கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது பல வெற்றிகளைக் குவித்து வருகிறது. எனினும், இந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராகத் தோல்வியைச் சந்தித்து வெளியேறியது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

`எப்படியும் இந்திய அணி இந்த உலகக் கோப்பைத் தொடரை கைப்பற்றிவிடும்' என நம்பி இருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது அந்த அரையிறுதி ஆட்டம். 240 ரன்கள் என்ற இலக்கை வலுவான பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணி எளிதாக சேஸ் செய்துவிடும் என நினைத்திருந்த நிலையில், இந்திய அணிக்கு அதிர்ச்சிகரமான தொடக்கமே கிடைத்தது.
ராகுல், ரோகித் ஷர்மா, கேப்டன் கோலி என மூவரும் ஒரு ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். 5 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், ஜடேஜாவின் அதிரடியான ஆட்டம், தோனியின் நிலையான ஆட்டம் என இறுதிவரை பரபரப்பாகவே சென்றது அந்த ஆட்டம். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் சற்று நிலைத்து நின்றிருந்தால்கூட அன்று இந்தியா வெற்றிபெற்றிருக்கும்.

இந்நிலையில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார் கேப்டன் கோலி. `இந்தியா டுடே' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ``தோல்விகள் என்னைப் பாதிக்குமா என்று கேட்டால் நிச்சயம் பாதிக்கும். கட்டாயம் எல்லோரையும் பாதிக்கும்.
ஆட்டத்தின் முடிவில் அணியில் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என நினைப்பேன். அரையிறுதி ஆட்டத்தைப் பொறுத்தவரை ஒரு விஷயத்தை உறுதியாக நம்பினேன். நான் களத்துக்குச் சென்று ஆட்டமிழக்காமல் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வேன் என முன்னரே நம்பினேன். எனது ஈகோதான் அப்படி நான் நினைக்கக் காரணம் என நினைக்கிறேன். நான் எப்படி ஒரு விஷயத்தை முன்னரே தீர்மானிக்க முடியும்?

எப்போதுமே நான் தோல்வியை வெறுப்பவன். களத்தில் இறங்குவது என்பது பெருமை தரும் விஷயம். அந்தக் களத்தில் இருந்து வெளியேறும்போது எனது எனர்ஜி முழுவதையும் ஆட்டத்தில் அளித்திருக்கவே விரும்புவேன். மைதானத்தைவிட்டு ஜீரோ எனர்ஜியுடன்தான் வெளியேற ஆசைப்படுவேன்” எனக் கூறியிருக்கிறார்.