Published:Updated:

SA vs IND: சதமடித்த ராகுல், மீண்டெழும் ரஹானே... பேட்டர்களுக்கு டிராவிட் சொன்ன அறிவுரை என்ன தெரியுமா?

கே.எல்.ராகுல் ( BCCI )

கே.எல்.ராகுலை பொறுத்தவரைக்கும் கவாஸ்கர் குறிப்பிட்ட அந்த மரியாதையை ஒவ்வொரு பந்துக்குமே செய்து கொண்டிருந்தார். டிராவிட் சொன்னதை போல தனக்கான பந்து வரும் வரை காத்திருந்தார்.

SA vs IND: சதமடித்த ராகுல், மீண்டெழும் ரஹானே... பேட்டர்களுக்கு டிராவிட் சொன்ன அறிவுரை என்ன தெரியுமா?

கே.எல்.ராகுலை பொறுத்தவரைக்கும் கவாஸ்கர் குறிப்பிட்ட அந்த மரியாதையை ஒவ்வொரு பந்துக்குமே செய்து கொண்டிருந்தார். டிராவிட் சொன்னதை போல தனக்கான பந்து வரும் வரை காத்திருந்தார்.

Published:Updated:
கே.எல்.ராகுல் ( BCCI )

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கியிருக்கிறது. சென்ச்சூரியனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது.

தென்னாப்பிரிக்க வீரர்களின் வேகங்களையும் பவுன்சர்களையும் திறம்பட சமாளித்த கே.எல்.ராகுல் சதமடித்து நாட் அவுட்டாக இருக்கிறார். அரைசதம் அடித்து மயங்க் அகர்வால் நல்ல தொடக்கம் கொடுத்திருந்தார். அவுட் ஆஃப் ஃபார்மிலிருந்த ரஹானே மீண்டும் பழைய ஃபார்முக்குத் திரும்புவதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக முதல் நாள் ஆட்டம் முழுவதிலும் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 272-3 என்ற நிலையில் இருக்கிறது.

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியே டாஸை வென்றிருந்தார். முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். இந்திய அணியில் நம்பர் '5' இடத்திற்கு கோலி - டிராவிட் கூட்டணி யாரை இறக்கப்போகிறது எனும் கேள்வி எழுந்திருந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது ஹனுமா விஹாரி களம் காண வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், ரஹானேவுக்கே இன்னொரு வாய்ப்பை வழங்கி கோலி - டிராவிட் கூட்டணி தங்களின் தாராள மனதை வெளிக்காட்டியிருந்தது.

Mayank Agarwal
Mayank Agarwal
BCCI

கே.எல்.ராகுலும் மயங்க் அகர்வாலும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். இருவருமே மிகச்சிறப்பாக தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சை சமாளித்திருந்தனர். முதல் செஷனில் 28 ஓவர்கள் வீசப்பட்டிருந்தன. இந்த முதல் செஷனில் விக்கெட்டே விடாமல் அசத்தியிருந்தனர். இருவருமே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான அடிப்படை விஷயங்களைச் சிறப்பாகப் பின்பற்றினர். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளுக்கு பேட்டை விடுவதை பெரும்பாலும் தவிர்த்திருந்தனர். தேவையின்றி பெரிய ஷாட் ஆடுவதை அறவே விட்டிருந்தனர். நல்ல ஃபுல் லெந்த்தில் ஷாட் ஆடுவதற்கு வசதியான, பேட்டை விட்டால் தவறே நிகழாது எனும் பந்துகளுக்கு மட்டுமே பேட்டை விட்டி ஷாட் ஆடியிருந்தனர். கே.எல்.ராகுலை விட மயங்க் அகர்வால் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தார். தென்னாப்பிரிக்க மைதானங்களுக்கே உரித்தான அந்த எக்ஸ்ட்ரா பவுன்ஸில் இருவருமே சௌகரியமாக ஆடவில்லை எனினும் அந்தப் பந்துகளில் விக்கெட்டை விடாமல் சாமர்த்தியமாகச் சமாளித்திருந்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
உங்களுக்கென ஒரு திட்டத்தை வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து அப்ளை செய்யுங்கள். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளைக் கூடுமானவரை லீவ் செய்யுங்கள். உங்களுக்கான நேரம் வரும். நீங்கள் ஷாட் ஆடுவதற்கான பந்து வரும். அதுவரை காத்திருங்கள்.
ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட் இப்படி அறிவுரை கூறியதாக மயங்க் அகர்வால் பேசியிருந்தார். பயிற்சியாளரான டிராவிட்டின் இந்த அறிவுரையை ஏறக்குறைய இருவருமே முழுமையாக பின்பற்றியிருந்தனர். ஷார்ட் பிட்ச்/பவுன்சர்களில் மட்டுமே கொஞ்சம் தடுமாறிப் போயிருந்தனர்.

