Published:Updated:

2003-ல் டிராவிட்... 2020-ல் ராகுல்..! ஆஸ்திரேலிய தொடரில் கோலிக்குக் கிடைத்த ஜாக்பாட் #INDvAUS

KL Rahul ( AP )

2003 உலகக் கோப்பையின்போது அணியில் காம்பினேஷன் சரியாக வர வேண்டும் என்பதற்காக கங்குலி டிராவிட்டை கீப்பிங் செய்யச் சொன்னார். டிராவிட்டும் அணிக்காக அந்தப் பணியை செய்தார். அதேபோல் ராகுலுக்கு இந்த வாய்ப்பு வந்துள்ளது.

2003-ல் டிராவிட்... 2020-ல் ராகுல்..! ஆஸ்திரேலிய தொடரில் கோலிக்குக் கிடைத்த ஜாக்பாட் #INDvAUS

2003 உலகக் கோப்பையின்போது அணியில் காம்பினேஷன் சரியாக வர வேண்டும் என்பதற்காக கங்குலி டிராவிட்டை கீப்பிங் செய்யச் சொன்னார். டிராவிட்டும் அணிக்காக அந்தப் பணியை செய்தார். அதேபோல் ராகுலுக்கு இந்த வாய்ப்பு வந்துள்ளது.

Published:Updated:
KL Rahul ( AP )

மிகவும் பரபரப்பாக நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா தொடரை 2-1 என வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது மென் இன் புளூ. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று வெற்றி பெற்ற போது, வார்னர், ஸ்மித் இல்லாததால் பலமில்லாத அணியை எளிதாக வெற்றி பெற்றுவிட்டனர் என்ற பேச்சு பரவலாக இருந்தது. அதைப் பொய்யாக்கும் வகையில் இந்த முறை மிகவும் வலுவான அணியாக வந்த ஆஸ்திரேலியாவை வதம் செய்து தொடரைக் கைப்பற்றியிருக்கிறது கோலி அண்டு கோ.

வார்னர், ஸ்மித், ஃபிஞ்ச் என ஸ்டார் பேட்ஸ்மேன்கள் இருக்க, கூடவே, வெறித்தன ஃபார்மில் இருக்கும் லாபுஷான் இணைய ஆஸ்திரேலியா பல மடங்கு பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டது. மறுபுறம், கோலி 4-வது வீரராக ஆடப்போவதாகவும் ராகுலை 3-வது வீரராக களம் இறக்கப் போவதாகவும் கூற சோஷியல் மீடியாக்களில் பயங்கர விவாதமே நடைபெற்றது. இது சரி வருமா என்று கேள்விகள் எழ, அதற்கு விடையும் இந்தத் தொடரிலே கிடைத்தது.

இந்தத் தொடரின் சில சிறந்த பெர்பாமன்ஸ்கள் இங்கே...

Finch & Warner
Finch & Warner
AP

ஆரோன் ஃபிஞ்ச் & வார்னர்

முதல் போட்டியில், இவர்கள் இருவரும் இரட்டைக் குழல் தூப்பாக்கியாக இந்திய பௌலர்களைச் சுட்டுத் தள்ளினார்கள். பலம் வாய்ந்த இந்திய பெளலிங் படையால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. அதுவும் பும்ரா, ஜடேஜா, ஷமி, குல்தீப் போன்ற வீரர்களால் விக்கெட்டே எடுக்க முடியாததைப் பார்த்து, தொடர் எங்கே நம் கையை விட்டுப் போய்விடுமோ என்ற பயம் வந்துபோனது. வார்னர் வழக்கம்போல் அதிரடியாக ஆட, ஃபிஞ்சும் அவருக்குக் கம்பெனி கொடுத்து ஆடினார். இருவரும் சேர்ந்து முதல் 10 ஒவரில் 84 ரன்களை எடுத்தனர். அந்த ரன் ரேட் கடைசிவரை குறையவே இல்லை. கோலி பெளலர்களை மாற்றி மாற்றிப் பார்த்தும் எந்தப் பலனும் இல்லை. 255 ரன்களை வெறும் 37 ஒவர்களில் சேஸ் செய்துவிட்டனர். 15 வருடங்களுக்குப் பிறகு இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது.

தவான் & கே.எல் ராகுல்

ஓப்பனிங் இடத்துக்கு மியூசிக்கல் சேர் நடைபெற்று வரும் வேளையில் கிடைத்த இரண்டு வாய்ப்புகளையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஆடி அரைசதம் அடித்து அசத்தினார் தவான். அதுவும் இரண்டாவது போட்டியில் ஆக்ரோஷமாக ஆடி வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். 90 பந்துகளில் 96 ரன்கள் அடித்து 4 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.

