஆண்டு ஓய்வு பெற்ற மலிங்கா, இப்போது ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றுள்ளார். தொடர்ந்து டி-20 போட்டிகளில் விளையாட இருக்கும் மலிங்கா, அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி-20 உலகக்கோப்பை வரை அணியில் இருப்பார்.

'Guard of Honour' முறையில் மலிங்காவை வழி அனுப்பி வைக்கும் இலங்கை வீரர்கள்
'Guard of Honour' முறையில் மலிங்காவை வழி அனுப்பி வைக்கும் இலங்கை வீரர்கள்

வங்கதேசத்துக்கு எதிரான போட்டி முடிவில், 'Guard of Honour' முறையில் மலிங்காவை வழி அனுப்பி வைத்தனர் இலங்கை வீரர்கள். மலிங்கா மைதானத்தை விட்டு வெளியேறும் வரை ரசிகர்களின் 'மலி...மலி..' சத்தம் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது!

மலிங்காவின் ஃபேர்வெல்லுக்கு யுவராஜ் சிங் இப்படி ட்வீட் செய்திருந்தார், "சர்வதேச கிரிக்கெட்டில் மலிங்காவைப் போன்ற இன்னொரு toe crusher உருவாகப்போவதில்லை.." என்று.

உண்மைதான். ஹேப்பி ஃபேர்வெல் மலிங்கா..!