Published:Updated:

வெளிப்படையற்ற பிசிசிஐ, வரிசைகட்டும் சர்ச்சைகள்; இந்திய கிரிக்கெட்டிற்கு என்னதான் ஆச்சு?!

Indian cricket team | இந்திய கிரிக்கெட் அணி

இங்கேதான் விமர்சனங்களுக்கு அஞ்சி நேர்மையான விளக்கத்தை வெளிப்படுத்தாத அணியின் ப்ராசஸ் மீதும் கேள்வி எழுகிறது.

வெளிப்படையற்ற பிசிசிஐ, வரிசைகட்டும் சர்ச்சைகள்; இந்திய கிரிக்கெட்டிற்கு என்னதான் ஆச்சு?!

இங்கேதான் விமர்சனங்களுக்கு அஞ்சி நேர்மையான விளக்கத்தை வெளிப்படுத்தாத அணியின் ப்ராசஸ் மீதும் கேள்வி எழுகிறது.

Published:Updated:
Indian cricket team | இந்திய கிரிக்கெட் அணி
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியின் வீரர்களை சென்ற வாரம் அறிவித்திருந்தது பிசிசிஐ. இந்த அறிவிப்பு வெளியானத்திலிருந்து இந்திய கிரிக்கெட்டை பற்றி அத்தனை விவாதங்கள், அத்தனை சர்ச்சைகள்... அவை இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் குறித்தான எதிர்பார்ப்பு சற்று அதிகமாக இருந்தது. காரணம், ரஹானே, புஜாரா போன்ற சீனியர் பேட்டர்களின் தொடர் சொதப்பல், ஷ்ரேயாஸ் முதலிய இளம் வீரர்களின் எழுச்சி என இந்திய அணி புதியதொரு மாறுதலுக்கு தன்னை தயாராக்கிக்கொண்டிருந்தது. இதனால் அடுத்த தலைமுறைக்கான ஓர் தொடக்கமாக அமையப்போகும் இத்தொடரில் யாருக்கெல்லாம் இடம், யாரெல்லாம் கடைசி ஒரு முறை இந்திய ஜெர்சியில் ஆடப்போகிறார்கள் என்ற பல கேள்விகளும் நிலவிவந்தன. ஆனால், கடந்த ஒருவாரமாக ஸ்குவாடில் யாரெல்லாம் இருப்பார்கள் என்ற இந்தப் பரபரப்போடு, மேலும் பல அதிர்ச்சியான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இனி விராட் கோலிக்கு பதில் ரோஹித் ஷர்மாவே லிமிடெட் ஓவர் ஃபார்மர்ட்களில் அணியை வழிநடத்துவார் என்ற அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், இது நீண்ட நாள்களாக எதிர்பார்த்த அறிவிப்பு என்றே சொல்ல வேண்டும். மேலும் இந்த கேப்டன்சி மாற்றம் என்பது மிக சரியான முடிவும் கூட. ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இருவேறு வைட் பால் ஃபார்மெட்களில் தனித்தனி கேப்டன்கள் இருக்க வேண்டாம் என்பது நல்ல முடிவு. மேலும் கோப்பைகள் மட்டுமே தலைமைப்பண்பிற்கான அடையாளம் என்று அலங்கரிக்கப்பட்டும் இக்காலத்தில் தான் எந்த ஒரு கோப்பையையும் வென்றுதரவில்லை என கோலியே நேற்றைய சந்திப்பில் கூறினார்.

Virat Kohli
Virat Kohli

ஆனால், இந்த முடிவை அறிவித்த விதத்தில்தான் பிசிசிஐ முற்றிலும் சறுக்கியிருக்கிறது. இது வெறுமென தலைமை மாற்றத்திற்கான அறிவிப்பாக மட்டும் பார்க்காமல் தனிப்பட்ட வீரர் ஒருவரை ஒரு கிரிக்கெட் நிர்வாகம் எப்படிக் கையாள்கிறது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. நிகழ்கால உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலிக்கே இந்த நிலை என்றால் இதனால் மற்ற வீரர்களிடம் ஏற்படப்போகும் பாதுகாப்பின்மை உணர்வு குறித்துச் சொல்லத் தேவையில்லை.

