இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்தடுத்து இரு போட்டிகளில் வெற்றிபெற்று இந்திய அணி மாஸ் காட்டியுள்ளது.

இந்திய சுற்றுப்பயணத்தில் சிறப்பான தொடக்கம் கிடைத்தும், தொடரை இழந்தது தொடர்பாக பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச், ``நாங்கள் 300 அல்லது 310 ரன்கள் எடுத்திருந்தால் எங்களின் ஸ்பின் பெளலர்கள் மூலம் கொஞ்சம் அழுத்தம் அளித்திருக்கலாம். முக்கிய கட்டங்களில் ஒரு விக்கெட்டை இழப்பது கூட சிக்கலை ஏற்படுத்தும். அதுவும் இந்தியா போன்ற சிறந்த அணிக்கு எதிராக இழந்தால், அது ஆட்டத்தின் முடிவில் கூட மாற்றங்களை நிகழ்த்தும்” என்றார்.
நேற்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியம். சவாலான இலக்கை சேஸ் செய்ய வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு இருந்தது. தொடக்க ஆட்டக்காரரான தவான், காயம் காரணமாக பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை. மீண்டும் தொடக்க ஜோடியில் மாற்றம். ரோஹித்துடன் ராகுல் களமிறங்கினார். இந்தச் சூழலில் கூலாக விளையாடிய ரோஹித் சதமடித்து இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.

ஆட்டநாயகன் விருதை வென்ற ரோஹித், ``இந்தப் போட்டி முக்கியமானது. தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் டிசைடர் ஆட்டம். ஆஸ்திரேலியா போன்ற பலமான பேட்டிங் லைன் கொண்ட அணியை 290 ரன்களுக்கும் கட்டுப்படுத்துவது என்பது சிறப்பான விஷயம். ராகுல் ஆட்டமிழந்த பிறகு கோலியும் நானும் பார்ட்னர்ஷிப் உருவாக்கினோம். நம் இருவரில் ஒருவர் நின்று ஆட வேண்டும் என்பதை நாங்கள் பேசிக்கொண்டோம். நாங்கள் எங்கள் விக்கெட்டை இழந்திருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். முதல் இரு ஆட்டங்களில் நான் சில புதிய முயற்சிகளைச் செய்தேன். அது கைகொடுக்கவில்லை. இந்தப் போட்டியைப் பொறுத்தவரை நான் இன்று முடித்துக்கொடுக்க வேண்டும் என நினைத்தேன். நடுவில் ரன் ரேட்டை உயர்த்தும் நோக்கில் அடித்து ஆட ஆரம்பித்தேன். அதில் ஒரு பந்தை தவறாக கணித்து ஆடிவிட்டேன் (ஆட்டமிழந்த பந்து)” என்றார்.
இந்திய அணியின் கேப்டன் கோலி, இந்தத் தொடரின் நாயகனாக அறிவிக்கப்பட்டார். தொடரைக் கைப்பற்றிய பிறகு பேசிய விராட், ``நாங்கள் அனுபவம் வாய்ந்த அணிதான். ஆனாலும் தவானின் அனுபவத்தை இந்தப் போட்டியில் நாங்கள் மிஸ் செய்தோம். ராகுல் ஆட்டமிழந்தது கொஞ்சம் மோசமான நிலையை ஏற்படுத்தியது, ஆனால், நல்ல தொடக்கம் கிடைத்திருந்தது என்பதை மறுக்க முடியாது.

எங்கள் பார்டனர்ஷிப்பின் முக்கியத்துவம் குறித்து நானும் ரோஹித்தும் பேசிக்கொண்டிருந்தோம். `ஆஸ்திரேலிய அணிக்கு தேவை எல்லாம் நம் இருவரின் விக்கெட்டுகள்தான். நாம் இருவரும் விக்கெட்டை இழக்காமல் பார்ட்னர்ஷிப் உருவாக்கினால், இறுதியில் ஓவருக்கு 7-8 ரன்கள் தேவைப்பட்டாலும் எளிதாக எடுத்துவிடலாம்’ எனப் பேசிக்கொண்டோம். எங்களின் திறன் மீது நம்பிக்கை இருந்தது. ரோஹித் இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார். எனக்கு முன்பாக அவர் ஆட்டத்தைக் கையில் எடுத்துவிட்டார். எங்கள் இருவரில் ஒருவர் இறுதிவரை நின்று ஆட வேண்டும்.

ஆஸ்திரேலிய அணி கடந்த முறை இருந்ததைவிட இந்த முறை கூடுதல் பலத்துடன் இருந்தது. ஸ்மித், வார்னர், லபுசாங்கே என பேட்டிங் லைன் கூடுதல் பலத்துடன் களம் கண்டது. பந்துவீச்சும் மிகத் தெளிவாக இருந்தது. ஃபீல்டிங் அபாரமாக இருந்தது. இவை அனைத்தையும் எதிர்கொண்டுதான் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும்” என்றார். இந்திய அணி அடுத்து நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடவுள்ளது.