Published:Updated:

`கேப்டன்ஸி என்பது யாதெனில்..?’ - தோனி சாதனையை முறியடித்தது தொடர்பாக கோலியின் விளக்கம்

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு, அவர்களின் பலவீனம் என்ன என்பது தெரியும். அவர்கள் நாட்டில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்களின் பந்துவீச்சு பலமாகத்தான் இருக்கிறது.

Virat Kohli
Virat Kohli ( AP )

இந்திய அணி, மேற்கிந்தியத்தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என மூன்று தொடர்களையும் கைப்பற்றியது. குறிப்பாக, டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றியது. இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்தத் தொடருக்கான முழுமையான 120 புள்ளிகளைப் பெற உதவியாக இருந்தது.

Virat Kohli
Virat Kohli
AP

இந்த டெஸ்ட் தொடரில், கோலி ஒரு பேட்ஸ்மேனாக ஜொலிக்கத் தவறினாலும், கேப்டனாகப் பல்வேறு சாதனைகளைச் செய்தார். கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக, தோனி முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், அவரை வீழ்த்தி தற்போது முதலிடத்தில் இருக்கிறார், கோலி.

போட்டி முடிந்த பின்னர் பேசிய கோலி, ``மீண்டும் ஒரு சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்துள்ளோம். 4 நாள்களாக சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினோம். ஹனும விஹாரி சிறப்பாக விளையாடினார். இந்த ஆடுகளத்தில், அவர் ஆடிய விதம் சிறப்பானது. அவர் ஆடும்போது, டிரெஸ்ஸிங் ரூமில் எந்தப் பதற்றமும் இல்லாமல் அமைதியாக இருந்தோம். தன் திறமைகளை வளர்த்துக்கொள்ள விரும்பும் வீரர் அவர்.

Virat Kohli
Virat Kohli
AP

அணிக்கு வேண்டியதைச் செய்கிறார். அவர் ஒரு இளம் வீரர். அதனால்தான் அணிக்குத் தேர்வுசெய்யப்பட்டதை அவரது ஆட்டத்தின்மூலம் நியாப்படுத்தியுள்ளார்” என்றார்.

தோனியின் சாதனையை முறியடித்தது தொடர்பாகப் பேசிய கோலி, ``கேப்டனாக அதிக வெற்றியைப் பதிவுசெய்ததற்கு மிகமுக்கியக் காரணம், தரமான அணிதான். தற்போது இருக்கும் தரமான பந்துவீச்சாளர்கள் இந்த அணியில் இல்லாமல் இருந்தால், இந்த வெற்றி சாத்தியம் கிடையாது.

ஷமி, பும்ரா இஷாந்த், ஜடேஜா என எல்லோரும் சிறப்பாகச் செயல்பட்டனர். கேப்டன்ஸி என்றால் நமது பெயருக்கு முன்னால் இருக்கும் `ஸி’ என்ற எழுத்து இருக்கும். அவ்ளோதான். அதைத்தாண்டி, வெற்றி என்பது கூட்டு முயற்சிக்குக் கிடைக்கும் பலன். எங்களைப் பொறுத்தவரை, இது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் தொடக்கம். கடந்த காலம் குறித்துக் கவலை இல்லை. தொடர்ச்சியாக நல்ல கிரிக்கெட்டை விளையாட உள்ளோம்.

Kohli and Team India
Kohli and Team India
AP

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு, அவர்களின் பலவீனம் என்ன என்பது தெரியும். அவர்கள் நாட்டில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்களின் பந்துவீச்சு பலமாகத்தான் இருக்கிறது. பேட்டிங்கில் கொஞ்சம் கவனம் செலுத்தி ரன்கள் சேர்த்துவிட்டால், அவர்கள் நிச்சயம் டெஸ்ட் போட்டிகளில் சவால் அளிக்கும் அணியாகத் தான் இருப்பார்கள்” என்றார் இயல்பாக.