Published:Updated:

Virat Kohli: `தளராமல் சமர் புரியும் வீரன்!'- கிங் கோலியின் கம்பேக்கும் வலி மிகுந்த ஃப்ளாஷ்பேக்கும்!

Kohli ( Twitter )

எல்லா நேரமும் துன்பங்களையும் சறுக்கல்களையும் மட்டுமே யாரும் எதிர்கொண்டிருப்பதில்லை. காலம் மாறும்.

Published:Updated:

Virat Kohli: `தளராமல் சமர் புரியும் வீரன்!'- கிங் கோலியின் கம்பேக்கும் வலி மிகுந்த ஃப்ளாஷ்பேக்கும்!

எல்லா நேரமும் துன்பங்களையும் சறுக்கல்களையும் மட்டுமே யாரும் எதிர்கொண்டிருப்பதில்லை. காலம் மாறும்.

Kohli ( Twitter )

அடைமழை காலங்களில் வானத்தைப் பார்த்திருக்கிறீர்களா? மேகங்கள் முட்டி மோதி வெடி வெடிக்கும். மின்னல்கள் தடதடக்கும். தீர்ந்தே போகாதோ எனத் தோன்றுமளவுக்கு மழையின் சாரல்கள் பூமியை நனைத்துக்கொண்டே இருக்கும். நம்மை அண்ணாந்து பார்க்க வைக்கும் அளவுக்கு எதோ ஒன்று வானில் நிகழ்ந்துகொண்டே இருக்கும். அதே வானத்தை கோடை காலங்களில் பாருங்கள். ஒன்றுமே இல்லாமல் ஒருவித வெறுமையோடு மட்டுமே வானம் காட்சியளிக்கும். கிட்டத்தட்ட டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலிக்கு கடந்த 1205 நாட்களும் இப்படியான வெறுமை நிறைந்த நாட்களாகவே இருந்தது. ரன் மெஷினாக சதங்களாக அடித்துக் குவித்துக் கொண்டிருந்தவர்.

தீடீரென தூறலை நிறுத்திய வானம் போல சதங்களே அடிக்க முடியாமல் திணறினார். ஊக்கமளித்து உற்சாகமூட்டும் வகையில் எந்த நிகழ்வும் நடைபெறாத இந்த வெறுமையான நாட்களிலிருந்து கோலி எப்போது விடுபடப்போகிறார் என்கிற ரசிகர்களின் எதிர்பார்ப்பு பார்டர் கவாஸ்கர் தொடரின் நான்காவது போட்டியோடு நிறைவுக்கு வந்திருக்கிறது.
Kohli
Kohli
Twitter

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 364 பந்துகளில் 186 ரன்களை அடித்து மூன்றரை ஆண்டுகால ரசிகர்களின் ஏக்கத்தைத் தணித்திருக்கிறார் கோலி. கோலி தன்னுடைய கரியரில் இத்தனை நீண்ட, சதங்கள் ஏதுமற்ற பருவத்தை எதிர்கொண்டதே இல்லை. அவரது கரியரை எடுத்துக் கொண்டோமேயானால், 2011 இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அந்தத் தொடக்க காலத்தில் ரன்களைச் சேர்ப்பதற்கு கொஞ்சம் சிரமப்பட்டிருந்தார். ஒரு ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக `இந்தத் தொடரில் நான் ரன் சேர்க்கவில்லையெனில் என்னை அணியிலிருந்தே வெளியேற்றிவிடுவார்களோ என பயந்தேன்' என்று கோலியே அந்த தொடக்க கால பெரிதாக ரன்கள் எடுக்காத நாட்கள் குறித்து நினைவு கூர்ந்திருக்கிறார். அந்தத் தொடக்க நாட்களுக்குப் பிறகு கோலி பெரியளவில் சிரமத்தை எதிர்கொண்டது இங்கிலாந்தில்தான். இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் சொல்லி வைத்து கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார்கள். ஆண்டர்சன் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே கோலிக்கு பெரும் அபாயத்தையே காட்டினார். இந்தத் தொடருக்குப் பிறகு, கோலி மீண்டும் இங்கிலாந்து சென்றபோது ஆண்டர்சனுக்கு எதிராகத்தான் மீண்டும் முதல் பந்தை எதிர்கொண்டார். அந்த சமயத்தில் தான் எப்படி அந்தச் சூழலை உணர்ந்தேன் என்பதை கோலி சமீபத்தில் பகிர்ந்திருந்தார். 'ஆண்டர்சன் பந்தை கையில் வைத்திருக்கையில் எனக்கு ஒன்றே ஒன்று மட்டும்தான் தோன்றியது. இந்த ஒரு பந்தை எப்படியாவது கடந்துவிட வேண்டும்' என எண்ணியதாகக் கூறியிருந்தார்.

கோலி இப்படி கொஞ்சம் பயத்துடன் அந்தத் தொடரை அணுகியிருந்தாலும் கடந்த தொடரைவிட இந்தத் தொடரில் கோலி மிகச்சிறப்பாகவே ஆடியிருந்தார். கடந்த தொடரில் கோலியிடம் பெரும் ஆதிக்கத்தை செலுத்திய ஆண்டர்சனால் அதே ஆதிக்கத்தை இந்தத் தொடரில் செலுத்த முடியவில்லை.

