Published:Updated:

``அவர் என்ன உங்களுக்கு ஈஸி டார்கெட்டா..?”- அனுஷ்கா மீதான விமர்சனத்துக்கு பதிலடிகொடுத்த கோலி

ஒருவரின் அமைதியை நீங்கள் பலவீனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. கடைசியாக ஒன்றை இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன். நான் காபி தான் குடிப்பேன்

விராட் கோலி, அனுஷ்கா சர்மா
விராட் கோலி, அனுஷ்கா சர்மா

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் தோற்று வெளியேறியது. இந்நிலையில் கோலி, முன்னாள் வீரர் ஃபரூக் இன்ஜினியர், அனுஷ்கா ஷர்மா தொடர்பான விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

அனுஷ்கா சர்மா!
அனுஷ்கா சர்மா!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, இந்தியத் தேர்வுக் குழுவினர் கேப்டன் விராட் கோலியின் மனைவிக்குத் தேநீர் ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தனர் எனக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார், முன்னாள் வீரர் ஃபரூக் இன்ஜினியர். புனேயில் ஒரு நிகழ்ச்சியில் பேசியவர், ``தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத்தைத் தவிர, அந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களை யாருக்கும் தெரியாது. அவர்கள், குறைந்த போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர்.

உலகக்கோப்பை போட்டியின்போது எனக்கு தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவரை யார் என்றே தெரியவில்லை. நான், அவர் யார் எனக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஏனென்றால், அவர் இந்திய அணியின் கோட் அணிந்திருந்தார். நான், தேர்வுக்குழு உறுப்பினர் எனப் பதிலளித்தார். இவர்கள் எல்லாம், அனுஷ்கா ஷர்மாவுக்கு டீ ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள் என்று பேசியிருந்தார்.

விராட் கோலி
விராட் கோலி

இந்த விவகாரம் தொடர்பாக அனுஷ்கா ஷர்மா, ``என்னுடைய பெயர் தவறாக சித்திரிக்கப்படுகிறது. உலகக்கோப்பை போட்டியின்போது எனக்குத் தேர்வாளர்கள் டீ கொடுத்தார்கள் எனப் புதிய கதை கட்டப்படுகிறது. உலகக்கோப்பைத் தொடரின் போது, நான் ஒரு போட்டியை மட்டுமே மைதானத்தில் நேரில் வந்து பார்த்தேன். நான் தேர்வாளர்கள் அறையிலிருந்து பார்க்கவில்லை. குடும்பத்தினர் அமர்ந்து பார்க்கும் இடத்திலிருந்துதான் பார்த்தேன்.

`அமைதியா இருக்கேன் பலவீனமா இல்ல’ - ட்விட்டரில் லெப்ட் ரைட் வாங்கிய அனுஷ்கா ஷர்மா!

உங்களுக்குத் தேர்வாளர்கள் குறித்து விமர்சிக்க வேண்டும் என்றால் தாராளமாகச் செய்யுங்கள். எதற்காக என்னுடைய பெயரைத் தேவையில்லாமல் பயன்படுத்துகிறீர்கள். ஒருவரின் அமைதியை நீங்கள் பலவீனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. கடைசியாக ஒன்றை இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன். நான் காபி தான் குடிப்பேன்” எனக் காட்டமாகப் பதிலளித்திருந்தார்.

அனுஷ்கா ஷர்மா..!
அனுஷ்கா ஷர்மா..!

எனினும் விராட் கோலி, இந்த விவகாரம் தொடர்பாக எதுவும் பேசாமல் இருந்துவந்தார். இந்நிலையில், இந்தியா டுடே ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், இந்த விவகாரம் தொடர்பாக முதல் முதலாகப் பேசினார். அப்போது அவர், ``அனுஷ்கா எப்போதுமே விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்பட மாட்டார். ஆனாலும் பலர் அவரை பிரச்னைக்குள் கொண்டுவருகிறார்கள். அனைவருக்கும் அவர் ஒரு எளிமையான டார்கெட்டாக இருக்கிறார் என நினைக்கிறேன்.

பொய்களைத் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டே இருந்தால், அது உண்மையாகவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் ஒரு கட்டத்தில் அது தொடர்பாகப் பேசவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. உலகக்கோப்பை தொடரைப் பொறுத்தவரை அனுஷ்கா, இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தை ஃபேமிலி பாக்ஸில் அமர்ந்து பார்த்தார். தேர்வாளர்கள் அறை என்பது வேறு. மேலும், ஃபேமிலி அறையில் எந்த தேர்வுக்குழு உறுப்பினர்களும் இல்லை.

கோலி, அனுஷ்கா
கோலி, அனுஷ்கா

போட்டியை அவர், அவரது நண்பர்களுடன் பார்க்க வந்திருந்தார். அவர் தனது திறமையால் உச்சம் தொட்டிருக்கிறார். அதனால் அவரது பெயரைச் சொன்னால் அதிகம் கவனிக்கப்படும் விவகாரம் ஆகிவிடுகிறது. தேர்வுக்குழுவினர் தொடர்பாக கருத்துச் சொல்ல வேண்டும் என்றால் தாராளமாகச் சொல்லலாம். அதில் தவறேதும் இல்லை. ஆனால், அதில் அனுஷ்கா பெயரை ஏன் இணைத்துப் பேச வேண்டும்?

நாங்கள் வீதிக்குச் சென்று, வேண்டுமென்றே இந்த விவாதத்தை தொடங்கிவைக்கவில்லை. எங்களுக்கு எதிராகப் பொய்கள் பரப்பப்படும்போது, அது தொடர்பாகப் பேசாமல் இருக்க முடியாது” என்று காட்டமாகப் பதிலளித்தார்.