Published:Updated:

`ஸ்டேன்ட் இன் கேப்டன் ராகுல்; கைகொடுத்த பௌலர்கள்!' - டி20 வரலாற்றில் இந்தியாவின் புதிய சரித்திரம்

இந்திய அணி
இந்திய அணி ( ICC )

டி20 வரலாற்றில் முதல்முறையாக 5-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றிருக்கிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது டி20 போட்டி பே ஓவல் மைதானத்தில் நடந்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 4 போட்டிகளிலும் வென்று தொடரையும் வென்றிருந்தநிலையில், இந்தப் போட்டியில் கேப்டன் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பை ரோஹித் ஏற்றுக்கொண்டார். அதேபோல், கோலி களமிறங்கிய மூன்றாவது இடத்திலேயே தான் களமிறங்கப் போவதாகவும் ரோஹித் போட்டிக்கு முன்னதாகக் கூறியிருந்தார்.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

டாஸ்வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணிக்கு கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் இணை சரியான தொடக்கம் அமைத்துக் கொடுக்கவில்லை. கடந்த போட்டியைப்போல் விரைவிலேயே சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்து வெளியேறவே, கே.எல்.ராகுலுடன் கேப்டன் ரோஹித் ஷர்மா கைகோத்தார். இந்த ஜோடி, இரண்டாவது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தது. கே.எல்.ராகுல் 45 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா அரைசதமடித்தார்.

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

60 ரன்கள் எடுத்திருந்தநிலையில், காயம் காரணமாக அவர் பாதியிலேயே வெளியேறினார். அடுத்துவந்த ஸ்ரேயாஸ் ஐயர் 33 ரன்களும் கடைசி ஓவரில் அதிரடி காட்டிய மணீஷ் பாண்டே, 4 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது.

̀சிக்ஸூம் அடிக்கிறாரு; கிரெடிட்டும் தர்றாரு... என்னா மனுஷன்யா!'  ̀ஹிட்மேன்' ரோஹித் மீம்ஸ் ஆல்பம்

164 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் 3 ஓவர்களுக்குள்ளாகவே தொடக்க வீரர்களின் விக்கெட்டுகளை இழந்தது. பும்ரா ஓவரில் கப்தில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த முன்ரோ விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். அடுத்துவந்த டாம் ப்ரூஸும் ரன் அவுட்டாகி வெளியேறினார். ஆனால், 4-வது விக்கெட்டுக்குக் கைகோத்த விக்கெட் கீப்பர் ஷீஃப்ரெட் - ராஸ் டெய்லர் ஜோடி, சிறப்பாக ஆடி ரன் குவித்தனர். முதல் 10 ஓவர்கள் முடிவில் போட்டி முழுமையாக நியூசிலாந்து அணியின் கைகளில் இருந்தது. அடுத்த 60 பந்துகளில் 66 ரன்கள் தேவை என்ற நிலை அப்போது நியூசிலாந்து அணிக்கு இருந்தது. இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தது. இந்தப் போட்டியில் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே வீசிய ஒரே ஓவரில் நியூசிலாந்து அணி 34 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து பௌலர் கிறிஸ் பிராட் வீசிய ஒரே ஓவரில் யுவராஜ் சிங், 36 ரன்கள் குவித்திருந்தார். அதற்குப் பிறகு டி20 போட்டியின் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை ஷிவம் துபே தனதாக்கினார்.

ஷீஃப்ரெட் - ராஸ் டெய்லர்
ஷீஃப்ரெட் - ராஸ் டெய்லர்

இந்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணியால், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்ற இந்திய அணி, தொடரையும் 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது. அந்த அணி தரப்பில் 100-வது டி20 போட்டியில் விளையாடிய ராஸ் டெய்லர் 53 ரன்களும் ஷீஃப்ரெட் 50 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும் ஷைனி மற்றும் ஷ்ரதுல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். டி20 வரலாற்றில் 5 போட்டிகள் கொண்ட தொடரை ஒயிட்வாஷ் செய்து 5-0 என்ற கணக்கில் வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.

 `இந்திய அணி மீண்டும் நிரூபித்துவிட்டது... எங்களுக்கு ஏமாற்றம்தான்!'- வில்லியம்ஸன்

விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தநிலையில், காயம் காரணமாக பேட்டிங்கின்போது ரிட்டயர்ட் ஹர்டாகி வெளியேறிய ரோஹித் ஷர்மா மீண்டும் களமிறங்கவில்லை; ஃபீல்டிங் செய்யவும் அவர் வரவில்லை. இந்த நிலையில், அவருக்குப் பதிலாக கேப்டனாக விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் செயல்பட்டார். போட்டிக்குப் பின் இதுகுறித்து பேசிய கே.எல்.ராகுல், ``விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் இல்லாத நிலையில், வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

பும்ரா
பும்ரா

ஒருவர், இருவர் என்றில்லாமல் ஒவ்வொருவரும் வெற்றிக்காகத் தங்களது பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். எங்களது அணி மிகவும் இளமையான அணி. டிரெஸ்ஸிங் ரூமில் சீனியர், ஜூனியர் என்பதெல்லாம் இல்லை. எல்லோருடைய ஒரே நோக்கம் வெற்றிபெறுவதுதான். அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து விளையாடி வருகிறோம். கேப்டனாக இருந்தது சிறப்பான அனுபவத்தைக் கொடுத்தது'' என்றார். 3 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகனாகவும் 5 போட்டிகளில் 224 ரன்கள் குவித்த கே.எல்.ராகுல் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டடனர்.

பின் செல்ல