Election bannerElection banner
Published:Updated:

கிழிந்த பந்தா... உருக்குலைந்த சேப்பாக்கம் பிட்ச்சா... முதல் டெஸ்ட் தோல்விக்குக் காரணம் என்ன?!

சேப்பாக்கம் பிட்ச்சில் இந்திய பெளலர்கள்
சேப்பாக்கம் பிட்ச்சில் இந்திய பெளலர்கள்

வெளிநாடுகளில் கொக்கபுரா மற்றும் டியூக் வகை பந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிற போதிலும் இந்தியாவில் நடைபெறும் உள்ளுர் போட்டிகள் முதல் சர்வதேச போட்டிகள் வரை இந்தியாவிலேயே மெஷினின்றி கைகளால் தயாரிக்கப்படும் SG வகை பந்துகளே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் நடைபெற்று முடிந்திருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தோல்விக்குக் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதிகம் விமர்சிக்கப்படுவது புதிய வகை SG பந்தும், சேப்பாக்கம் பிட்சும்.

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் SG வகை பந்துகள் மீது இந்திய பௌலர்களுக்கு சில காலமாகவே திருப்தியில்லாமல் இருக்கிறது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டுக்குப் பிறகு இந்த SG பந்துகளின் மீது மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறையும் கேப்டன் கோலியும், அஷ்வினுமே SG பந்துகளின் தரம் குறித்து விவாதத்தை கிளப்பியுள்ளனர்.

வெளிநாடுகளில் கொக்கபுரா மற்றும் டியூக் வகை பந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிற போதிலும் இந்தியாவில் நடைபெறும் உள்ளுர் போட்டிகள் முதல் சர்வதேச போட்டிகள் வரை இந்தியாவிலேயே மெஷினின்றி கைகளால் தயாரிக்கப்படும் SG வகை பந்துகளே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2018 வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது இந்தப் பந்தின் தரம் குறித்து புகார்கள் வரத் தொடங்கியது. ``முன்பெல்லாம் SG பந்துகள் உயரிய தரத்தில் இருந்தன. இப்போது சீக்கிரமே பந்துகள் கடினத்தன்மையை இழந்துவிடுகிறது. மென்மையான பந்துகளை வைத்து வீசுவது வசதியாக இல்லை'' என அஷ்வின் குற்றம்சாட்டியிருந்தார். அப்போது கோலியும் SG பந்துகளின் தரம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

உள்ளூர் போட்டிகளில் ஆடும் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடமிருந்தும் இதே மாதிரியான புகார்கள் வந்ததால் SG நிறுவனம் அவற்றை ஏற்றுக்கொண்டு, பந்தில் சில மாற்றங்களை செய்து கொடுக்க முன் வந்தது.

பந்தின் சீம் பகுதி என சொல்லப்படும் தையல் பகுதி இன்னும் அகலமாகவும் மேலெழும்பியும் பௌலர்களுக்கு பிடிப்பதற்கு வசதியாக மாற்றப்பட்டது.

கோலி
கோலி

பந்தின் உள்பகுதியில் பயன்படுத்தப்படும் கார்க்கும் முன்பை விட கடினமானதாக மாற்றப்பட்டது. இதன் மூலம் பந்தின் கடினத்தன்மை நீண்ட நேரத்திற்கு நிலைத்திருக்கும் என கூறப்பட்டது. மேலும் பந்தின் நிறத்தையும் இன்னும் கொஞ்சம் அடர் சிவப்பாக மாற்றியது SG.

இந்த மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய SG பந்துதான் இப்போது இங்கிலாந்து தொடரில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், மாற்றங்கள் செய்யப்பட்டப்பிறகும் அஷ்வினும் கோலியும் SG பந்தை விமர்சித்திருக்கின்றனர். ''பந்து ரொம்பவே மோசமாக இருந்தது. தையல் எல்லாம் சீக்கிரமே கிழிந்துவிட்டது. கடினத்தன்மையும் அதிக நேரம் நீடிக்கவில்லை. கடினமாக ஃப்ளாட்டாக இருந்த பிட்ச்சும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அடுத்தடுத்தப் போட்டிகளில் இது குறித்து முழுமையாகத் தெரியும்'' என அஷ்வினும் கோலியும் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

முதல் நாளின் டீ பிரேக்கின்போதே பந்து பயங்கர சேதமாகியிருந்து டிவியில் பார்க்கும்போதே தெரிந்தது. தையல் எல்லாம் கிழிந்துபோய் முறையான சீம் இல்லாமல் தண்ணீரில் முக்கி எடுத்த பந்தைப்போல இருந்தது. சலைவா பயன்படுத்தக்கூடாது என்பதால் வியர்வையை அதிகமாக பயன்படுத்தியதும்கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும், இவ்வளவு சீக்கிரமாக ஒரு பந்து சேதமாகி இதற்கு முன் பார்த்ததில்லை.

வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர்

''பிட்ச்சின் தன்மையைத்தான் இதற்கு முக்கிய காரணமாக சொல்லியாக வேண்டும். இது ரொம்பவே கடினமான பிட்ச். இங்கே 50-60 ஓவர்களுக்குப் பிறகும் 10-வது ஓவரில் இருப்பது போலவே பந்து இருக்க வேண்டும் என்பது இயலாதது. இந்திய வீரர்களின் கருத்துகளை கேட்டுத்தான் பந்தில் மாற்றங்கள் செய்தோம். உள்ளூர் போட்டிகளிலும் இதே பந்தை பயன்படுத்தியிருக்கிறோம். அங்கே நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏறக்குறைய இதே போன்றதொரு பந்தைத்தான் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா உடனான இந்திய சீரிஸிக்கும் வழங்கியிருந்தோம். அதுவும் சிறப்பாகவே இருந்தது. இங்கேயும் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி தொடர்ந்து 104 ஓவர்களை ஒரே பந்தில் வீசியது. பந்து சிறப்பாக இருந்ததால்தான் அது சாத்தியமானது. நாங்கள் உயர்தரமான பந்துகளைத் தயாரித்து வருகிறோம். வீரர்களின் பரிசீலனைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்யவும் தயாராக உள்ளோம்'' என கோலி, அஷ்வினின் குற்றச்சாட்டுகளுக்கு SG நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் பிட்ச்சின் தன்மையும் அதீத கடினமாக இருந்தது என்பதால் அஷ்வின் சொல்வதைப்போல அடுத்தடுத்த போட்டிகளில்தான் இந்த SG பந்தின் தரம் குறித்து முழுமையான ஒரு முடிவுக்கு வர முடியும். கேப்டன் கோலியுமே இதையெல்லாம் தோல்விக்கு ஒரு காரணமாக கூற முடியாது என கூறியிருப்பதால் இப்போதைக்கு பெரிய பிரச்னையில்லை. ஆனால், தொடர்ந்து SG பந்துகள் வீரர்களுக்கு அசௌகரியத்தை கொடுக்கும்பட்சத்தில் பிசிசிஐ என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு