Published:Updated:

`உலகக் கோப்பை பேட் முதல் ஜெர்சி வரை..!’- பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி திரட்டும் கே.எல்.ராகுல்

கே.எல் ராகுல்
கே.எல் ராகுல்

அதில் கிடைக்கும் தொகையை வைத்து பிரிட்டனைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான Aware foundation வாயிலாகத் தற்போதைய பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உதவி செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

கொரோனாவின் கோரப் பிடியில் சிக்க தற்போது உலக நாடுகள் அனைத்துமே மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. இந்த வைரஸின் பாதிப்பால் பல்வேறு துறைகளைச் சார்ந்த பல தொழில்களும் முடங்கியுள்ள நிலையில் விளையாட்டு துறையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜப்பானில் நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி தற்போது இந்தியாவில் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டிகள் என மார்ச் மாத மத்தியில் இருந்தே உலகின் பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யபட்டோ, தேதி மாற்றம் செய்யப்பட்டோ தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

இந்தியாவில், தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு உதவும் வகையில் பலரும் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான கே.எல். ராகுல் தனது 28-வது பிறந்தநாளை முன்னிட்டு உலகக்கோப்பையில் தான் பயன்படுத்திய பேட் முதல் தனது பல்வேறு விளையாட்டு உபகரணங்களை ஏலத்தில் விடப்போவதாக அறிவித்திருந்தார். மேலும், அதில் கிடைக்கும் தொகையை வைத்து பிரிட்டனைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான Aware foundation வாயிலாகத் தற்போதைய பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உதவி செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார் .

பாரத் ஆர்மியுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் தற்போது அவரின் பேட் மட்டும் ரூ.2,64,228-க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், அவரது ஹெல்மெட் 1,22,677 ரூபாய்க்கு, லெக் பேட்ஸ் 33,028 ரூபாய்க்கு, ஒருநாள் போட்டி ஜெர்சி 1,13,240 ரூபாய்க்கும் டி20 ஜெர்சி 1,04,824 ரூபாய்க்கும் டெஸ்ட் ஜெர்சி 1,32,774 ரூபாய்க்கும் கிளவுஸ்கள் 28,782 ரூபாய்க்கும் ஏலம் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

இந்திய கிரிக்கெட் வாரியம் முதல் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் ஷர்மா, யுவராஜ் சிங், கௌதம் கம்பீர் உள்ளிட்டோர் ஏற்கெனவே நிவாரணத் தொகை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு