Published:Updated:

KL Rahul: மீண்டும் சொதப்பல்; துணை கேப்டன் பதவிப் பறிப்பு; ரஹானேவின் நிலை; மீள்வாரா ராகுல்?

KL Rahul

ராகுலின் நம்பர்களை எடுத்துப் பார்த்தால் ஆட்காட்டி விரலை நீட்டி அதிருப்தி தொனியில் கேள்வி கேட்க வேண்டுமென்றே யாருக்கும் தோன்றும். ராகுல் சறுக்கியது எங்கே?

Published:Updated:

KL Rahul: மீண்டும் சொதப்பல்; துணை கேப்டன் பதவிப் பறிப்பு; ரஹானேவின் நிலை; மீள்வாரா ராகுல்?

ராகுலின் நம்பர்களை எடுத்துப் பார்த்தால் ஆட்காட்டி விரலை நீட்டி அதிருப்தி தொனியில் கேள்வி கேட்க வேண்டுமென்றே யாருக்கும் தோன்றும். ராகுல் சறுக்கியது எங்கே?

KL Rahul
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 4 போட்டிகள் கொண்ட தொடர்தான் என்பதால் இனிமேல் இந்தத் தொடரை இந்திய அணி இழப்பதற்கான சாத்தியமே இல்லை.

ஆக, இன்னொரு முறை இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது என்றே எடுத்துக் கொள்ளலாம். இது அத்தனை சாதாரண விஷயமல்ல. ஆஸ்திரேலியா போன்ற ஒரு அணிக்கு எதிராக உள்ளூர் வெளியூர் என வித்தியாசமே இல்லாமல் ஆதிக்கம் செலுத்துவது எப்போதும் சாத்தியப்படும் விஷயமல்ல. இந்திய அணி அரிதினும் அரிய சாதனையை செய்திருக்கிறது.

KL Rahul
KL Rahul
Rahul
டெல்லியில் அந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் இந்திய அணியின் இந்த அளப்பரிய சாதனைதான் பேசுபொருளாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு அப்படியே நேர்மாறான ஒரு விஷயம்தான் இணையத்தில் அதிகம் ட்ரெண்டானது. கே.எல்.ராகுலின் தேர்வு சார்ந்த கேள்விகள்தான் இந்த டெஸ்ட் தொடரின் மையமாக மாறியிருக்கிறது.
KL Rahul
KL Rahul
Rahul

ரசிகர்கள் ட்ரோல்களால் கே.எல்.ராகுலுக்கு எதிரான கதையாடல்களை உருவாக்க, முன்னாள் வீரர்களோ அதை கேள்விகளின் வழி செய்துகொண்டிருந்தனர். குறிப்பாக, வெங்கடேஷ் பிரசாத். கடந்த சில நாட்களாக கே.எல்.ராகுலின் சொதப்பல்களை குறிவைத்து கேள்வி கேட்பதை மட்டும்தான் முழுநேர வேலையாக வைத்திருக்கிறார். நிர்வாகத் தரப்பிலுமே கே.எல்.ராகுலின் மீது நம்பிக்கையின்மையை வெளிக்காட்டியிருக்கிறார்கள். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு அவர்தான் இந்திய அணியின் துணை கேப்டன். ஆனால், அடுத்து வரவிருக்கும் இரண்டு போட்டிகளுக்குமே அவர் துணை கேப்டன் கிடையாது. இதன் மூலம் ஆடும் லெவனிலேயே அவரின் இடம் கேள்விக்குள்ளாகி இருப்பதாகவே படுகிறது.

கே.எல்.ராகுலின் மீது இத்தனை கேள்விகளும் நம்பிக்கையின்மையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தப்படுவது நியாயமா என கேட்டால், நியாயமான காரணங்கள் இருக்கவே செய்கின்றன. ராகுலின் டெஸ்ட் கரியரில் அவருடைய சமீபத்திய ரெக்கார்டுகள் எதுவுமே அவருக்குச் சாதகமானதாக இல்லை. ராகுலின் நம்பர்களை எடுத்துப் பார்த்தால் ஆட்காட்டி விரலை நீட்டி அதிருப்தி தொனியில் கேள்வி கேட்க வேண்டுமென்றே யாருக்கும் தோன்றும். இந்தத் தொடரிலேயே ராகுல் இதுவரை மூன்று இன்னிங்ஸ்களில் பேட்டிங் ஆடியிருக்கிறார். ஆனால், ஒரு இன்னிங்ஸில் கூட சொல்லிக்கொள்ளுமளவுக்கு எதையும் செய்யவில்லை.

