மீண்டும் ஒருமுறை அந்த அதிசயம் நிகழ்ந்து விடுமா? என்று கொல்கத்தா ரசிகர்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். பொதுவாக கடைசி ஓவரில் 25 ரன்களுக்கு மேல் இருந்தாலே டிவியை அணைத்து விடும் ரசிகர்கள் தான் அதிகம். ஆனால் இம்முறை 32 ரன்கள் கடைசி ஓவரில் தேவை என்று இருந்தபோது கூட பலரும் கடைசிவரை பார்த்து விட்டு தான் எழுந்தனர். காரணம் ரிங்கு சிங் என்னும் பெயர் அன்று கொடுத்த அதிர்ச்சி அவர்களை இன்னமும் மீள விடாமல் வைத்திருந்தது.

சன்ரைசர்ஸ் அணியின் 13 கோடி ரூபாய் அசையும் சொத்தான ஹாரி ப்ரூக் அதிரடி துவக்கம் தந்தார். வழக்கம்போல் மயங்க் அகர்வால் ஏமாற்றினாலும் ஹாரி ப்ரூக்கின் அதிரடி சிறிதும் குறையவில்லை. பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் என்று வர்ணிக்கப்படும் உமேஷ் யாதவை முதல் ஓவரிலேயே 14 ரன்களுக்கு பறக்க விட்டார் ப்ரூக்.
முதல் மூன்று ஓவரில் 43 ரன்கள் எடுத்து மிக அதிரடியான துவக்கத்தை பெற்றது சன்ரைசர்ஸ். அதன் பிறகு ஐந்தாவது ஓவரை வீச வந்த ரசல், அகர்வால் மற்றும் ட்ரிப்பாதி ஆகியோரை ஒரே ஓவரில் அவுட் ஆக்கினார். இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த ஓவரில் கூட சன்ரைசர்ஸ் 11 ரன்கள் எடுத்தது. பவர்பிளே முடிவில் 65 ரன்கள் எடுத்திருந்தது சன்ரைசர்ஸ்.
பவர்பிளே முடிந்த பின்பு 5 ஓவர்களுக்கு எந்த ஒரு பவுண்டரியும் வரவில்லை. இரண்டே இரண்டு சிக்ஸர்கள் மட்டும்தான் வந்திருந்தன. அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்திருந்த ப்ரூக் ஸ்பின்னர்கள் வந்தவுடன் திணறிப் போனார். ஆனால் ஆட்டத்தை அப்படியே கொல்கத்தாவிடம் தாரை வார்க்க விரும்பாத கேப்டன் மார்க்ரம், சுயாஷ் வீசிய 12வது ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்து அதிரடியை துவக்கினார். மீண்டும் வருண் சக்கரவர்த்தி பந்தில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் என அடித்து 25 பந்துகளில் அரை சதம் கடந்து அவரிடமே அவுட் ஆனார் மார்க்ரம்.அதன் பிறகு களத்திற்குள் வந்தார் அபிஷேக் ஷர்மா. ஸ்பின்னர்களை மிகச் சிறப்பாக கையாண்டார் இவர்.
வேகப்பந்துவீச்சாளர்கள் எனக்கு ஸ்பின்னர்கள் உனக்கு என ப்ரூக்கும் அபிஷேக்கும் பிரித்துக் கொண்டனர். இது மிக மிக சிறப்பான திட்டமாக அமைந்தது. ஃபெர்குசன் ஓவரில் ப்ரூக் 23 ரன்கள் எடுத்தால், நரைன் மற்றும் சுயாஷ் ஓவர்களில், அபிஷேக் ஒரு கை பார்த்தார்.

17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ரசல் பந்துவீச்சில் அவுட் ஆனார் அபிஷேக். இந்த விக்கெட்டோடு தனக்கு பந்து வீச முடியவில்லை என ரசல் காயத்தால் கிளம்ப, மற்ற 5 பந்துகளை வீச சர்தூல் தாக்கூர் வந்தார். ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த பலருக்கு இப்படி ஒருவர் ஆட்டத்தில் இருக்கிறார் என்பதே அப்போதுதான் நினைவுக்கு வந்தது. வீசிய 5 பந்துகளில் 14 ரன்களை விட்டுக் கொடுக்க, கடைசி ஓவரில் 55 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார் ப்ரூக். தன் பங்குக்கு கிளாசன் 6 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க சன்ரைசர்ஸ் 228 ரன்கள் எடுத்தது.
இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு அவர்களின் பேட்டிங் வீரர்கள் வேகமாக ரன்கள் சேர்ப்பார்கள் என்று பார்த்தால் வேகமாக வெளியேறுவதிலேயே குறியாக இருந்தனர். இருந்தாலும் உம்ரான் மாலிக் வீசிய ஆறாவது ஓவரில் கேப்டன் ராணா 28 ரன்கள் அடித்தார். கூடவே தமிழக வீரர் ஜெகதீசன் சற்று அதிரடி காட்ட கொல்கத்தா ரசிகர்கள் மெல்ல நிமிர்ந்து உட்கார்ந்தனர். ஆனால் மார்க்கண்டே பந்து வீச்சில் ஜெகதீசன் அவுட் ஆனார். அதிரடி வீரர் ரசலும் "வாங்கிய பணம் எடுத்த இரண்டு விக்கெட்டுக்கே சரியா போச்சு" என்ற தோரணையில் அதே மார்க்கண்டே பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

96 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தாலும் கொஞ்சமும் கொல்கத்தா ரசிகர்கள் பதட்டப்படாமல் இருந்தனர். காரணம் உள்ளே வந்தது ரிங்க்கு சிங்
என்னதான் இலக்கு பெரிதாக இருந்தாலும் ரிங்க்கு அடித்தாலும் அடிப்பார் என்று பலர் நம்பினர். கூடவே கேப்டன் நித்திஷ் ரானாவும் அதிரடியாக விளையாட, கொல்கத்தா மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது.

ஆனால் தமிழக வீரர் நடராஜன் வீசிய 17வது ஓவரில் மற்றொரு தமிழக வீரர் சுந்தரின் கைகளில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரானா. இருந்தாலும் 19வது ஓவரில் ரிங்க்கு 16 ரன்கள் எடுக்க கடைசி ஓவரில் 32 ரன்கள் வெற்றிக்கு தேவை என்று வந்து நின்றது.
தனது முதல் ஓவரில் 28 ரன்களை விட்டுக் கொடுத்த காஷ்மீர் எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக் கடைசி ஓவரை பந்து வீச வந்தார். ஆனால் இந்த முறை சுதாரிப்பாக வீசிய அவர் முதல் பந்தலையே ஷர்துல் தாகூரை வெளியேற்றினார். ஓவரின் ஐந்தாவது பந்தில் மட்டும் தான் ரிங்குவால் ஒரு சிக்சர் அடிக்க முடிந்தது. மற்ற ஐந்து பந்துகளில் வெறும் ஒரு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார் உமரான் மாலிக். இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ்.

முதல் இரண்டு போட்டிகளில் தோற்று புள்ளிப்பட்டியலில் கடைசியில் இருந்த சன்ரைசர்ஸ் தற்போது இரண்டு வெற்றிகளுடன் மேலே ஏறத் தொடங்கியுள்ளது. கீழே இருந்த அணிகள் எல்லாம் மெல்ல மேல ஏறத் தொடங்கியுள்ளதால் வரும் போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.