முதலில் ஸ்கோரை முன் இழுத்துச் செல்ல தொடங்கியது மயங்க் அகர்வால்தான். ரபாடா, இங்கிடி போன்ற அபாயகரமான பௌலர்களிடம் பெரியளவில் ரிஸ்க் எடுக்காமல் ஆடிவிட்டு, அறிமுக வீரரான மார்கோ ஜெனேசனின் பந்தில் பவுண்டரிகளை அடித்து ரன்னை உயர்த்தினார். முதல் டெஸ்ட் போட்டி என்பதால் ஜெனேசனும் சரியான லைன் & லெந்தைப் பிடித்து வீசுவதில் தடுமாறியிருந்தார். முதல் பந்தையே லோ ஃபுல் டாஸாக வீசியிருந்தார். அதை மயங்க் அகர்வாக் தவறவிடாமல் பவுண்டரி ஆக்கியிருந்தார். அந்த ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகள் வந்திருந்தன.

கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால்
கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால்
BCCI

முதல் செஷன் முழுவதுமே இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியிருந்தது. விக்கெட்டே விடாமல் 83-0 என்ற நிலையில் இந்திய ஓப்பனர்கள் உணவு இடைவேளைக்கு சென்றிருந்தனர்.

இரண்டாவது செஷனிலும் மார்கோ ஜெனேசன், மட்லர் ஆகியோரின் பந்துகளை மட்டும் அட்டாக் செய்து இந்திய ஓப்பனர்கள் ஆடிக்கொண்டிருந்தனர். மயங்க் அகர்வால் அரைசதத்தைக் கடந்திருந்தார். இந்நிலையில்தான், இந்த செஷனில் தனது முதல் ஸ்பெல்லை வீசிய இங்கிடி இரண்டாவது ஓவரிலேயே அதிர்ச்சி கொடுத்தார். அடுத்தடுத்த பந்துகளில் மயங்க் அகர்வால் மற்றும் புஜாராவின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இன்கம்மிங் டெலிவரியாக வந்த ஒரு பந்தை மயங்க் அகர்வால் பேடில் வாங்கி lbw ஆக, டிஃபன்ஸ் ஆட முயன்று முதல் பந்திலேயே இன்சைட் எட்ஜ் ஆகி ஷார்ட் லெக்கில் புஜாரா கேட்ச் ஆனார்.

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் இந்தியா கொஞ்சம் கலக்கமடைந்தது. ஆனால், ராகுலும் கோலியும் இந்த சரிவிலிருந்து இந்தியாவை மீட்க தொடங்கினர். கே.எல்.ராகுல் முதல் நாள் முழுவதுமே மிகச்சிறப்பாக ஆடி 218 பந்துகளில் தன் சதத்தை நிறைவு செய்தார்.

ராகுல் டிராவிட் சொன்ன அந்த அறிவுரைதான் கே.எல்.ராகுலின் இன்னிங்ஸிற்கும் அடிப்படையாக அமைந்தது. டிராவிட்டின் அறிவுரையை மயங்க் அகர்வாலை விட கே.எல்.ராகுல் அதிக சிரத்தையோடும் கவனத்தோடும் பின்பற்றினார். அதற்கு சாட்சி அவர் ஆடிய முதல் 20 பந்துகள்.

