Published:Updated:

`ரோஹித் விலகல்.. நடுவரிசையில் ராகுல்!'- ஒருநாள் தொடரில் ஓப்பனர்களாக களமிறங்கும் அறிமுக வீரர்கள்

விராட் கோலி
விராட் கோலி

``நாங்கள் மிகக் கடினமாக உழைத்தோம். அதற்கான முடிவுகளைதான் இப்போது பார்க்கிறோம். ஒற்றுமையுடன் ஓர் அணியாக நாங்கள் நன்றாக விளையாடுகிறோம்" என்று கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பயணத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில், முதலாவதாக நடைபெற்ற 5 டி20 போட்டிகள் தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. டி20 உலகக் கோப்பை இந்த ஆண்டில் நடைபெற உள்ள நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் இந்த வெற்றியானது மிக முக்கிமானதாகப் பார்க்கப்படுகிறது.

கனே வில்லியம்ஸன், விராட் கோலி
கனே வில்லியம்ஸன், விராட் கோலி

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கோலி, ``நான் கேப்டனாக பொறுப்பேற்றதும், அணியின் எதிர்வினையைப் புரிந்துகொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது. உங்களது வீரர்களை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் சிறிது காலம் ஆகும். எந்த நிலையில் இருந்தாலும் வெற்றிபெற வேண்டும் என்கிற மனநிலை போட்டியின் முதல் நாளிலிருந்தே எங்களிடம் இருந்தது" என்றார்.

மேலும், ``போட்டியில், நாங்கள் 3-0 என்ற நிலையில் இருந்தபோது அணி வீரர்கள் தங்களது தனிப்பட்ட சாதனைகளை நோக்கி விளையாடியிருக்கலாம். ஆனால், தொடரை முழுமையாக 5-0 என்ற கணக்கில் வெல்ல வேண்டும் என அனைவரும் விரும்பினர். எங்களிடம் திறமையான வீரர்கள் உள்ளனர். நாங்கள் மிக கடினமாக உழைத்தோம். அதற்கான முடிவுகளைத்தான் இப்போது பார்க்கிறோம். ஒற்றுமையுடன் ஓர் அணியாக நாங்கள் நன்றாக விளையாடுகிறோம்" என்று கூறினார்.

`அவர்களை அனைவரும் விரும்புகிறார்கள்!’ - `உலகின் தலைசிறந்த வாட்டர் பாய்ஸ்’ உரையாடலைப் பகிர்ந்த கோலி

இந்த 5 நாள் தொடரில் நிறைய மாற்றங்கள் அவ்வப்போது செய்யப்பட்டன. 4-வது போட்டியில் ரோஹித் சர்மா களம் இறங்கவில்லை. கடைசி போட்டியில் கோலி களம் இறங்கவில்லை. கோலிக்குப் பதிலாக ரோஹித் கேப்டனாக இறங்கினார். இவருக்கும் காயம் ஏற்பட இரண்டாவது இன்னிங்ஸில் ராகுல் கேப்டனாக இருந்தார். பன்ட் காயத்தால் நீங்கியது முதல் விக்கட் கீப்பராக செயல்பட்ட ராகுல், கடைசி போட்டியில் கேப்டனாகவும் செயல்பட்டு இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதையும் நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வந்தனர். காயத்திலிருக்கும் ரோஹித் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து விலகியுள்ளார்.

ரோஹித் ஷர்மா - விராட் கோலி
ரோஹித் ஷர்மா - விராட் கோலி
BCCI

இதுதொடர்பாக பேசிய கோலி, ``ஒருநாள் தொடரில் ரோஹித் விளையாட முடியாமல் போனது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அணியில் அவரது முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். இதற்கு மேல் பெரிய ஒருநாள் போட்டித் தொடர்கள் எதுவும் இல்லை என்பதால், அவர் குணமடைந்து அணிக்குத் திரும்புவதற்கு நேரம் இருக்கும். ரோஹித்துக்குப் பதிலாக ப்ரித்வி ஷா போட்டியின் தொடக்க வீரராக களமிறங்குவார். கே.எல்.ராகுல் நடுவரிசையில் களம் இறங்குவார். அவரை நடு வரிசையில் விளையாடுவதற்கும் பழக்கப்படுத்த வேண்டும். ப்ரித்வி ஷா வுடன் மயங்க் அகர்வால் களமிறங்குவார்" என்று பேசியுள்ளார். ப்ரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோருக்கு நாளையை போட்டிதான் அறிமுக ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரித்வி ஷா டெஸ்ட் மற்றும் டி20 ஆட்டங்களில் ஆடியுள்ளார். அகர்வால் டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணிக்காக தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளார்.

சச்சின் சாதனையை கோலி முறியடிக்கலாம்; ஆனால், ரோகித் சாதனையை? - கிரிக்கெட்டின் முரட்டு சாதனைகள்!
அடுத்த கட்டுரைக்கு