Published:Updated:

ரோஹித் இல்லை... பவர்ப்ளேவில் வாஷிங்டனுக்கு ஓவரே இல்லை... கோலியின் புரியாத புதிர்கள்! #INDvENG

கோலி #INDvENG

அதிகமுறை டக் அவுட்டான இந்தியக் கேப்டன் எனும் விரும்பத்தகாத ரெக்கார்டையும் நேற்று விராட் கோலி படைத்தார்.

Published:Updated:

ரோஹித் இல்லை... பவர்ப்ளேவில் வாஷிங்டனுக்கு ஓவரே இல்லை... கோலியின் புரியாத புதிர்கள்! #INDvENG

அதிகமுறை டக் அவுட்டான இந்தியக் கேப்டன் எனும் விரும்பத்தகாத ரெக்கார்டையும் நேற்று விராட் கோலி படைத்தார்.

கோலி #INDvENG

அச்சமற்ற அட்டாக்கிங் ஆட்டம் ஆட இருக்கிறோம் எனும் பெயரில், ஒரு பொறுப்பற்ற ஆட்டத்தை ஆடியதன் விளைவாக, முதல் டி20 போட்டியில் தோல்வியைத் தழுவியிருக்கிறது இந்தியா.

2018-க்குப் பிறகு எந்த டி20 தொடரிலும் தோற்றதில்லை என்னும் கெத்தோடும், டி20-ல் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் வீரர்களுடனும், இங்கிலாந்து களம்காண, இதே அகமதாபாத்தில் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் தந்த வெற்றி நினைவுகளோடு இந்தியாவும் களமிறங்கியது.

டாஸை இங்கிலாந்து வெல்ல, எதிர்பார்த்ததைப் போலவே பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தார் அதன் கேப்டன் இயான் மார்கன். பேட்டிங்கிற்கு பிட்ச் ஒத்துழைக்கும் என்றாலும், பனிப்பொழிவு மார்கனை சேஸிங்கைத் தேர்ந்தெடுக்கத் தூண்டியது. போட்டிக்கு முந்தைய நாள் பிரஸ் மீட்டில் கோலி, ரோஹித்-ராகுல் ஓப்பனர்களாகக் களமிறங்குவார்கள் என்று கூறியிருந்தார். ஆனால், அதில் சர்ப்ரைஸ் ட்விஸ்ட்டாக ரோஹித்துக்கு பதிலாக, தவானைக் களமிறக்கியது இந்தியா. தொடரில் முதல் போட்டியில், நம்பிக்கையோடு தொடங்க வேண்டிய நேரத்தில், இந்த விபரீதப் பயிற்சி தேவையா என்பதே அனைவரின் கேள்வியாகவும் இருந்தது.

இருபக்கமும், மற்ற அத்தனை வீரர்களின் தேர்வும் ஓரளவு கணித்ததைப் போலவே இருந்தது. எனினும், ரோஹித், இஷான், சூரியக்குமார் யாதவ் என ஒரு மினி மும்பை இந்தியன்ஸ் அணியே, வெளியே உட்கார வைக்கப்பட்டிருந்தது.

ரோஹித் இல்லாமல் போனதால், வேகப்பந்து வீச்சோடு தொடங்கும் சூத்திரத்தை மாற்றி, ஆதில் ரஷித்தின் சுழலுடன் தொடங்கியது இங்கிலாந்து. இங்கேயே தொடங்கி விட்டது, இந்தியாவின் வீழ்ச்சி. பவர்ப்ளே ஓவர்களில், அதிரடியாக ரன்கள் சேர்ப்பதே, ஓப்பனர்களின் வேலை என்பதை மறந்து, இரண்டாவது ஓவரிலேயே, ஆர்ச்சரின் வேகத்தில் வீழ்ந்தார் ராகுல். ஃபுட்வொர்க் என்று ஒன்று இருக்கிறதென்பதையே மறந்து, மிக மோசமான முறையில், ஒரு ரன்னோடு ஆட்டமிழந்தார் ராகுல்.

அடுத்ததாகக், களமிறங்கிய கோலியை ஆர்ச்சர் இரண்டு ஷார்ட் பால் போட்டு சோதிக்க, அவரது பேட்டிங் பலவீனமான லெக் ஸ்பின்னை வைத்தே விக்கெட்டைத் தூக்கியது இங்கிலாந்து. ரஷித் பந்தில் லாங் ஆஃப்பில் தூக்கியடிக்க முயல, பந்து நேராக ஜோர்டன் கைகளுக்குச் சென்றடைந்தது. ரெட்பால் கிரிக்கெட்டில்தான் அவரது ஃபார்ம் கேள்விக்குறியாகிவிட்டது என்றால், லிமிடெட் ஓவர்களிலும் அது தொடர்வதுதான், இந்தியாவை மிகப்பெரிய இக்கட்டில் ஆழ்த்துகிறது. அதிகமுறை டக் அவுட்டான இந்தியக் கேப்டன் எனும் விரும்பத்தகாத ரெக்கார்டையும் நேற்று கோலி படைத்தார்.