கே.எல்.ராகுல் 21 வது பந்தில்தான் தனது முதல் ரன்னை அடித்திருந்தார். அதற்கு முன் அவர் ஆடிய அந்த 20 பந்துகளே அவர் இன்றைக்கு பெரிய இன்னிங்ஸ் ஆடப்போகிறார் என்ற அறிகுறியை காட்டிவிட்டது. முதல் 20 பந்துகளில் ரபாடாவிற்கு எதிராக 18 பந்துகளையும் இங்கிடிக்கு எதிராக 2 பந்துகளையும் சந்தித்திருந்தார். இந்த 20 பந்துகளில் ராகுல் வெளிப்படுத்திய நிதானம் வியக்க வைத்தது. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பேட்டை விடவே இல்லை. அந்த மூன்று ஸ்டம்ப் லைனுக்குள்ளேயே கயிறை வைத்து கட்டிப்போட்டதை போன்ற கட்டுப்பாட்டை வெளிக்காட்டியிருந்தார். சரியாக இந்த ஸ்டம்ப் லைனில் வந்த பந்துகளை மட்டுமே டிஃபன்ஸ் செய்திருந்தார். அவர் முதல் ரன்னை எடுத்த 21வது பந்தும் லெக் ஸ்டம்ப் லைனில் கொஞ்சம் ஷார்ட்டாக, ஆடுவதற்கு வசமாக வந்ததால் மட்டுமே தட்டிவிட்டு சிங்கிள் எடுத்திருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் பந்து பேசும் போது, பேட்ஸ்மேன்கள் பந்து பேசுவதை மட்டுமே கேட்க வேண்டும். அதுவும் முழுமையான மரியாதையோடு!
கவாஸ்கர்
கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்
BCCI

கவாஸ்கர் இவ்வாறு கமென்ட்ரியில் பேசியிருந்தார். கே.எல்.ராகுலை பொறுத்தவரைக்கும் கவாஸ்கர் குறிப்பிட்ட அந்த மரியாதையை ஒவ்வொரு பந்துக்குமே செய்து கொண்டிருந்தார். டிராவிட் சொன்னதை போல தனக்கான பந்து வரும் வரை காத்திருந்தார். ஷார்ட் பிட்ச்/பவுன்சர் பந்துகளுக்குக் கொஞ்சம் திணறினார். ஒரு கேட்ச் வாய்ப்பையும் வழங்கினார். ஆனாலும், முடிந்தளவுக்கு அவற்றைச் சமாளித்து தொடர்ச்சியாக சிறப்பாக ஆடினார். ராகுல் வெளிக்காட்டிய நிதானத்திற்குக் கிடைத்த பரிசே இந்தச் சதம்.

விராட் கோலி, ரஹானே இருவருமே தங்களின் ஆட்டத்தை மிகச்சிறப்பாகத் தொடங்கியிருந்தனர். விராட் கோலி ரபாடாவின் பந்தில் கனகச்சிதமாக கவர் ட்ரைவ் எல்லாம் அடித்திருந்தார். ஆனால், நின்று நன்றாக செட்டில் ஆகியிருந்த சமயத்தில் நல்ல ஒயிடாக இங்கிடி வீசிய பந்திற்கு பேட்டை விட்டு எட்ஜ் ஆகி கேட்ச் ஆகியிருந்தார்.

இந்த விக்கெட்டுக்கு முன்பாக இங்கிடி வீசிய 7 பந்துகளிலும் கோலி டாட் ஆடியிருந்தார். கிட்டத்தட்ட இந்த 7 பந்துகளிலும் எல்லா லைன் & லெந்த்தையும் இங்கிடி முயன்றிருந்தார். ஷார்ட் பிட்ச், லெக் ஸ்ட்ம்ப், மிடில் & லெக் என வீச எல்லா பந்துகளையும் டாட் ஆக்கியிருந்த கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே எங்கோ ஒரு மூலைக்கு சென்ற பந்தை பாயிண்ட்டில் அடிக்க முயன்று எட்ஜ் ஆகியிருந்தார். சரியான பந்துக்காகக் காத்திருக்காமல், பவுண்டரிக்கான பந்தைத் தேடி கோலி சென்றார். தன் விக்கெட்டையும் பறிகொடுத்தார்.

Virat Kohli
Virat Kohli
ICC

ராகுல் - ரஹானே கூட்டணி பேட்டிங் செய்து கொண்டிருக்கிறது. கடந்த பாக்ஸிங் டே டெஸ்ட்டில் கடைசியாகச் சதமடித்திருந்த ரஹானேவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்ததே ஓர் அதிசயம்தான். இந்த வாய்ப்பிலும் சொதப்பினால் இனி அவ்வளவுதான் எனும் சூழலில் ரஹானே அட்டாக்கிங்காக வேகமாக ஆடி வருகிறார்.

அடித்திருக்கும் 40 ரன்களில் 32 ரன்களை பவுண்டரி மூலமாக மட்டுமே அடித்திருக்கிறார். கடந்த பாக்ஸிங் டேவோடு தவறவிட்ட ஃபார்மை இந்த பாக்ஸிங் டேவில் மீட்டெடுக்கும் முயற்சியில் ரஹானே இறங்கியிருக்கிறார். சாதிப்பாரா?