உலக கிரிக்கெட்டில் மிக முக்கிய சக்தியாகக் கருத்தப்படும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ஒரு நேர்மையான வெளிப்படைத்தன்மை இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. ஜோ ரூட் என்னும் சிறந்த பேட்டரை டி20 ஃபார்மெட்டிலிருந்தே முழுமையாக ஒதுக்கி வைத்து அதற்கான நேர்மையான காரணத்தை வெளிப்படையாக உடைத்தது இங்கிலாந்து வாரியம். ஆனால், இங்கு தொடர்ந்து சோபிக்கத் தவறிய ஒரு வீரரை ஓர் ஆட்டத்தில் உட்கார வைக்கச் சொல்லப்படும் காரணத்தில்கூட உண்மை இருக்கிறதா என்பதே தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் பொதுவாக 'காயம் ஏற்பட்டிருப்பதால் ஓய்வு அளிக்கப்படுகிறது' என்ற வார்த்தைகளே விளக்கமாக வருகின்றன.

Sourav Ganguly and Jay Shah
Sourav Ganguly and Jay Shah

விராட் கோலியே கடந்த சில காலமாக புதிய வீரர் ஒருவர் அணிக்குள் வருகிறார் என்றால் அதற்கு காரணமாக காயத்தின் மீதே பழிபோட்டுவருகிறார். உண்மையான காரணங்களை வெளிப்படையாக கூறி எடுக்கப்படும் முடிவுகள் தவறாக போய்விட்டால் கிளம்பும் விமர்சங்களுக்காகவா பிசிசிஐ அஞ்சுகிறதோ என்ற கேள்வி இதனால் எழுகிறது.

எட்டவேண்டிய இலக்கை பற்றிக் கவலைப்படாமல் அப்போதைய ப்ராசஸில் மட்டும் கவனம் செலுத்தினால் வெற்றி என்பது என்றைக்கும் வசப்படும். இங்கே விமர்சனங்களுக்கு அஞ்சி நேர்மையான விளக்கத்தை வெளிப்படுத்தாமால் இருப்பதால் அணியின் ப்ராசஸ் மீதே கேள்வி எழுகிறது. டெஸ்ட் அணியை ஒருபக்கம் வைத்துவிட்டு வைட் பால் அணியை எடுத்துக்கொண்டால் தற்போதுள்ள வீரர்களில் பெரும்பாலானோர் மேட்ச் வின்னர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், ஒரு மொத்த அணியாக பார்த்தால் பல்வேறு ஓட்டைகளை உடைய முழுமையற்ற அணியாகவே காட்சி தருகிறது இந்திய அணி. ஓப்பனிங்கில் ரோஹித், ராகுலை பற்றிச் சொல்ல எதுவுமில்லை. நம்பர் 3-ல் கோலி. அவருக்கு பிறகு ஒரு நிரந்தர மிடில் ஆர்டர் என்பது இந்திய அணிக்கு இத்தனை வருடங்களில் அமையவே இல்லை. இந்த நான்காவது வீரர் யார் என்ற குழப்பம் இன்றுவரை நீடிக்கிறது. இதனால்தான் டி20 உலகக்கோப்பை சொதப்பலும் என்பதை மறுப்பதற்கில்லை.

யுவராஜ், ரெய்னா ஆகியோருக்கு பிறகு பார்ட் டைம் பௌலர் ஒருவரை கூட கண்டெடுக்கவில்லை. மேலும், தோனி இடத்தை ஹர்திக் பாண்டியா நிரப்புவார் என்று பார்த்தால் அவரின் பிட்னஸால் அவரால் ஒரு ஆல்ரவுண்டருக்கான பணியையே சிறப்பாகச் செய்ய முடியவில்லை. இதுமட்டுமல்லாமல் இடதுகை பேட்டர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சார்கள்களின் பற்றாக்குறை என இன்னும் சிலவற்றை அடுக்கலாம். உலகின் அசைக்க முடியாத அணியாக கடந்த பல வருடங்களாக இந்திய அணி தொடர்ந்து திகழ்ந்தாலும் மேற்சொன்ன ப்ராசஸில் கவனம் செலுத்தாமல் கோப்பைகளை வெல்வது கடினம்.

