இரண்டு நாள்களுக்கு முன்னர் கோலி போட்ட ஒரு பதிவால் நாடே தோனியின் பதிலை எதிர்பார்த்து கிடந்தது. ஆம்! கடந்த 12-ம் தேதி, 2016 -ம் ஆண்டு மொகாலியில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, ``என்னால் மறக்க முடியாத ஆட்டம் இந்த ஆட்டம். சிறப்பான இரவு. தோனி, என்னை ஒரு ஃபிட்னெஸ் சோதனையில் ஓடவைப்பதைப் போன்று ஓட வைத்தார்” எனப் பதிவிட்டார்.

குறிப்பிட்ட அந்தப் போட்டியில் வேகமாக ரன்களை ஓடி ஓடிச் சேர்த்தது கோலி - தோனி பார்ட்னர்ஷிப். இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய கோலி ஆட்டமிழக்காமல் 82 ரன்களை எடுத்தார். ஆட்டநாயகனாவும் தேர்தெடுக்கப்பட்டார். இந்தப் போட்டி நடந்ததோ 2016 -ம் ஆண்டு மார்ச் மாதம் 27 -ம் தேதி. இதை இன்று கோலி ஷேர் செய்ய என்ன காரணம் எனத் தெரியாமல் பலர் முழிக்க, சிலர்,` இன்று மாலை தோனி தனது ஓய்வை அறிவிக்க உள்ளார்’ என கிளப்பி விட தோனி ரசிகர்கள் கலங்கு போனார்கள். பின்னர் குழப்பங்களுக்கு தோனியின் மனைவி சாக்ஷி ஒரு ட்வீட் மூலம் இந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நாளை தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தப் தொடருக்கு தோனி தேர்தெடுக்கப்படாத நிலையில், இன்று இந்திய அணியின் கேப்டன் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், `தோனியின் அனுபவத்துக்கு மாற்றே கிடையாது’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர், ``அனுபவம் தான் எல்லாவற்றிலும் சிறந்தது என்பேன். கடந்த காலங்களில் பல வீரர்கள் வயது என்பது வெறும் நம்பர் தான் என நிரூபித்துக் காட்டியுள்ளனர். தோனியும் பல, கால கட்டங்களில் இதனை செய்துக் காட்டியுள்ளார். அவரிடம் இருக்கும் சிறப்பு என்ன வென்றால், அவர் எப்போதும் இந்திய கிரிக்கெட்டை பற்றி சிந்திக்கும் நபர். கிரிக்கெட் விளையாடுவதை எப்போது நிறுத்த வேண்டும் என்பது ஒருவரின் தனிப்பட்ட கருத்து. இந்த விவகாரத்தில் மற்றவர்களுக்கு கருத்துகூட சொல்லக் கூடாது என்பேன்” என்றார்.
தொடர்ந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய தனது ட்விட்டர் பதிவு தொடர்பாக பேசிய கோலி, ``எனது மனதில் எந்த எண்ணமும் இல்லை. வீட்டில் சும்மா இருந்த நேரத்தில் அந்த படத்தை பதிவிட்டேன். ஆனால் அது பெரும் செய்தியாகிவிட்டது. அது எனக்கு ஒரு பாடத்தை கற்று கொடுத்துவிட்டது. ஆம், நான் நினைப்பது மாதிரியே இந்த உலகம் நினைக்காது என தெரிந்துகொண்டேன்.

அந்த ஒரு போட்டி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். அந்த போட்டி குறித்து நான் அதிகம் பேசியது கிடையாது. அதனால் தான் அந்த புகைப்படத்தை பதிவிட்டேன். ஆனால் மக்கள் வேறு மாதிரி எடுத்துக் கொண்டார்கள்” என்றார்.