ஒருவழியாக, உலகக் கோப்பை தொடங்கி ஒரு வாரம் கழித்து இன்று தன் முதல் போட்டியில் களமிறங்கப்போகிறது இந்திய அணி. 'உலகக் கோப்பையை 10 அணிகளாகக் குறைத்த ஐ.சி.சி, இந்தியாவைக் கூப்பிட மறந்துவிட்டதா?' என்று பலரும் கலாய்க்கும் அளவுக்கு இருக்கிறது இந்த அட்டவணை. இந்தப் போட்டியைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் இந்திய அணியில் இருக்கும் சிக்கல்களை அலசுவோம்.

இந்தத் தொடருக்குத் தேர்வு செய்யப்பட்ட அணியைப் பொறுத்தவரை எந்த குறையும் சொல்வதற்கில்லை. இருந்தாலும், இந்த உலகக் கோப்பைக்கான அனைத்து விஷயங்களையும் இந்தியா கொண்டிருக்கிறதா என்றால் இல்லை! உலகக் கோப்பை தொடங்கி, சில போட்டிகளில் பௌலர்கள் ஆதிக்கம் செலுத்தியதுபோல் தோன்றியது. ஆனால், மெல்ல இங்கிலாந்து ஆடுகளங்களின் அருமை தெரியத்தொடங்கியிருக்கிறது. எளிதாக 300 ரன்கள் அடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட பிட்ச்களில் பேட்டிங் பலத்தைப் பற்றிப் பேசுவதில் எந்த பிரயஜோனமும் இல்லை. பந்துவீச்சுதான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப்போகிறது. இந்தியா அந்த இடத்தில் சில சிக்கல்களைக் கொண்டிருக்கிறது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் போட்டியை எடுத்துக்கொள்வோம். பாகிஸ்தான் ஓப்பனர்கள் இருவரையும் வெளியேற்றியது மொயீன் அலி. இங்கிலாந்தின் மிடில் ஆர்டரில் ஸ்டோக்ஸ், மோர்கன் என விக்கெட்டுகள் வீழ்த்தி நெருக்கடி கொடுத்தது ஹஃபீஸ் - மாலிக் கூட்டணி. எல்லோரும் ஆஃப் ஸ்பின்னர்கள். தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் இடையிலான போட்டியில், ரன்ரேட் ஆறுக்கும் மேல் இருக்க, வெறும் 4.40 என்ற எகானமியில் பந்துவீசினார் மெஹதி ஹசன் மிராஜ். ஆஃப் ஸ்பின்னர்! எதிரணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் நிறையப்பேர் இருக்கும்போது, அங்கு ஆஃப் ஸ்பின்னர்களின் பங்களிப்பு அதிகமாகத் தேவைப்படும்.

பாகிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை எனப் பல அணிகளின் இரு ஓப்பனர்களுமே இடது கை பேட்ஸ்மேன்கள். மற்ற அணிகளின் மிடில் ஆர்டரில் இரண்டு, மூன்று இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். உதாரணமாக, இன்று இந்தியா எதிர்த்து விளையாடும் தென்னாப்பிரிக்காவின் டாப் - 7ல் டி காக், மில்லர், டுமினி, ஃபெலுக்வாயோ என 4 இடது கை பேட்ஸ்மேன்கள். மிடில் ஆர்டர் முழுக்க அவர்கள்தான். இப்படி ஒவ்வொரு அணியிலும் இடது கை பேட்ஸ்மேன்கள் நிறைய இருக்கும்போது, அவர்களை ஆஃப் ஸ்பின்னர்க்ள் சிறப்பாகக் கையாண்டுகொண்டிருக்கும்போது, அந்த ஆஃப் ஸ்பின்னர்கள் இந்திய அணியில் இல்லை என்பதுதான் கவலையாக இருக்கிறது.
இருக்கும் ஒரேயொரு ஆஃப் ஸ்பின் ஆப்ஷன் கேதர் ஜாதவ். அவரை எவ்வளவு பயன்படுத்துகிறோம், எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதுதான், இந்திய அணி இடது கை பேட்ஸ்மேன்களை எப்படிச் சமாளிக்கப்போகிறது என்பதை உணர்த்தும். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், ஸ்டோக்ஸை வெளியேற்ற ஹஃபீஸோடு சேர்த்து, மாலிக்கையும் பந்துவீச அழைத்தார் சர்ஃபராஸ். இரண்டு எண்டில் இருந்தும் ஆஃப் ஸ்பின்னர்கள் நெருக்கடி கொடுக்க, ரன்ரேட் குறைந்ததோடு ஸ்டோக்ஸும் வெளியேறினார். சொல்லப்போனால், அங்கிருந்துதான் போட்டி பாகிஸ்தான் பக்கம் வந்தது. இப்படியான யுக்திகளைக் கையாள, கோலியின் வசம் வாய்ப்புகள் இல்லை. இருப்பதே ஒரே ஒரு பார்ட் டைம் பௌலர்!

