உலகப் புகழ் பெற்ற `விஸ்டன் கிரிக்கெட்', சிறந்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இன்னும் இரு தினங்களில் 2020 என்னும் புத்தாண்டை மக்கள் வரவேற்கத் தயாராக உள்ள நிலையில், பலரும் கடந்த 10 ஆண்டுகளை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், விஸ்டன் நிறுவனமும் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த 5 கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய அணி விரர் கோலிதான். ஸ்டீவ் ஸ்மித், டேல் ஸ்டெயின், டி வில்லியர்ஸ், எல்ஸி பெர்ரி ஆகியோர் மற்ற 4 வீரர்கள் ஆவர்.
கடந்த 10 ஆண்டுக்கான ஒருநாள் அணியிலும் கோலி இடம் பிடித்திருந்தார். அந்த அணியில் தோனி, ரோஹித் ஆகியோரும் இடம்பிடித்திருந்தனர். இந்த நிலையில், தற்போது கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 அணியை விஸ்டன் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கோலி இடம் பெற்றுள்ளார். ஆனால், அவருக்கு கேப்டன் பதவி தரப்படவில்லை.

10 ஆண்டுகளில் சிறந்த டி20 அணியை ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் வழிநடத்துவார் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரும் பின்ச்தான். மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக நியூசிலாந்து அணியின் காலின் முன்ரோ இருக்கிறார். மூன்றாவது வீரராக இந்திய அணியின் கேப்டன் கோலி இடம்பிடித்துள்ளார். அவரது நிலையான ஆட்டம் காரணமாக இந்த இடம் அவருக்குக் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த வீரராக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன், மேக்ஸ்வெல் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர் இடம் பிடித்துள்ளார். அடுத்த இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் நபி, இங்கிலாந்து அணியின் டேவிட் வில்லி ஆகியோர் உள்ளனர்.

மேலும் ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்டார் ரஷித் கான் ஸ்பின்னராக இடம் பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சை இந்திய அணியின் பும்ரா மற்றும் மலிங்கா ஆகியோர் கவனித்துக் கொள்வார்கள். 2016-ம் ஆண்டில்தான் பும்ரா அறிமுகம் ஆயிருந்தாலும் பும்ரா தனது திறமையால் இந்த அணியில் இடம் பிடித்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.