இந்திய அணி வங்கதேசத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தியா - வங்கதேசம் இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 5 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணியைத் தோற்கடித்து வங்கதேச அணி தொடரைக் கைப்பற்றியது. ஆனால் சட்டோகிராமில் நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியில் விராட் கோலியின் சதம் மற்றும் இஷான் கிஷனின் இரட்டை சத்தத்தால் 409 ரன்களைக் குவித்து இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை இஷான் கிஷன் பெற்றார். விராட் கோலி 72 சதங்கள் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 71 சதங்கள் அடித்திருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்கைப் பின்னுக்குத் தள்ளி 2வது இடம் பிடித்தார். இப்பட்டியலில் 100 சதங்கள் எடுத்து சச்சின் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
சில ஆண்டுகளில் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், "சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பது எல்லாம் இந்திய அணிக்குத் தற்போது தேவையில்லை" என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லதீப் பேசியிருக்கிறார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், “சதங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கான நேரம் இது இல்லை. அது தேவையற்றதும் கூட. அவர்கள் (இந்தியா) தற்போது சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும். இந்திய அணி ஐ.சி.சி கோப்பையை வென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. கோலி 100 சதம் அடிப்பதும், 200 சதம் அடிப்பதும் பெரிய விஷயமல்ல. ஆசியக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, 2019 உலகக்கோப்பை, மேலும் கடந்த இரு டி20 உலகக்கோப்பை தொடர்கள் என எதிலும் இந்திய அணி பட்டத்தை வெல்லவில்லை. 100 சதம் என்ற சாதனை விராட் கோலிக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்கும். ஆனால் இந்தியாவுக்கும், ரசிகர்களுக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் தற்போது இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதுதான் முக்கியமானது” என்று கூறியிருக்கிறார்.