இதுவரை இல்லாத வகையில், மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளரையும், வேகப்பந்துவீசும் ஆல்ரவுண்டரையும் கண்டுபிடித்த இந்திய அணி, காலம் காலமாக வைத்திருந்த பார்ட் டைம் பௌலர்கள் என்ற சொத்தை இழந்துள்ளது. 2003 உலகக் கோப்பையில் பங்கேற்ற இந்திய அணியில், டிராவிட், பார்த்திவ், கைஃப் தவிர்த்து 12 பேருமே பந்துவீசக்கூடியவர்கள். எந்தப் போட்டியிலும் ஆடாத அகர்கர், சஞ்சய் பங்கர் தவிர்த்து, மற்ற 10 பேருமே பந்துவீசினர். லெக் ஸ்பின்னுக்கு சச்சின், ஆஃப் ஸ்பின்னுக்கு சேவாக், இடது கை ஸ்பின்னுக்கு யுவி, தினேஷ் மோங்கியா, மீடியம் பேஸுக்கு கங்குலி என எல்லா ஏரியாவிலும் ஒரு ஆள் இருந்தனர். இப்போது அப்படியில்லை. மொத்தம் இருக்கும் 15 பேரில் 7 பௌலிங் ஆப்ஷன்தான்!
ஒருசில போட்டிகளில் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டால் கேப்டன்கள் பார்ட் டைம் பௌலர்களைப் பயன்படுத்துவார்கள். அப்போது, அவர்களின் வேகப்பந்துவீச்சாளர்கள் 10 ஓவர்கள் போடவேண்டிய தேவை இருக்காது. கொஞ்சம் ஃப்ரஷ்ஷாக இருப்பார்கள். உதாரணமாக, 2003 உலகக் கோப்பையில், கென்யாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின்போது, சச்சின், சேவாக், யுவ்ராஜ் இணைந்து 15 ஓவர்கள் பந்துவீசியிருப்பார்கள். அதிலும் குறிப்பாக 35-வது ஓவரிலிருந்து 44-வது ஓவர்வரை அவர்கள் மூவரும்தான் பந்துவீசியிருப்பார்கள். நெஹ்ரா (7 ஓவர்கள்), ஸ்ரீநாத் (5 ஓவர்கள்) ஆகியோருக்குப் பெரிய வேலை இருந்திருக்காது. ஆனால், வெறும் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே கொண்டிருக்கும் இந்திய அணி, அவர்களிடம் 100 சதவிகித உழைப்பையும் பிழிந்தெடுக்கவேண்டிய நிலையில் இருக்கிறது.

இதில் இன்னொரு முக்கிய பிரச்னை ஜாதவின் ஃபிட்னஸ்! ஏற்கனெவே ஐ.பி.எல் தொடரின்போது காயத்தால் வெளியேறினார். அணி அறிவிக்கப்படும் கடைசி நாள் வரை அவரது ஃபிட்னஸ் குறித்து சந்தேகமே நிலவியது. இங்கிலாந்திலும் பேண்டேஜோடுதான் சுற்றிக்கொண்டிருக்கிறார். அவரை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். அதேபோல்தான் ஹர்திக் பாண்டியாவும். இந்தியாவின் முக்கியத் துருப்புச்சீட்டு அவர். அவர்கள் இருவரையுமே பந்துவீச்சின்போது சரியாகக் கையாளவேண்டும். கோலி இதையெல்லாம் சரியாகச் செய்தால்தான், கடைசி கட்டப் போட்டிகளின்போது காயம் என்ற சிக்கல் இல்லாமல் இருக்கும்.
சரி, இன்றைய போட்டிக்கு வருவோம். இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்திருக்கும் தென்னாப்பிரிக்காவை சௌதாம்ப்டனில் சந்திக்கிறது. ஏற்கெனவே காயங்களால் அவதிப்பட்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு எங்கிடி, ஸ்டெய்ன் ஆகியோரின் காயம் மேலும் பின்னடைவு. அந்த இடத்தை பிரிடோரியஸ்தான் இன்று நிரப்புவார். அதேபோல், சமீபகாலமாக மோரிஸ் ரன் வாரி வழங்குவதும் அவர்களுக்குச் சிக்கலாக அமையலாம். ரபாடாவின் ஓப்பனிங் ஸ்பெல்லைப் பொறுத்தே, அவர்களின் பந்துவீச்சு அமையும்.