ஆர்ச்சர் #INDvENG
ஆர்ச்சர் #INDvENG
Aijaz Rahi

அடுத்ததாக ஷ்ரேயாஸுக்கு பதிலாக உள்ளேவந்த பன்ட்டின் மீதுதான், அத்தனை கண்களும் இருந்தன. சந்தித்த ரஷீத்தின் மூன்றாவது பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார் அவர். அதற்கடுத்ததாக வந்த ஆர்ச்சரின் ஓவரில் ஐந்தாவது பந்தை நம்பவே முடியாத வகையில் ரிவர்ஸ் ஸ்வீப் மூலமாக, சிக்ஸருக்குத் தூக்கினார் பன்ட். "நேற்று ஆண்டர்சன், இன்று ஆர்ச்சர் நாளை யாரோ?!" என பயமுறுத்தும் பௌலர்களையே அச்சுறுத்தும் வேலையைச் சிறப்பாகச் செய்கிறார் பன்ட்.

பன்ட் அதிரடியாக ஆடிக்கொண்டிருக்க மறுமுனையில் இருந்து பொறுப்பாக ஆடவேண்டிய தவானோ மார்க் உட், பந்தில் மிட்விக்கெட் திசையில் ஷாட்டுக்குப் போகிறேன் என்று பேட்டை வீச, க்ளீன் போல்டாகி அதிர்ச்சி தந்தார். இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் மோசமான ஷாட் மூலமாக ஆட்டமிழந்ததுதான் வருத்தத்திற்குரிய விஷயம் என்றால், இந்திய டி20 வரலாற்றில், இந்திய டாப்3 பேட்ஸ்மேன்களும், 5 ரன்களுக்குக்கீழ் எடுத்து ஆட்டமிழப்பது இதுவே முதல்முறை.

பவர்ப்ளே ஓவர்களின் முடிவில் இந்தியா 22/3 என அதிர்ச்சி தந்தது. பவர்ப்ளே ஓவர்களில், இந்தியாவின் இரண்டாவது மோசமான ஸ்கோர் இது.

தவானுக்கு அடுத்தபடியாக உள்ளே வந்திருந்த ஷ்ரேயாஸின் ஆட்டம் ஆரம்பத்தில் இருந்தே அமர்க்களமாக இருந்தது. உட்டின் பந்தில் தனது பவுண்டரி கணக்கைத் தொடங்கிய ஷ்ரேயாஸ், ஷாட்களைத் தேர்ந்தெடுத்தல், மோசமான பந்துகளைத் தண்டித்தல், கேப்பைக் கண்டுபிடித்து அதில், பந்தை பவுண்டரி லைனுக்கு பார்சல் செய்தல் ஆகியவற்றைச் சிறப்பாகச் செய்தார். மறுபுறம், ஸ்டோக்ஸின் பந்தில் விழுந்த பன்ட்டின் விக்கெட்கூட அவரது ஆட்டத்தை பாதிக்கவில்லை. சூர்யக்குமாரை புறம் தள்ளி, ஷ்ரேயாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள் எல்லாவற்றையும், தனது அற்புதமான ஆட்டத்தால் தூள்தூளாக்கிக் கொண்டிருந்தார் ஷ்ரேயாஸ்.

இன்னொரு முனையில் பாண்டியாவும், ஸ்டோக்ஸ் பந்தில், பேக் டு பேக் சிக்ஸர் மற்றும் பவுண்டரியினால் நம்பிக்கை அளிக்க, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சாதிக்கத் தவறியதை, இந்த பவர் ஹிட்டர்கள் ஈடுகட்டுவார்கள் என்ற எண்ணம் எழ, 36 பந்துகளில், அரைச் சதத்தைக் கடந்து ஷ்ரேயாஸ் அசத்திக் கொண்டிருந்தார். எனினும் செட்டில் ஆகி ஆடிக் கொண்டிருந்த பாண்டியா, ஆர்ச்சர் வீசிய ஷார்ட் பாலை, மிட் ஆஃபில் அனுப்பியபோது,ஜோர்டனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, 102/5 என்ற கணக்கில் இருந்தது இந்திய ஸ்கோர்.

சுந்தர் - பேர்ஸ்டோ #INDvENG
சுந்தர் - பேர்ஸ்டோ #INDvENG

இதனை அடுத்து உள்ளே வந்த தாக்கூரை, கோல்டன் டக் ஆக்கிய ஆர்ச்சர், போட்டியில் தன்னுடைய மூன்றாவது விக்கெட்டை வீழ்த்தினார்‌. கடைசி ஓவரில், ஷ்ரேயாஸை, டீப் ஸ்கொயர் லெக்கில் நின்றிருந்த மலான், ஓடிவந்து பிடித்த ஒரு அற்புதமான கேட்ச் மூலமாக வெளியேற்ற, கடைசியில், 20 ஓவரில், 124/7 என முடித்தது இந்தியா.

