Published:Updated:

தொடங்கியதா கோலி - கங்குலி இடையிலான பனிப்போர்? பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தது என்ன?

Sourav Ganguly - Virat Kohli
News
Sourav Ganguly - Virat Kohli

"டெஸ்ட் அணி பற்றி விவாதித்தோம். பேசி முடிக்கும்போது, நான் ஒருநாள் கேப்டனாக இருக்கவேண்டாம் என்று உறுப்பினர்கள் முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தனர். நானும் அதை ஏற்றுக்கொண்டேன்." - விராட் கோலி

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணிக்கான வீரர்களின் பட்டியலை சென்ற வாரம் அறிவித்திருந்தது பிசிசிஐ. இதில் லிமிடெட் ஓவர் ஃபார்மேட் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார் ரோஹித் ஷர்மா. மேலும் விராட் கோலி தலைமைதாங்கும் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் உயர்த்தப்பட்டார் ரோஹித்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு பயிற்சி நேரத்தில் ஏற்பட்ட எதிர்ப்பாராத காயத்தால் டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் ரோஹித். இந்நிலையில் ஐ.பி.எல் டி20 உலகக்கோப்பை என தொடர்ந்து விளையாடி வருவதால் விராட் கோலி தன் குடும்பத்துடன் நேரம் செலவிட எதிர்வரும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தனக்கு விடுப்பு வழங்கக் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகின.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கோலி தலைமை தாங்கும் டெஸ்ட் அணியிலிருந்து ரோஹித் விலகிய நிலையில், அடுத்த சில நாள்களிலேயே புதிய கேப்டன் ரோஹித்தின் ஒருநாள் அணியிலிருந்து கோலி விடுப்பு கேட்டுள்ளார் என்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது முற்றிலும் தற்செயலானதா அல்லது கோலி - ரோஹித்தின் உறவில் விரிசலா என்ற ரீதியில் விவாதங்கள் வலுபெற்றன. இந்நிலையில் இன்று மதியம் விராட் கோலி பத்திரிகையாளர்ளை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின. இதையடுத்து இந்த அத்தனை சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் என்ன சொல்லப்போகிறார் கோலி என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன.

Virat Kohli at virtual press conference today
Virat Kohli at virtual press conference today

பொதுவெளியில் இத்தனை நாள் நிலவி வந்த அனைத்து கேள்விகளுக்கு விடையளித்தாலும் புதியதொரு அதிர்ச்சியையும் அளித்தள்ளது கோலியின் இப்பேட்டி. முதலில் எதிர்வரும் தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து தான் விலகிவிட்டதாக வெளியான செய்தியை முற்றிலும் மறுத்தார் கோலி.

இது குறித்து அவர் கூறுகையில், “நான் இந்திய அணியில் விளையாட என்றைக்கும் தயாராகவே உள்ளேன். நான் விளையாடவில்லை என்று வெளியான செய்திகள் அனைத்தும் பொய்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒருநாள் அணியின் கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பதிலளித்த அவர், “டெஸ்ட் அணி தேர்வு செய்யப்படுவதற்கு ஒன்றரை மணி நேரம் முன்பு தேர்வுக்குழு உறுப்பினர்கள் என்னை அழைத்தனர். டெஸ்ட் அணி பற்றி விவாதித்தோம். பேசி முடிக்கும்போது, நான் ஒருநாள் கேப்டனாக இருக்கவேண்டாம் என்று உறுப்பினர்கள் முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தனர். நானும் அதை ஏற்றுக்கொண்டேன்" எனத் தெரிவித்தார்.

அடுத்ததாக தனக்கும் ரோஹித்துக்கும் இடையிலான உறவை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் இக்கேள்விக்கு கடந்த 2 ஆண்டுகளாக தெளிவுபடுத்தியே தான் சோர்வடைந்து விட்டதாகவும் கூறினார்.

இவ்வாறு அனைத்து விதமான கேள்விகளுக்கும் தெளிவான விளக்கத்தை கொடுத்த கோலி தான் டி20 கேப்டன்சியில் இருந்து விலகியது பற்றி பதிலளித்ததில் புதியதொரு சர்ச்சை எழுந்துள்ளது. கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது பற்றி கடந்த டிசம்பர் 12 அன்று பதிலளித்த கங்குலி, "கோலி டி20 கேப்டன்சியிலிருந்து விலக முடிவு எடுத்தபோது நான் அவரை அம்முடிவில் இருந்து பின்வாங்க தனிப்பட்டமுறையில் கேட்டுக்கொண்டேன்” என்று கூறினார். ஆனால் அதற்கு முற்றிலும் மாறான புதியதொரு விளக்கத்தை அளித்துள்ளார் கோலி. “டி20 அணியின் கேப்டனாக நான் விலக முடிவெடுத்து பிசிசிஐ-யிடம் தெரிவித்தபோது அவர்கள் எந்த மறுப்புமில்லாமல் ஏற்றுக்கொண்டனர். இது குறித்து என்னிடம் யாரும் பேசவில்லை” என்றார்.

Virat Kohli and Rahul Dravid
Virat Kohli and Rahul Dravid

கோலி - ரோஹித் நட்பில் எந்த ஒரு விரிசலும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் கோலி - கங்குலி ஆகியோரின் மாறுபட்ட கருத்துகள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய விரிசலுக்கான தொடக்கம் இந்திய கிரிக்கெட்டில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது, இதில் புதிய பயிற்சியாளரான டிராவிட்டின் பங்கு என்ன என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.