Published:Updated:

"எனது இக்கட்டான சூழலில் தோனி அனுப்பிய அந்த மெசேஜ் என்ன தெரியுமா?"- ரகசியத்தைச் சொன்ன விராட் கோலி

தோனி, விராட் கோலி

தான் ஃபார்மில் இல்லாமல் இருந்தபோது தோனி தன்னிடம் ஆறுதல் கூறி மெசேஜ் அனுப்பியது குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி.

"எனது இக்கட்டான சூழலில் தோனி அனுப்பிய அந்த மெசேஜ் என்ன தெரியுமா?"- ரகசியத்தைச் சொன்ன விராட் கோலி

தான் ஃபார்மில் இல்லாமல் இருந்தபோது தோனி தன்னிடம் ஆறுதல் கூறி மெசேஜ் அனுப்பியது குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி.

Published:Updated:
தோனி, விராட் கோலி

கடந்த செப்டம்பர் மாதம் ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே நடைபெற்ற பரபரப்பான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. அப்போட்டியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விராட் கோலி அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்தார்.

அப்போது விராட், "நான் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது தோனி மட்டுமே என்னிடம் ஆறுதலாகப் பேசினார். அந்தச் சமயத்தில் வேறு யாரும் என்னைத் தொடர்பு கொண்டு பேசவில்லை. என்னுடைய நம்பர் எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் தோனி மட்டுமே எனக்கு மெசேஜ் அனுப்பினார்" என்று தோனி பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார். அப்போதே தோனி அனுப்பிய அந்த மெசேஜ் என்னவாக இருக்கும் என்பதே பலரின் கேள்வியாக இருந்தது.

விராட் கோலி, தோனி
விராட் கோலி, தோனி

இதையடுத்துத் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி, தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்திலிருந்த இலங்கை கிரிக்கெட் வீரரான மஹேலா ஜெயவர்தனேயின் சாதனையை முறியடித்திருக்கிறார்.

விராட் கோலியின் இந்த அதிரடி ஆட்டங்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தையும் சுக்கு நூறாக்கியுள்ளது. இந்நிலையில் மீண்டும் தோனியை நினைவுகூர்ந்து, தான் ஃபார்மில் இல்லாமல் இருந்தபோது தோனி அனுப்பிய அந்த மெசேஜைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் விராட் கோலி.

இது பற்றி 'RCB Podcast' என்னும் ஒலிநாடாவில் பேசிய விராட் இவ்வாறு கூறிருந்தார். "எனது இக்கட்டான சூழலில் என்னைத் தொடர்பு கொண்டு பேசிய ஒரே நபர் தோனி. அதுமட்டுமின்றி எனக்கு சீனியராக இருக்கும் அவர் என்னிடம் இவ்வளவு நெருக்கமான நட்புடன் பழகுவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவருக்கும் எனக்குமான நட்பு என்பது மிகுந்த மரியாதைக்குரிய ஒன்று.

என்னிடம் அன்று பேசிய தோனி, "வலிமையானவராக நீங்கள் இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கும்போது, உறுதியான மனிதராகவும் நீங்கள் தோற்றமளிக்கும்போது, `நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்' என்பதைப் பற்றிக் கேட்க அனைவரும் மறந்துவிடுவார்கள்" என்று கூறினார்.
விராட் கோலி
விராட் கோலி

அது என்னை நிறையவே சிந்திக்க வைத்தது. நான் எப்போதுமே மிகவும் தன்னம்பிக்கை உள்ளவனாக, மிகவும் மனவலிமை உள்ளவனாக, எந்தச் சூழ்நிலையையும் சகித்துக்கொண்டு இருப்பவனாகப் பார்க்கப்படுகிறேன். இந்நிலையில் ஏதோவொரு கட்டத்தில் நீங்கள் கொஞ்சம் உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கவேண்டும். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்" என்று கூறினார்.