பேட்டிங்கைப் பொறுத்தவரை, டி காக், டுப்ளெஸ்ஸி இருவரும் இந்தியாவுக்குச் சவால் அளிப்பார்கள். வேன் டெர் டூசன் நன்றாகத் தொடங்கினாலும், அதைப் பெரிய ஸ்கோராக மாற்றத் தவறுகிறார். மிடில் ஆர்டரில் அவர் நிலைத்து நிற்பது முக்கியம். இல்லையேல், இந்தியாவின் ஸ்பின் அட்டாக்கில் தென்னாப்பிரிக்கா நிலைகுலையலாம்.
இந்திய அணிக்கு இன்று முக்கிய துருப்புச் சீட்டாக இருக்கப்போவது ஹர்திக் பாண்டியாதான். இந்திய டாப் ஆர்டரால் நிச்சயம் 300 ரன்களை எடுக்க முடியும். ஆனால், இங்கிலாந்து ஆடுகளங்களுக்கு அந்த ஸ்கோர் போதாது. அந்த 300 ஸ்கோர்களை 350+ ஸ்கோர்களாக மாற்றுவது அவசியம். அதற்கு இவரத் அதிரடி மிகவும் முக்கியம். பந்துவீச்சிலும் அப்படித்தான். ஷார்ட் பிட்ச் பந்துகள் நன்றாக எடுபடுவதால், கண்டிப்பாக மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் வீழ்த்தக்கூடும். இரண்டு ஏரியாக்களிலுமே பாண்டியாவின் பங்களிப்பு பெரிதாக இருக்கும்.

ஏற்கெனவே சொன்னதுபோல் மில்லர், டுமினி, ஃபெலுக்வாயோ அடங்கிய அவர்களது மிடில் ஆர்டரை கேதர் ஜாதவை வைத்து சரிசெய்யவேண்டும். ஷமி, பும்ரா இருவரும் சரியான இடைவெளியில் விக்கெட் வீழ்த்துவது அவசியம். பேட்டிங்கில் இந்திய கேப்டன் விராட் கோலி தென்னாப்பிரிக்காவைப் பதம் பார்க்கலாம், கடந்த 4 ஆண்டுகளில் அந்த அணிக்கு எதிராக அவர் வைத்திருக்கும் சராசரி 109.87! அவர்களுக்கு எதிராக, கடைசி 12 போட்டிகளில் 4 சதங்கள் அடித்திருக்கிறார். அவரது அசத்தல் ஃபார்ம் உலகக் கோப்பையிலும் தொடர்வது, மொத்த அணிக்கும் நம்பிக்கையாக அமையும்.
பிளேயிங் லெவன்
இந்தியா : இந்திய அணி எல்லோரும் எதிர்பார்த்தபடியே களமிறங்கும். நான்காவது வீரராக கே.எல்.ராகுல் இறங்குவார். ஹர்திக் ஆடுவதால், சஹால் - குல்தீப் கூட்டணி களமிறங்கும் என்றே எதிர்பார்க்கலாம். கூடுதல் பேட்டிங் ஆப்ஷனோடு களமிறங்க நினைத்தால், ஜடேஜா களமிறக்கப்படலாம்.
உத்தேச அணி : ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், எம்.எஸ்.தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால் / ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா

தென்னாப்பிரிக்கா (உத்தேச அணி) : எய்டன் மார்க்ரம், குவின்டன் டி காக், ஃபாஃப் டுப்ளெஸ்ஸி, ராஸி வேன் டெர் டூசன், டேவிட் மில்லர் / ஹஷிம் அம்லா, ஜே.பி.டுமினி / ஹஷிம் அம்லா, ஆண்டைல் ஃபெலுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், டுவைன் பிரிடோரியஸ், இம்ரான் தாஹிர்.
முக்கிய வீரர்கள்
இந்தியா : விராட் கோலி, ஹர்திக் பாண்டியா
தென்னாப்பிரிக்கா : குவின்டன் டி காக், ககிசோ ரபாடா