இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பை, நான்கு ஐபிஎல் கோப்பையை வென்றுக் கொடுத்த ஒரே கேப்டன் தோனிதான்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், ஐபிஎல் தொடரில் விளையாடும் தோனியை அனைவருமே கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில் மகேந்திர சிங் தோனி குறித்தும் அவருடன் விளையாடிய அனுபவங்கள் குறித்தும் இந்திய வீரர்களும், வெளிநாட்டு வீரர்களும் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் கே.எல் ராகுல் தோனி குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
தோனி குறித்து பேசிய கே.எல் ராகுல், “ எம். எஸ் தோனிதான் எனது முதல் கேப்டன். அவர் அணியைக் கையாளும் விதத்தையும் திரைக்கு பின்னால் அவர் செய்த வேலைகளையும் நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொருவரிடமும் எப்படி உறவை உருவாக்கிக் கொள்வது என்று நான் கற்றிருக்கிறேன்.

தோனி ஒரு கேப்டனாக தனது அணுகுமுறையில் மிகவும் எளிமையானவர். களத்தில் மிகவும் அமைதியாகவே செயல்படக்கூடியவர். ஒவ்வொரு வீரர்களைப் பற்றியும் அவருக்கு நன்றாகவே தெரியும். அதுதான் அவரை இவ்வளவு பெரிய தலைவராக உருவாக்கியது. `ஒரு கேப்டனாக நீங்கள் உங்கள் தைரியத்தை நம்புங்கள்!' என்று அவர் என்னிடம் கூறியிருக்கிறார்.
ஒரு விஷயத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தால் அது குறித்து எந்த ஒரு கேள்வியும் கேட்க மாட்டார். அதுமட்டுமின்றி ஒரு விஷயம் நன்றாக நடந்தாலும் சரி, நடக்க விட்டாலும் சரி அதைப் பற்றி யூகிக்க மாட்டார். அவை அவருக்கு நிறைய விஷயங்களில் உதவியிருக்கிறது. எல்லோரைவிடவும் அவர் வழக்கத்திற்கு மாறானவராக இருந்தார். அவர் தனது உள்ளுணர்வை நம்பியதால் மட்டுமே இந்த வெற்றி அவருக்கு கிடைத்திருக்கிறது" என்று தோனி குறித்து கே. எல் ராகுல் பகிர்ந்திருக்கிறார்.