கோலியின் கரியரில் அவர் எதிர்கொண்ட பெரும் சறுக்கல்கள் இவைதான். இதைத்தாண்டி சில சமயங்களில் தொடர்ச்சியாக சில இன்னிங்ஸ்களில் சோபிக்காமல் இருந்திருக்கிறார். ஆனால், பல மாதங்களாக பல வருடங்களாக என இந்த மாதிரி கோலி எப்போதுமே தடுமாறியதில்லை. கடைசியாக 2019 இல் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலி சதமடித்திருந்தார். அதன்பிறகு எந்த இன்னிங்ஸிலும் கோலியால் அந்த சதம் என்கிற இலக்கை எட்டவே முடியவில்லை. சச்சின் போன்ற ஜாம்பவான்களின் சாதனைகளையெல்லாம் எளிதில் முறியடிப்பார் என நினைக்கப்பட்டவர் திடீரென இப்படி சுணங்கிப் போனது பெரும் வருத்தத்தையே கொடுத்தது.

Kohli
Kohli
Twitter

டெஸ்ட் என்றில்லை அத்தனை ஃபார்மட்டிலுமே கோலி இந்த காலக்கட்டத்தில் சறுக்கலையே சந்தித்துக் கொண்டிருந்தார். ஓடிஐக்களிலும் சதம் இல்லை. டி20 யிலும் பெரிதாக சாதிக்கவில்லை. ஐ.பி.எல் போட்டிகளும் ஏற்ற இறக்கங்களுடனே அமைந்தன. இன்னும் நன்றாக நினைவிருக்கிறது ஒரு ஐ.பி.எல் போட்டியில் 25 வது பந்தில் பவுண்டரி அடித்துவிட்டு கோலி காற்றில் ஒரு குத்துவிட்டிருப்பார். வழக்கமாக சதம் அடித்துவிட்டு இப்படி செய்யும் ரன் மெஷின் ஒரு பவுண்டரியை அடித்ததற்காக அப்படி ஒரு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதெல்லாம் வேதனையையே கொடுத்தது.

பேட்டிங்கைத் தாண்டி கேப்டன்சியிலும் பல பிரச்னைகளை அணிக்குள் எதிர்கொண்டார். வலிமையான வீரராக பார்க்கப்பட்ட கோலியே மனரீதியாக கொஞ்சம் பலவீனப்பட்டுதான் போயிருந்தார்.

364 பந்துகளை எதிர்கொண்ட கோலி 186 ரன்களை அடித்திருந்தார். 15 பந்துகளை மட்டுமே பவுண்டரியாக்கியிருந்தார். மீதமிருந்த 349 பந்துகளிலும் ஒரு தவம் போன்றதொரு நிதானத்தோடு விராட் கோலி ஆஸ்திரேலிய பௌலர்களை எதிர்கொண்டார். இந்த இன்னிங்ஸின் முக்கால்வாசி ஆட்டத்தை ஆடி முடித்து கோலி 150 ரன்களை எட்டவிருந்த சமயத்தில் க்ரீன் ஒரு ஓவரை வீசியிருந்தார். அந்த ஓவரில் நன்கு ஒயிடாக வந்த ஒரு பந்துக்கு பேட்டை விட்டு எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரியாக்கியிருந்தார். அந்த சமயத்தில் கமென்ட்ரியில் இருந்த ஹர்ஷா போக்ளே 'இந்த இன்னிங்ஸில் கோலி இப்போதுதான் இந்தளவுக்கு ஃப்ரீயாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்து முதல் ஷாட்டை ஆடுகிறார்' என தெரிவித்திருந்தார். ஆக, அத்தனை மணி நேரமாக கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நிதானத்தோடும் வேட்கையோடும் கோலி ஆடியிருந்தார்.

Kohli
Kohli
Twitter

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் கோலி இதுவரை சந்திக்காத விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்திருந்தார். அணியில் கோலியின் இடமே கேள்விக்குள்ளாக்கப்பட்டது. ஆனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியை எட்ட வேண்டி இந்திய அணி சிறப்பாக ஆடியே ஆக வேண்டும் எனும் இக்கட்டான சூழலில் கோலி இப்படி ஒரு இன்னிங்ஸை ஆடிக்கொடுத்திருக்கிறார். இந்திய அணியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.

இதுதான் கோலி! 'நான் யாரையும் தவறென நிரூபிப்பதற்காக இங்கே வரவில்லை. இந்த இன்னிங்ஸை ஆடவில்லை' என போஸ்ட் மேட்ச் ப்ரெஷென்டேஷனில் கோலி பேசியிருந்தார். கோலி அப்படித்தான். யாருடைய விமர்சனங்களையும் கண்டுகொள்ளமாட்டார். எத்தனை முறை வீழ்ந்தாலும் அணிக்காக எனும்போது போரின் முதல் வரிசையில் நின்று சமர் செய்வான் இந்த மாவீரன்!