மலானின் அற்புதமான கேட்ச், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் திட்டமிட்ட துல்லியமான பந்துவீச்சு, பன்டின் ரிவர்ஸ் ஸ்வீப் என பல ஹைலைட்டுகள் ஆட்டத்தின் முதல் பாதியில் இருந்தாலும், எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டது ஷ்ரேயாஸிடமிருந்து வந்த அற்புதமான 67 ரன்கள்தான்‌. இந்தியாவின் மொத்த ரன்களில், 50 விழுக்காட்டுக்கும் அதிகமான ரன்கள் அவரது பேட்டில் இருந்து வந்ததுதான்.

125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன், ராய் மற்றும் பட்லருடன் தனது இன்னிங்ஸைத் தொடங்கியது இங்கிலாந்து. பும்ரா, ஷமி, நடராஜன் உள்ளிட்ட வீரர்களின் மிரட்டல் பந்துவீச்சு இல்லாத நிலையில், இந்தியாவின் பௌலிங் யூனிட் முழுமை அடையாததைப் போன்றே இருந்தது. அதை நிரூபிப்பதைப் போல, அமர்க்களமான ஆட்டத்தை ஆடத் தொடங்கினர் இங்கிலாந்து ஓப்பனர்கள். அக்ஸருடன் தொடங்கிய கோலி, அதற்கடுத்ததாக ஓவருக்கொருவர் என, புவனேஷ்வர், சஹால், தாக்கூர் என ஒவ்வொருவராய் முயற்சித்துப் பார்த்தார். ஆனால் கொஞ்சமும் அசராத இந்த இருவரணி, பவர்ப்ளே ஓவர்களிலேயே ஐம்பது ரன்களைச் சேர்த்து விட்டது‌. அக்ஸர் பட்டேல் முதல் ஓவரில் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த நிலையில், அதற்கு அடுத்த ஓவரை, அவருக்குக் கொடுக்காமல் பௌலர்களை மாற்றிக்கொண்டே இருக்க, ரன்கள் வந்துகொண்டே இருந்தன.

#INDvENG
#INDvENG
Aijaz Rahi

பவர்ப்ளே ஓவர்களில் பந்து வீசவே வளர்த்தெடுக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தரை, கோலி முதலிலேயே கொண்டு வராமல் போனதும் அவரது கேப்டன்ஷிப்பின் மீது கேள்வியை எழுப்பியது. இறுதியில், எட்டாவது ஓவரின் இறுதிப்பந்தில், சஹால், பட்லரின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனான மலான் உள்ளே வர, அவரை வீழ்த்தும் நோக்கத்தோடு, பாண்டியாவை உள்ளே கொண்டு வந்தார் கோலி. அவர் எதிர்நோக்கிய அதிசயம் எதுவும் நிகழாமல் போக, அதற்குப்பின் 12-வது ஓவரில் சுந்தரைக் கொண்டு வந்தார் கோலி. வீசிய முதல் பந்திலேயே, ராயின் விக்கெட்டை எல்பிடபிள்யூவில் வீழ்த்தினார் சுந்தர். ரோஹித்துக்கு ஓய்வளித்ததைப் போலவே, சுந்தரைத் தாமதமாக உள்ளே கொண்டு வந்ததும், இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மலானுக்கான ஒரு டைரக்ட் ஹிட் ரன் அவுட் வாய்ப்பை தாக்கூர் தவறவிட, இறுதியில், சுந்தரின் ஓவரில், வின்னிங் ஷாட்டாக சிக்ஸரைத் தூக்கி, எடுக்க வேண்டிய ரன்னை விடவும் ஐந்து ரன்களைக் கூடுதலாகவே அடித்து அணியை வெல்ல வைத்தார் மலான். எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. தாங்கள் ஏன் சாம்பியன் அணி என்பதையும் நிரூபித்து இருக்கிறது இங்கிலாந்து.

வீரர்கள் தேர்வு, டாப் ஆர்டர் பேட்டிங் சொதப்பல் ஆகியவை முதல் பாதியில் குறைபாடாக வெளிப்பட, மிரட்டும் பௌலர்கள் இல்லாமல் போனதன் காரணமாக, குறைந்த இலக்கை டிஃபெண்ட் செய்ய முடியாமல் தோல்வியைத் தழுவியது இந்தியா. முதல் போட்டியில் தோற்பதும், அதிலிருந்து மீண்டு வந்து, தொடரை வெல்வதும்தானே இந்தியாவின் சமீபத்திய வரலாறு. 1/0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கும் இந்தத் தொடரையும், இந்தியா மீண்டு வந்து, கைப்பற்றும் என்னும் நம்பிக்கையோடு நாளை இரவு வரை காத்திருப்போம்.