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரே ஒரு இன்னிங்ஸில்தான் பேட்டிங் ஆடியிருந்தது. அதில் ரோஹித்துடன் ஓப்பனிங் இறங்கி 20 ரன்களை ராகுல் சேர்த்திருந்தார். ஏறக்குறைய முதல் செஷனில் பெரும்பாலான நேரம் களத்தில் இருந்திருந்தார். 71 பந்துகளை எதிர்கொண்டு ஒரு நல்ல தொடக்கம். ஆனால், நேதன் லயன், மர்ஃபி என அடுத்தடுத்து சுழல் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் அவுட் ஆகியிருந்தார். இரண்டாவது போட்டியில் ராகுல் இன்னும் தேய்மானத்தை நோக்கி நகர்ந்தார். டெல்லி டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 17 ரன்கள் இரண்டாம் இன்னிங்ஸில் வெறும் ஒரே ரன். இரண்டு இன்னிங்ஸிலுமே நேதன் லயன், ராகுலின் விக்கெட்டை சொல்லி வைத்துத் தூக்கினார். ஆஸ்திரேலியாவிற்கு இந்த இரண்டு டெஸ்ட்களிலுமே பெரிய சிரமமின்றி எளிதில் நடந்த காரியம் ராகுலின் விக்கெட் மட்டுமே. இந்த மூன்று இன்னிங்ஸ்கள் அல்ல பிரச்சனை.

Rahul
Rahul
Rahul
கடந்த 10 இன்னிங்ஸ்களாகவே ராகுல் ஒன்றுமே செய்யவில்லை. கடந்த 10 இன்னிங்ஸ்களில் ராகுல் ஒரு முறை கூட 25 ரன்களை தாண்டவே இல்லை. டெஸ்ட் போட்டிகளில் இது மிக மோசமான ரெக்கார்ட். ஒரு அணியில் ஒரு வீரரின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் அத்தனை காரணத்தையும் இந்த ஒரே ஒரு புள்ளிவிவரமே கொடுத்துவிடும். அதனால்தான், வெங்கடேஷ் பிரசாத் போன்றோர் வழக்கத்தை மீறிய வெளிப்படைத்தன்மையோடு இந்த விஷயத்தை அணுகத் தொடங்கியிருக்கின்றனர்.

ராகுல் டெஸ்ட் போட்டிகளில் திடகாத்திரமாக ஆடுவதற்கான திறனை கொண்டிராத வீரரா எனில், நிச்சயமாக இல்லை. குறுகிய வடிவிலான போட்டிகளுக்கு முன்பாகவே டெஸ்ட் போட்டிகளில் அறிமுகானவர் ராகுல் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். 2011 க்குப் பிறகு தோனி ஒரு மாற்று அணியைக் கட்டமைக்க விரும்பிய தருவாயில்தான் ராகுலுமே இந்திய டெஸ்ட் அணிக்கு அறிமுகமானார். டிராவிட் பாணியில் ஒரு முழுமையான டெஸ்ட் வீரராக சாந்த சொரூபமாகத்தான் முதலில் ராகுலும் பார்க்கப்பட்டார். அவரின் ஆட்ட முறையுமே அப்படியானதாகத்தான் இருக்கும். அதிர்வதற்கு தயங்கும் மட்டையாளராக இருந்தவர் ஒரு கட்டத்தில் அனைத்து ஃபார்மட்டுக்குமான வீரராக மாற எத்தனித்தார். அதன்விளைவாகவே டெக்னிக்கலாகவே தனது ஆட்டத்தில் பல மாற்றங்களை உட்புகுத்த எண்ணினார். ஐ.பி.எல் இல் அதிவேக அரைசதங்களில் ஒன்றை அடிக்கும் அளவுக்கு மேதைமை பெற்ற குறுகிய பார்மட் வீரராகவும் கலக்கினார்.

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்
Alastair Grant

டெஸ்ட்களிலுமே அவ்வப்போது போற்றத்தக்க சில இன்னிங்ஸ்களை ஆடிக்கொண்டேதான் இருந்தார். 2017-ல் ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு வந்தபோது ஒரு திருப்திகரமான ஆட்டத்தையே ராகுல் வெளிக்காட்டியிருப்பார். தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திலும் ராகுலின் பங்களிப்புகளை குறைத்து மதிப்பிட்டு விடவே முடியாது.