Dhawan
Dhawan
AP

எந்த இடத்திலும் சிறப்பாக ஆடும் ஒரு பேட்ஸ்மேனை பல நாள்களாகத் தேடிக்கொண்டிருந்தது இந்திய அணி. அந்தத் தேடலுக்கு இரண்டாவது போட்டியில் ஒரளவு பதில் கிடைத்தது, கே.எல் ராகுல் முலமாக. ஓப்பனிங், ஒன் டவுன், 2nd டவுன் என ஆடியவரை 3rd டவுனாக ஆடும்படி கூற, தனக்கு விடுக்கப்பட்ட சவாலை ஏற்றுக்கொண்டு சிறப்பாக விளையாடி அசத்திவிட்டார் ராகுல்.

44-வது ஒவரில் 280 ரன்கள் இருக்கும்போது அடுத்தடுத்து கோலி, மனிஷ் பாண்டே என இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்துவிட, ஜடேஜாவுடன் இணைந்து அணியின் ஸ்கோரை 340 ரன்களுக்கு உயர்த்தினார் ராகுல். இறுதி ஒவர்களில் கம்மின்ஸ், ஸ்டார்க் இருவரையும் ஒரு வழியாக்கினார். அதுவும் கம்மின்ஸ் பந்தில் 3rd மேன் திசையில் அடித்த சிக்ஸ் அவ்வளவு அழகாக இருந்தது. 52 பந்தில் 6 பவுண்டரீஸ், 3 சிக்ஸர்கள் அடித்து 80 ரன்களை எடுத்தார்.

Rahul
Rahul
AP

முதல் போட்டியில் பன்ட் தலையில் அடிபட்டு வெளியேற, பேக்கப் கீப்பராக களம் கண்ட அதே ராகுல், தனது அசாத்திய பேட்டிங் பெர்ஃபாமன்ஸினாலும் நல்ல விக்கெட் கீப்பிங்கினாலும் முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பர் அளவுக்கு வந்துவிட்டார். இரண்டாவது போட்டியில் ஃபிஞ்சை ஸ்டம்பிங் செய்தது தோனியை நினைவுபடுத்தியது. ஐபிஎல், மாநில போட்டிகளின் கீப்பிங் அனுபவத்தை மனதில் வைத்து, `இது தொடரும்' என்று கூறி ராகுலுக்கு பெரும் பொறுப்பை அளித்திருக்கிறார் கோலி. 2003 உலகக்கோப்பையின்போது அணியில் காம்பினேஷன் சரியாக வர வேண்டும் என்பதற்காக கங்குலி, டிராவிட்டை கீப்பிங் செய்யச் சொன்னார். டிராவிட்டும் அணிக்காக அந்தப் பணியைச் செய்தார். அதேபோல் ராகுலுக்கு இந்த வாய்ப்பு வந்துள்ளது. ஆனால், இந்த முயற்சி எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது போகப் போகதான் தெரியும்.

ஷமி & பும்ரா

இந்தத் தொடர் ஆரம்பிக்கும்போது அனைவரும் எதிர்பார்த்தது ஆஸ்திரேலியாவின் அட்டாக்கிங் பெளலர்களான கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க்கைதான். ஆனால், இருவரின் பந்தையும் இந்திய பேட்ஸ்மேன்கள் நையப்புடைத்து விட்டனர். இவர்களுக்கே இந்தக் கதி என்றால் நமது பெளலர்களுக்கு என்ன ஆகப் போகிறதோ என்று எண்ணியபோது முதல் போட்டியின் முடிவு நம் பெளலர்களுக்கும் இதே கதிதான் என்பதை உணர்த்தியது.

Bumrah & Shami
Bumrah & Shami
AP

காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள பும்ரா சாதிப்பாரா இல்லை சறுக்கி விடுவாரா என்ற சந்தேகத்தைக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இரண்டாவது போட்டியில், தான் பழைய பும்ராதான் என்பதை உணர்த்தினார். இரண்டாவது மற்றும் முன்றாவது போட்டிகளில் தொடர்ந்து டைட் லைனில் பந்து வீசி பேட்ஸ்மேன்களை ரன் எடுக்க விடாமல் செய்து பிரஷரை உருவாக்கினார். மற்ற பெளலர்களின் பந்துவீச்சில் ரன்னுக்குச் செல்லுமாறு பேட்ஸ்மேன்களைத் தூண்டினார். பேட்ஸ்மேன்களும் ரன்களுக்குப் போக மற்ற பெளலர்களிடம் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பேட்ஸ்மேன்கள் ரன் மழைகள் பொழிந்து கொண்டிருந்த நேரத்தில் 10 ஒவரில் வெறும் 32 மற்றும் 38 ரன்கள் கொடுப்பது எல்லாம் பும்ராவால் மட்டுமே முடியும்.

