Published:Updated:

`ஆல்-ரவுண்டர் பர்ஃபாமன்ஸ்னா இப்படி இருக்கணும்..!’ - கே.பி.எல்லில் அசத்திய கிருஷ்ணப்பா கெளதம்

பிரேம் குமார் எஸ்.கே.

முதலில் களமிறங்கிய பெல்லாரி அணி, தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கியது. ஒன் டவுன் இறங்கிய கிருஷ்ணப்பா கெளதம், ஷிமோகா அணியைத் தன் பேட்டால் பதம் பார்த்தார்.

Krishnappa Gowtham
Krishnappa Gowtham

தமிழத்தில் டி.என்.பி.எல் போன்று கர்நாடகாவில் `கர்நாடகா பிரிமியர் லீக்' கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் `ஆல்-ரவுண்டர் பர்ஃபாமன்ஸ்னா இப்படி இருக்கணும் என்பதுபோல் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார் கிருஷ்ணப்பா கெளதம்.

Krishnappa Gowtham
Krishnappa Gowtham

அட, இந்தப் பெயரை எங்கேயோ கேட்டதுபோல் இருக்கே என ஐபிஎல் ஃபேன்ஸ் நினைப்பது கேட்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர்தான் இந்த கிருஷ்ணப்பா கெளதம்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், பெல்லாரி டஸ்கர்ஸ், ஷிமோகா லயன்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில்தான் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளார் கெளதம். மழையால் ஆட்டம் பாதிக்கப்பட, டி20 போட்டியானது 17 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது.

முதலில் களமிறங்கிய பெல்லாரி அணி, தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கியது. ஒன் டவுன் இறங்கிய கிருஷ்ணப்பா கெளதம், ஷிமோகா அணியைத் தன் பேட்டால் பதம் பார்த்தார். தொடக்கம் முதலே சிக்ஸர்களைப் பறக்கவிட்டவர், 39 பந்துகளில் சதமடித்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 134 ரன்கள் குவித்தார். இதில் 13 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடக்கம். இறுதியாக 17 ஓவர்கள் முடிவில் பெல்லாரி அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது.

`இது உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவல்ல... சி.எஸ்.கே-வுக்கு நன்றி!' - அம்பதி ராயுடு

பின்னர் 17 ஓவர்களில் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஷிமோகா அணியைப் பந்துவீச்சிலும் கலங்கடித்தார் கெளதம். 4 ஓவர்கள் வீசிய கெளதம், 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இறுதியாக 16.3 ஓவர்களில் 133 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது ஷிமேகா லயன்ஸ். இதன்மூலம் பெல்லாரி அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதும் கெளதமுக்கு வந்து சேர்ந்தது.