Published:Updated:

அதிகரித்த ஸ்ட்ரெயிட் டிரைவ்... எஸ்கேப் ஸ்லிப்... கோலியின் புதிய மாஸ்டர் கிளாஸ்!

Virat Kohli
Virat Kohli ( AP )

எந்த பவுலர் ஃபுல் லென்த்தில் வீசினாலும், கோலியின் கை ஸ்ட்ரெயிட் டிரைவ் ஆடிக்கொண்டே இருந்தது. தனது 26-வது சதத்தையும் ஃபிலாண்டர் பந்தில் ஸ்ட்ரெயிட் டிரைவ் ஆடியே எடுத்தார் விராட். நேற்று மட்டும் எட்டுக்கும் மேற்பட்ட ஸ்ட்ரெயிட் டிரைவ் பவுண்டரிகள் அடித்திருப்பார்.

10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம் அடிக்கவில்லை. அவ்வளவுதான். அதற்குள் நம்ம ரசிகர்கள் 'கோலி பார்ம் அவுட் ஆயிட்டார், முன்ன இருந்த வேகம் இல்ல, பழைய பாய்ச்சல் இல்ல' என்று கிளம்பிவிட்டார்கள். களமிறங்கும் ஒவ்வொரு முறையும் கோலி சதமடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் நம் ரசிகர்கள். சில காலம் அது நடக்கவில்லையா, உடனே ஆதங்கம் விமர்சனமாகக் கொட்டிவிடுகிறது. வெஸ்ட் இண்டீஸில் பும்ரா ஒன் மேன் ஷோ நடத்த, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் அகர்வால், ரோஹித் இருவரும் பட்டையைக் கிளப்ப, மறுபக்கம் அஷ்வின், ஷமி போன்றவர்களும் அசத்த, கிட்டத்தட்ட கோலி மீது எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல்தான் புனே டெஸ்ட் போட்டி தொடங்கியது. ஆனால், இந்த முறை அனைவரின் பார்வைகளையும் மீண்டும் ஆக்கிரமித்துக்கொண்டார் விராட்!

முதல் நாள் களம் இறங்கிய கோலி, அவசரம் காட்டவில்லை. பொறுமையாக விளையாடி அரை சதம் அடித்தவர், எந்தச் சூழ்நிலையிலும் அவுட் ஆகாமல் பார்த்துக்கொண்டார். இரண்டாம் நாள் காலை, மிகவும் நேர்த்தியான லைன் அண்ட் லென்த்தில் வீசி தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் கடும் சோதனை கொடுத்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான வாசகம் உண்டு - 'முதல் 1 மணி நேரம் பவுலர்களை மதித்து ஆடினால், பின் வரும் 6 மணி நேரம் நீ உன் ஆட்டத்தை ஆடலாம்.' முதல் 1 மணி நேரம் பவுலர்களை மதித்து ஆட வேண்டும். தரமான பந்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ரன்களுக்கு ஆசைப்பட்டு தவறான ஷாட்கள் ஆடிடக் கூடாது. ஷைனிங்காக இருக்கும் சிவப்புப் பந்து மிகவும் ஆபத்தானது. எக்கச்சக்க சோதனைகள் கொடுக்கும்.

Virat Kohli
Virat Kohli
AP

கோலிக்கும் இதே சோதனைகள் தென்னாப்பிரிக்க பவுலர்கள் ரூபத்தில் கொடுக்கப்பட்டது. நிறைய பந்துகள் எட்ஜ் வாங்கி ஸ்லிப் ஏரியாவுக்குச் சென்றது. கோலி 'soft bottom hand' டெக்னிக்கை பயன்படுத்தியதால் பந்து ஸ்லிப் ஃபீல்டர்களின் கைகளுக்கு செல்லாமல் முன்னாலேயே பிட்சாகியது. இப்படி மூன்று முறை நடக்க, சுதாரித்துக்கொண்டு தன் கைவரிசையைக் காட்டத்தொடங்கினார் கோலி.