கடந்த காலங்களை கடந்து சமகாலத்துக்கு வருவோம். ஒரு காலத்தில் முழுமையான டெஸ்ட் வீரராக தகவமைத்துக் கொள்ளும் திறனோடு இந்திய அணியின் எதிர்கால நம்பிக்கையாக பார்க்கப்படுவதற்கான அத்தனை அறிகுறிகளையும் உள்ளடக்கியவராக பார்க்கப்பட்டவரின் இருப்பே ஒரு ஆறேழு ஆண்டுகளுக்குள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்கதே.

கில், சர்ஃபராஸ், பிரித்திவி ஷா என ஒரு இளம்படையே ராகுலுக்கு பின்னால் வாய்ப்புக்காக காத்து நிற்பதுமே அவருக்கு இன்னும் அதிக அழுத்தத்தைக் கொடுக்கும்.

ராகுல் எதிர்கொண்டிருப்பதைப் போல விமர்சனங்களையும் நம்பிக்கையின்மையையும் இதற்கு முன்பும் பல வீரர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். வெகு சமீபத்திய உதாரணம் ரஹானேவும் புஜாராவும். இருவருமே இந்திய டெஸ்ட் அணியின் தூண்கள். ரஹானே, ராகுலைப் போன்றே ஒரு துணைக் கேப்டன். இப்போது கே.எல்.ராகுல் மீதான விமர்சனங்களையெல்லாம் கடந்தும் அவருடன் நிற்கப்போவதாகவும் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கப்போவதாகவும் டிராவிட்டும் ரோஹித்தும் அறிவித்திருக்கிறார்கள். இதே நம்பிக்கையைத்தான் ஒரு காலத்தில் ரஹானேவிற்கு கோலியும் ரவி சாஸ்திரியும் அளித்தார்கள்.

Pujara - Rahane
Pujara - Rahane

இன்று ரஹானே எங்கே? இதே நிலைமையை ராகுலும் எட்டக்கூடும் என்பதற்கான எச்சரிக்கை செய்திதான் அந்த துணைக் கேப்டன் பதவிப் பறிப்பு. ரஹானேவிற்கும் அவரை அணியிலிருந்து வெளியேற்றும் முன்பாக முதற்கட்டமாக இப்படி துணைக் கேப்டன் பதவியைப் பறித்துதான் எச்சரிக்கை அளித்தனர். ஆனால், அதன்பிறகும் ரஹானேவால் ஆட்டத்தில் பெரிதாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இந்திய ஜெர்சி அணியும் வாய்ப்பும் ரஹானேவிற்கு மீண்டும் கிடைக்கவே இல்லை.

ரஹானேவிற்கு நிகழ்ந்தது புஜாராவிற்கும் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால், புஜாரா சுதாரித்துக்கொண்டு தன்னுடைய இடத்தைத் தக்கவைக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார். கவுன்ட்டி போட்டிகளில் ஆடச் சென்றார். தொடர்ச்சியாக நன்றாக ஆடி தன் மீதான நம்பிக்கையின்மையை எல்லாம் மறக்கச் செய்தார். புஜாராவுக்கு டெஸ்ட் போட்டிகள்தான் வாழ்வே. அதுதான் அவரின் அடையாளம். அது கை நழுவிச் செல்லும்போது அதை இழுத்துப் பிடிப்பதற்காக போராடி வென்றார். ராகுல் இனி கிடைக்கப்போகும் சொற்ப வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் அல்லது இந்த வெள்ளை உடையின் மகிமை உணர்ந்து உள்ளூர் அளவிலும் கவுன்ட்டியிலும் முட்டி மோதி முயன்று மீண்டும் தேர்வுக்குழுவின் நம்பிக்கையைப் பெறவேண்டும்.

ராகுல் மீதான விமர்சனங்கள் அத்தனையும் ஏற்புடையதுதான். ஆயினும், அவை விமர்சனங்கள் என்பதைத் தாண்டி ஒரு குறிவைக்கப்பட்ட சைபர் தாக்குதலாக மாறுகிறதோ எனும் ஐயமும் எழாமல் இல்லை. விமர்சனத்திற்கும் வரம்பு இருக்கு பாஸ்!