கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸை கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார்.

டாஸின் போது தோனி சில சுவாரஸ்யமான விஷயங்களை பேசியிருந்தார். குறிப்பாக, கொல்கத்தா சார்ந்த அவரின் இளமைகால நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டது நெகிழ்வாக இருந்தது.
டாஸில் தோனி பேசியவை, 'நான் டாஸை வென்றிருந்தாலும் பந்துவீச்சைதான் தேர்வு செய்திருப்பேன். வென்றாலும் தோற்றாலும் எங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் எந்த மாற்றமும் இருக்காது. வீரர்கள் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருப்பார்கள். ஆனால், தொடர் வெற்றிகளின் மூலம் அணிக்கே ஒரு நம்பிக்கை கிடைத்திருக்கிறது. குறிப்பாக, பந்துவீச்சாளர்கள் குழுவாக இரு தனி நம்பிக்கையை பெற்றிருக்கின்றனர். இது ஒரு நீண்ட தொடர். இங்கே கற்றுக்கொள்ளும் விஷயங்களை அப்படியே தக்கவைத்துக் கொண்டு தேவையான தருணங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில வீரர்கள் மட்டும் பெர்ஃபார்ம் செய்வதை விட ஒரு அணியாக பெர்ஃபார்ம் செய்வதுதான் முக்கியம். ஒரே ஒரு நல்ல ஓவர், ஒரே ஒரு நல்ல கேட்ச், ஒரே ஒரு நல்ல ரன் அவுட் எல்லாவற்றையும் மாற்றி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும். அப்படியான பங்களிப்புதான் வீரர்களிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுகிறது.' இவ்வாறு தோனி பேசியிருந்தார்.
இது உங்களுக்கான வெளியூர் ஆட்டம். ஆனால், இங்கேயும் மஞ்சள் ஜெர்சி அணிந்த ரசிகர்கள்தான் அலைகடலென திரண்டிருக்கிறார்கள். எப்படி உணர்கிறீர்கள்? என ரசிகர்கள் குறித்து ஒரு கேள்வியை தோனியிடம் வீசினார் ரவிசாஸ்திரி, அதற்கு தோனி,

'இங்கே கொல்கத்தாவில் நிறையவே கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். தொடக்கத்தில் நான் பணி செய்த கரக்பூருக்கு இங்கிருந்து 2 மணி நேரத்தில் சென்றுவிட முடியும். எனக்கும் கொல்கத்தாவுக்குமான பந்தம் அங்கிருந்தே தொடங்கி நீள்வதாக நினைக்கிறேன்' என தோனி நெகிழ்வாக பேசியிருந்தார்.
தொடக்கத்தில் கரக்பூரில் இரயில்வேயில் தோனி வேலை பார்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதைத்தான் தோனி இப்போது நினைவுகூர்ந்திருக்கிறார்.