ரபாடா வீசிய ஃபுல் லென்த் பாலை, ஸ்ட்ரெயிட் டிரைவ் ஆடி பவுண்டரி அடித்துவிட்டு 'என்னமா கண்ணு யார்கிட்ட உன் வேலையைக் காட்டுற' என்பதுபோல் பார்ப்பார் விராட். ரீப்ளேவில் பார்ப்பதற்கு அவ்வளவு அட்டகாசமாக இருந்தது. அடுத்து எந்த பவுலர் ஃபுல் லென்த்தில் வீசினாலும், கோலியின் கை ஸ்ட்ரெயிட் டிரைவ் ஆடிக்கொண்டே இருந்தது. தனது 26-வது சதத்தையும் ஃபிலாண்டர் பந்தில் ஸ்ட்ரெயிட் டிரைவ் ஆடியே எடுத்தார் விராட். ரபாடா, ஃபிலாண்டர் பந்துகளில், நேற்று மட்டும் எட்டுக்கும் மேற்பட்ட ஸ்ட்ரெயிட் டிரைவ் பவுண்டரிகள் அடித்திருப்பார்.

Virat Kohli
Virat Kohli
AP

முதல் செஷன் முடிவில் 104 ரன்கள் என இருந்த கோலி அதன்பின் தன் வேகத்தைக் கூட்டினார். நாலா பக்கமும் அடிக்க ஆரம்பித்தார். 143 ரன்களில் இருக்கும்போது, கேஷவ் மஹராஜ் பந்தில் ஸ்லிப் திசை நோக்கி ஆடுவார். ஆனால், அதை டு பிளெஸ்ஸி பிடிக்க தவற, அடுத்த 3 பவுண்டரிகளும் அந்த ஸ்லிப் திசை நோக்கியே செல்லும். டு பிளெஸ்ஸி இடது கை பக்கம் ரெடியாக இருக்கும் போது பந்தை வலது கை பக்கம் அடிப்பார் அதே மாதிரி டூ பிளெஸ்ஸிஸ் வலது கை பக்கம் ரெடியாக இருக்கும்போது இடது கை பக்கம் அடித்து கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டினார். இரண்டாவது செஷன் முடிவில் 194 ரன்கள் அடித்து தெம்பாக டீ பிரேக்குக்கு செல்வார். ஒரே செஷனில் 90 ரன்கள்!!

3-வது செஷன் தொடங்கிய சிறிது நேரத்தில் முத்துசாமி போட்ட பந்தில் ஃபைன் லெக் திசையில் 2 ரன்கள் அடித்து, 7-வது முறையாக 200 ரன்கள் எடுத்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். கூடவே 7,000 ரன்களையும் கடந்தார் இந்தச் சாதனை மன்னன். அதோடு தன் ரன் வேட்டையை விடவில்லை. வண்டியை டாப் கியரில் ஏற்றி மின்னல் வேகத்தில் ஆட ஆரம்பித்து 254 ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்தார்.

Virat Kohli
Virat Kohli
AP

கிட்டத்தட்ட 3.5 செஷன்கள் ஆடி 254 ரன்கள் அடித்த கோலி 77 சிங்கள் ரன்கள் ஓடி எடுத்தார். 33 பவுண்டரிகள். அதிலும் பெரும்பான்யானவை 'கிரவுண்ட் ஷாட்ஸ்' எனப்படும் தரையோடு அடித்த பவுண்டரிகளாகும். டெஸ்ட் கிரிக்கெட்டை எந்த அளவுக்கு மதித்தால் இவ்வளவு தீர்க்கமாக ஆட முடியும். இதுக்காகவே கோலிக்கு ஒரு பெரிய சல்யூட் அடிக்கலாம்.

கோலி நேற்று மட்டும் படைத்த சாதனைகள்

கேப்டனாக 9 முறை 150+ ரன்கள் அடித்து உலக சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு முன் டான் ப்ராட்மேன் 8 முறை அடித்ததே சாதனையாக இருந்தது .
7-வது முறையாக 200 ரன்கள் எடுத்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்தார்
கேப்டனாக 40 சதங்கள் (ஒருநாள் 19, டெஸ்ட் 21 ) அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். பாண்டிங் அடித்த 41 சதங்களே உலக சாதனையாக உள்ளது. அதையும் இந்த வருடத்திலேயே கடந்துவிடுவார் .
254 ரன்கள் அடித்து. கேப்டனாக ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற தன் முந்தைய சாதனையை (243 ரன் ) தானே உடைத்துள்ளார்.
6,868 ரன்களை கடந்தபோது திலிப் வெங்சர்காரை முந்தி இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் 7-வது இடத்துக்குச் சென்றுள்ளார் .

சாதனைகளை நோக்கி கோலி ஓடுகிறாரா இல்லை கோலியின் பின்னால் சாதனைகள் ஓடுகின்றனவா என்றுதான் தெரியவில்லை. எதுவாயினும் நன்மை இந்திய அணிக்கே.

அடுத்த கட்டுரைக்கு