பும்ரா உருவாக்கிய பிரஷரை நன்றாக பிடித்துக்கொண்ட சைனி மற்றும் ஷமி யார்க்கர்களாகப் போட்டு தள்ளினார்கள். இரண்டாவது போட்டியில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட பந்துகள் யார்க்கர்களாக வீசப்பட்டிருக்கும். ஷமி இரண்டாவது மற்றும் முன்றாவது போட்டிகளில் விக்கெட் வேட்டைகளை நடத்திவிட்டார். இரண்டு போட்டிகளிலும் கம்மின்ஸ்க்கு ஒரே மாதிரி யார்க்கர்கள் வீசி விக்கெட் எடுத்தது எல்லாம் வேற லெவல் பெர்பாமன்ஸ். 7 விக்கெட்டுகள் எடுத்தாலும் ரன்கள் மட்டும் அதிகமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதை கட்டுப்படுத்துவாரேயானால் இந்திய அணிக்கு அசைக்க முடியாத ஒன்டே பெளலர் கிடைத்துவிடுவார்.

Steve Smith
Steve Smith
AP

ஸ்டிவ் ஸ்மித்

டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நன்றாக ஆடுவார். ஒன்டே போட்டிகளில் அதே பெர்பாமன்ஸை கொடுக்க முடியாது என்று கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார். முதல் போட்டியில் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்காதபோதும் இரண்டாவது மற்றும் முன்றாவது போட்டியில் 98 மற்றும் 131 ரன்கள் அடித்து ஒன்டே ஃபார்மட்டிலும் தான் சாம்பியன் பேட்ஸ்மேன்தான் என்பதை நிரூபித்தார். ஃபாஸ்ட் பெளலர்களாலும் சரி ஸ்பின்னர்களாலும் சரி இவரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ரன்கள் வந்துகொண்டே இருந்தது. இவரை அவுட் ஆக்க மற்ற அணிகள் சீக்கிரம் வழி கண்டுபிடிக்க வேண்டும். இல்லையெனில் அனைவர் பாடும் திண்டாட்டம்தான்.

ரோஹித் & கோலி

ரோஹித் முதல் இரண்டு போட்டிகளில் சறுக்கினாலும் தனது ராசியான பெங்களூர் மைதானத்தில் சதம் அடித்து தொடரை வென்று கொடுத்துவிட்டார். காயம் காரணமாக தவான் பேட்டிங் ஆட வராத நிலையில் தனது விக்கெட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்த ரோகித் மிகவும் பொறுமையாக ஆடினார். உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுடனான போட்டிக்குப் பிறகு ரோஹித் ரொம்ப பொறுமையாக விளையாடியது இந்த ஆட்டத்தில்தான். மொத்த சுமையும் தன் மேல் ஏற்றிகொண்டு கோலியை செட்டில் ஆகவிட்டார். ஸ்டார்க் பந்தில், டீப் பாயிண்ட்ல ஒரு டிரைவ் அடிப்பார். அதுவும் ஒவர் தி விக்கெட்டில் வந்து போடும் போது! ரோகித்தின் பெஸ்ட் ஷாட் என்று இதை சந்தேகமேயில்லாமல் கூறலாம்! 128 பந்துகளில் 8 பவுண்டரீஸ் மற்றும் 6 சிக்ஸர்கள் அடித்து 119 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு வந்து விட்டுச் சென்றார்.

Rohit & Kohli
Rohit & Kohli
AP

கோலி தான் ஒரு சேஸிங் கிங் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். முதல் போட்டியில் 4-வது வீரராக களம் இறங்க இந்தியா, பெரிய ஸ்கோரை செட் செய்ய முடியாமல் தோல்வியடைந்தது. தனக்கும் சரி அணிக்கும் சரி 3-வது பேட்டிங் பொஷிசன் ஆடுவதுதான் சரியான முடிவு என்பதை உணர்ந்து மீண்டும் அதே இடத்தில் இரண்டாவது போட்டியில் இறங்கினார். ஆடம் ஜம்பா, லெக் ஸ்பின்னில் கோலியைத் திணறடிக்க, மிகவும் சாதுர்யமான முறையில் ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். இரண்டாவது போட்டில் 76 பந்தில் 78 ரன்கள் எடுத்தார் என்றால் முன்றாவது போட்டியில் 91 பந்தில் 89 ரன்கள் அடித்து அணியைக் கரை சேர்த்தார். முன்றாவது போட்டியில் 36-வது ஒவரில் கோலி அடித்த Straight drive ஒரு நிமிடம் சச்சினை மீண்டும் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தியது.

குல்தீப் ஒரே ஒவரில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்து ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியது, மனிஷ் பாண்டேவின் அற்புத கேட்ச், ஜடேஜாவின் ஆல்ரவுண்ட் பெர்பாமன்ஸ் என மற்ற வீரர்களும் தங்கள் பங்களிப்பை அளிக்க இந்தியா 2-1 என, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை விழ்த்தியது. இந்தியா அடுத்து நியூசிலாந்துக்குப் பயணம் செய்து அனைத்து வகையான போட்டிகளிலும் ஆடக் காத்திருக்கிறது. இந்திய மைதானத்தில் சாதித்த வீரர்களுக்கு உண்மையான சவால் அங்கே காத்திருக்கிறது. சவாலை சமாளித்து சாதிப்பார்கள் என்றே நம்புவோம்.