NCA பயிற்சியாளராக தற்போதைய இந்திய அணியின் இளம் வீரர்கள் பலரையும் உருவாக்கியவர் என போற்றப்படுவர் ராகுல் டிராவிட். இவர் தற்போது தேசிய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், டிராவிட்டின் வருகையும் கோலியின் கேப்டன்சி பறிப்பும் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம் சூழலை இன்னும் சவாலுக்கும் என்றே தெரிகிறது. நேற்று கோலியின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகு கங்குலிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், கோலியின் கேப்டன் பதவி பறிப்பு முடிவில் டிராவிட்டின் பங்கு துளியும் இருக்கப்போவதில்லை என்பதை நாம் கண்மூடிதனமான சொல்லிவிடமுடியாது. ஏனென்றால் சில ஆண்டுகளுக்கு முன் கோலியின் போக்கை வெளிப்படையவே விமர்சித்தவர் டிராவிட்.

இரண்டு மாதங்களுக்கு முன் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் அணியின் ஆலோசகராக தோனியை நியமித்ததே கோலியின் அதிகாரத்தை மட்டுப்படுத்தத்தான். கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தபோது அணியில் இடம் பெற்ற ஜெயந்த் யாதவ் தற்போது டிராவிட்டின் பதவியேற்புக்குப் பிறகு மீண்டும் அணியில் சேர்ந்துள்ளார். இதிலிருந்தே கோலியின் அதிகாரம் என்பது கடந்த சில மாதங்களாவே குறைந்துவருவது வெளிப்படையாகவே தெரிகிறது.

இதற்கான காரணங்களாக மத்தியில் ஆளும் பாஜக அரசுடனான வேறுபட்ட நிலைப்பாடு, ஆளும் அரசை விமர்சித்த 'பாதாள் லோக்' தொடரை அனுஷ்கா ஷர்மா தயாரித்தது, ஷமிக்கு ஆதரவான கோலியின் கருத்து எனப் பல விதமான விவாதங்கள் சமூக வலைதளங்களில் உருவெடுத்து வருகின்றன. இவ்விவாதங்களை ஓரம் கட்டிவிட்டு அணியின் நலனைக் கருத்தில்கொண்டு நடக்கும் அனைத்தையும் பார்க்கவேண்டும்
Rahul Dravid
Rahul Dravid

கால்பந்தை போல பயிற்சியாளரை மையப்படுத்தி இயங்கும் விளையாட்டு அல்ல கிரிக்கெட். களத்திற்கு வெளியே திட்டமிடப்படும் வியூகங்களைத் தாண்டி தக்கநேரத்தில் அணியின் கேப்டனால் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் இங்கு வெற்றியில் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் அணியில் புதிய பயிற்சியாளர் சேரும்போது பழைய திட்டங்களின் படியே குறுகிய காலம் பயணித்து அதிலிருந்து மாற்றங்கள் செய்வது இயல்பு. இதற்கு மாறாக அதிரடி மாற்றங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன.

புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர், புதிய திட்டங்கள் எனப் புதியவைக்கான பட்டியல் நீண்டுக் கொண்டுபோக, அடைபடாத பழைய ஓட்டைகளுடன் இந்த மாறுபட்ட ட்ரெஸ்ஸிங் ரூம் சூழலும் புதிதாகச் சேர்ந்துள்ளது. இதுபோக, பிசிசிஐ சார்பாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்னமே செய்திகள் பல, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் என்ற பெயரில் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. நிர்வாகம் சம்பந்தப்பட்ட நபர்களே இவ்வாறான அரைகுறை தகவல்களைப் போகிறபோக்கில் பேசிய சம்பவங்களையும் நாம் சமீபத்தில் பார்த்துவிட்டோம்.

மற்றொரு புறம், இவை உண்மையிலேயே கசியும் தகவல்களா அல்லது ஆழம்பார்ப்பதற்காக கசியவிடப்படும் தகவல்களா என்ற விவாதமும் கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவ்வகை விவாதங்கள் எழாமல் இருக்கவும், நிர்வாகத்தின் மேலான நம்பகத்தன்மை சிதையாமல் இருக்கவும், இனியாவது வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யுமா பிசிசிஐ?

இது குறித்து உங்களின் கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.