Published:Updated:

`இந்தக் கேள்வியை மகி பாயிடம்தான் கேட்க வேண்டும்!’ - கோலி பகிரும் கீப்பிங் அனுபவம்

கோலி தோனி
கோலி தோனி ( AP )

``அந்தச் சம்பவத்துக்குப் பிறகு தோனியின் பணி, எத்தனை சிரமமானது என்பதைத் தெரிந்துகொண்டேன். ஒவ்வொரு பந்திலும் கவனம் இருக்க வேண்டும். கூடவே ஃபீல்டிங்கையும் செட் செய்ய வேண்டும்.” - கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் பேட்டிங் திறன் குறித்து தனியாகக் குறிப்பிட வேண்டியது இல்லை. அது தவிர, அவர் ஒரு பிரமாதமான ஃபீல்டர். களத்தில் அங்கும் இங்கும் வேகமாக, துடிப்புடன் ஓடிக்கொண்டே இருப்பார். ஐ.பி.எல் மற்றும் சர்வதேச போட்டிகளில் சில சமயங்களில் அவரது பந்துவீச்சையும் கவனித்திருப்போம்.

virat kohli, விராட் கோலி
virat kohli, விராட் கோலி

பல்வேறு விஷயங்களைத் திறம்பட செய்யக்கூடிய கோலி, ஒருமுறை சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக ஒரு ஓவர் கீப்பிங் பணியையும் செய்திருக்கிறார். அதுவும் தோனி அணியில் இருக்கும்போதே. கோலியை ஒரு ஓவருக்கு அந்தப் பணியை பார்க்கச் சொன்னது தோனிதான். இந்த நிகழ்வு குறித்த நினைவுகளை மயங்க் அகர்வாலின் கேள்வி மூலம் கோலி பகிர்ந்திருக்கிறார்.

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் கிரிக்கெட் வீரர்களிடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நேர்காணல் செய்து வருகிறார். கோலியுடனான நேர்காணலின்போது பல்வேறு புகைப்படங்களைக் கோலியிடம் காட்டி, அந்த நிகழ்வு குறித்த விஷயங்களைக் கோலியிடம் பகிரச் சொன்னார். அப்போது கோலி கையில் விக்கெட் கீப்பிங் க்ளவுஸ் அணிந்த படி ஃபீல்டிங் செட் செய்வது மாதிரியான படம் குறித்து கேள்வி எழுப்பினார்.

விராட் கோலி
விராட் கோலி

2015-ம் ஆண்டில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தின் 44 ஓவரில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. தோனிக்கு அவசரமாக டிரெஸ்ஸிங் ரூம் செல்ல வேண்டிய சூழல் வந்ததால், அந்த ஓவருக்கு மட்டும் கோலியை கீப்பிங் செய்யச் சொல்லி இருப்பார் தோனி. அடுத்த ஓவரின்போதே தோனி களத்துக்கு திரும்பி விடுவார். கோலி அதன் பின்னர் வழக்கமான இடத்திலே ஃபீல்டிங் செய்வார்.

`தேசபக்தரான கோலி, அனுஷ்கா ஷர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும்! -பா.ஜ.க எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை

இந்த சம்பவம் குறித்துப் பேசிய கோலி, ``நான் கீப்பிங் செய்யும் நிலை ஏன் ஏற்பட்டது என, நீங்கள் மகி பாயிடம்தான் கேட்க வேண்டும். அவர்தான் என்னிடம் வந்து, `இரண்டு ஓவர்கள் கீப்பிங் பணியைக் கவனித்துக்கொள்ள வேண்டும்’ எனக் கேட்டார். அதனால்தான் கீப்பிங் பணியையும் ஃபீல்டிங்கை சரி செய்யும் பணிகளையும் செய்தேன்” என்றார்.

கோலி, புஜாரா
கோலி, புஜாரா
AP

தொடர்ந்து பேசிய கோலி, ``அந்தச் சம்பவத்துக்குப் பிறகு தோனியின் பணி, எத்தனை சிரமமானது என்பதைத் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு பந்திலும் கவனம் இருக்க வேண்டும். கூடவே ஃபீல்டிங்கையும் செட் செய்ய வேண்டும். நான் கீப்பிங் செய்யும்போது என்ன சிக்கல் என்றால், உமேஷ் யாதவ் அந்த ஓவரை வீசினார். பந்து தாறுமாறாக வந்தது. பந்து எனது தலையைத் தாக்கிவிடும் என்ற அச்சமும் இருந்தது. ஹெல்மெட் அணியலாம் என்று கூட தோன்றியது” என்றார்.

கோலி
கோலி
AP

தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் குறித்து பேசிய கோலி, ``எப்போதும் டெஸ்ட் போட்டிகளில் டிரா செய்வதை நான் விரும்புவதில்லை. முடிந்தவரை வெற்றி பெறவே முயல்வேன். கடைசி நாளில் 300 ரன்கள் தேவை என்றால், ஒரு செஷசனில் 100 ரன்கள் எடுத்தாலே போதும் என்பேன். விக்கெட் மீதம் இருந்தால் கடைசி செஷசனில் கூடுதல் ரன்கள் தேவைப்பட்டாலும் ஒருநாள் போட்டியைப் போல் அடித்து ஆடலாம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு