`இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத கேப்டன்' என தோனியைச் சொல்லலாம். டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, டெஸ்ட்டில் நம்பர் ஒன் எனப் பல்வேறு உச்சங்களுக்கு இந்திய அணியை வழிநடத்திச் சென்றிருந்தாலும் சமீபகாலமாக அவர் மீது பல்வேறு விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் தோனியின் ஸ்லோ ஸ்டிரைக் ரேட் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலிருந்து தானாக விலகி ராணுவத்தில் பயிற்சி மேற்கொண்டார் தோனி. அதன் பின்னர் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான அணியிலும் தோனி இடம்பெறவில்லை. அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து பன்ட் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் சில நாள்களுக்குப் பிறகு தோனியின் பெயர் மீண்டும் சமூகவலைதளங்களில் அடிபட தொடங்கியுள்ளது. திடீரென இந்திய ட்ரெண்டிங்கில் தோனியின் பெயர் இடம் பெற, அதற்கு கோலியின் ட்விட்டர் பதிவு தொடக்கமாக அமைந்திருக்கிறது. 2016 -ம் ஆண்டு மொகாலியில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, ``என்னால் மறக்க முடியாத ஆட்டம் இந்த ஆட்டம். சிறப்பான இரவு. தோனி, என்னை ஒரு ஃபிட்னெஸ் சோதனையில் ஓடவைப்பதைப் போன்று ஓட வைத்தார்” எனப் பதிவிட்டார்.
குறிப்பிட்ட அந்தப் போட்டியில் வேகமாக ரன்களை ஓடி ஓடிச் சேர்த்தது கோலி - தோனி பார்ட்னர்ஷிப். இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய கோலி ஆட்டமிழக்காமல் 82 ரன்களை எடுத்தார். ஆட்டநாயகனாவும் தேர்தெடுக்கப்பட்டார். இந்தப் போட்டி நடந்ததோ 2016 -ம் ஆண்டு மார்ச் மாதம் 27 -ம் தேதி. இதை இன்று கோலி ஷேர் செய்ய என்ன காரணம் எனத் தெரியாமல் பலர் முழிக்க, சிலர், இன்று மாலை தோனி தனது ஓய்வை அறிவிக்க உள்ளார் என்று தெரிவித்து வருகின்றனர்.
தோனி ஓய்வு தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வராத நிலையில், பலரும் `தோனி தொடர்ந்து ஆட வேண்டும்' என்றும் `ஓய்வை அறிவிக்காதீர்கள்' என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். உண்மை என்ன என்பது தோனிக்கு மட்டும்தான் தெரியும்!