Published:Updated:

KKR vs LSG: இறுதிவரை மிரட்டிய பினிஷர் ரிங்கு; இருந்தும் ப்ளேஆஃப் சென்ற லக்னோ - திக் திக் நிமிடங்கள்!

ரிங்கு சிங்

த்ரில் வெற்றியோடு எலிமினேட்டர் சுற்றுக்குத் தகுதி பெற்ற லக்னோ ப்ளே ஆஃபிற்கு ஓரிடம் மட்டுமே மிஞ்சியிருப்பதை உறுதி செய்துள்ளது.

Published:Updated:

KKR vs LSG: இறுதிவரை மிரட்டிய பினிஷர் ரிங்கு; இருந்தும் ப்ளேஆஃப் சென்ற லக்னோ - திக் திக் நிமிடங்கள்!

த்ரில் வெற்றியோடு எலிமினேட்டர் சுற்றுக்குத் தகுதி பெற்ற லக்னோ ப்ளே ஆஃபிற்கு ஓரிடம் மட்டுமே மிஞ்சியிருப்பதை உறுதி செய்துள்ளது.

ரிங்கு சிங்
ஜுராசிக் பார்க்கிற்குள்ளே நடைப்பயிற்சி செய்யும் திகில் உணர்வை ரசிகர்களுக்கு லீக் சுற்றின் இறுதிக்காட்சிகள் தந்து வருகின்றன. தேர்வான, வெளியேற்றப்பட்ட அணிகள் தவிர்த்து மற்றவை அதே காட்டிற்குள் ஆர்சிபி வசம் வருடா வருடம் இருக்கும் கால்குலேட்டரை கடன் வாங்கி அதனை வழிகாட்டும் காம்பஸாக்கி குறுக்கும் நெடுக்குமாக ஓடிவருகின்றன.

சிஎஸ்கே டாப் 2-ல் முடித்ததனால் லக்னோவின் ப்ளே ஆஃப் கனவும் சற்றே ஆட்டம் கண்டது. வென்றால் தலை தப்பும், அதிலும் மிகப்பெரிய வித்தியாசத்தில் கேகேஆரை சுருட்டினாலோ சிஎஸ்கேவை கீழிறக்கி குவாலிஃபயர் 1-ல் நுழையும் வாய்ப்பு, தோற்றால் மும்பை மற்றும் ஆர்சிபிக்கான போட்டிகளின் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் நிலை என மூன்றுக்குமே வாய்ப்பிருந்தன. கேகேஆரிடம் இதுவரை வீழ்ந்ததே இல்லை என்பதும் அவர்களுக்குக் கூடுதல் நம்பிக்கை அளித்தது. கேகேஆருக்கோ ஊசியின் நுனியளவே மிஞ்சியுள்ள வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள மாபெரும் வெற்றி அவசியம். அதனால்தான் இலக்குத் தெரிந்தால் துரத்துவது எளிதென பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தனர்.

KKR vs LSG
KKR vs LSG

அதிக அனுபவமற்ற கரண் ஷர்மா மற்றும் மேன்கட்டை டீ காக்கோடு டாப் 3-ல் இறக்கி மத்திய மற்றும் பின் வரிசையினை ஸ்டோய்னிஸ், பதோனி, பூரண் உள்ளிட்ட அதிரடி மன்னர்களால் லக்னோ நிரப்பியிருந்தது. ஓப்பனர்களை மாற்றும் முடிவு தொடக்கத்தில் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. ஒற்றை இலக்கத்தில் கரண் வெளியேறினார். பவர்பிளே முடிந்ததும் வைபவ் அரோராவினை நித்தீஷ் ராணா இன்னமும் ஒரு ஓவர் வீசவைக்க லக்னோவினை சரியச் செய்த ஓவராக அது மாறியது. செட்டிலாகியிருந்த மேன்கேட் மட்டுமல்ல வைபவ்வின் பவுன்சரில் ஸ்டோய்னிஸும் வீழ்ந்தார். முந்தைய பந்து பவுன்சராகி ஸ்டோய்னிஸைத் திணறடிக்க அவர் எதிர்பாராதவாறு கிட்டத்தட்ட அதே லைனில் வந்த அடுத்த பவுன்சர் ஸ்டோய்னிஸை ஆட்டமிழக்க வைத்தது.

டீ காக் மற்றும் க்ருணால் பாண்டியா ஆகிய இரு இடக்கை பேட்ஸ்மேன்களைக் குறிவைத்து சுனில் நரைனை கேகேஆர் கொண்டுவர கைமேல் பலனாக க்ருணாலின் விக்கெட்டை மட்டுமல்ல அதற்கடுத்த வருணின் ஓவரில் டீ காக்கின் விக்கெட்டையும் லக்னோ பறிகொடுத்தது. அவர்களது பாதிக்கூடாரமே காலியானது. 10.1 ஓவர் முடிவில்கூட வெறும் 73 ரன்களை மட்டுமே லக்னோவால் சேர்க்க முடிந்தது. இந்தக் களத்தில் நடப்பு சீசனில் சராசரி முதல் இன்னிங்க்ஸ் ஸ்கோர் 196 என்றாலும் அதனை லக்னோவால் எட்ட முடியுமா என்ற நிலையே நீடித்தது. அதனை மாற்றியமைத்தது பூரண். முதல் பாதியில் தனது அணி செய்திருந்த தவறினை இரண்டாவது பாதியில் முடிந்தளவு பூரண் நேர் செய்தார்.

அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டதாக தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக விமர்சனக் கணைகளால் தாக்கப்பட்ட பூரண்தான் இந்த சீசனில் அவர்களது ஆபத்பாந்தவன். பல போட்டிகளில் தோல்வியின் கோரப்பிடியில் இருந்து லக்னோவினை அவரது பேட் மீட்டு எடுத்திருக்கிறது. அவர்கள் அணிந்திருந்த சிறப்பு ஜெர்ஸி அவருக்கு மேற்கிந்தியத் தீவுகளையும் கரீபியன் கிரிக்கெட் களக் காட்சிகளையும் நினைவுபடுத்தியதோ என்னவோ எல்லாப் பந்தினையும் அடித்து நொறுக்கும் எண்ணத்தோடே இறங்கியிருந்தார். உள்ளே வந்து சந்தித்த முதல் பந்திலேயே டீ காக் விக்கெட்டை வீழ்த்தியதற்கான அபராதமாக வருணின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிதான் ஆரம்பித்தார் பூரண். அதற்கடுத்த இரு பந்துகளுமே பவுண்டரி மற்றும் சிக்ஸராகி விக்கெட் விழுந்ததனால் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த கேகேஆருக்கு அபாய மணியை ஒலிக்க வைத்தது.

KKR vs LSG
KKR vs LSG

இந்தப் புள்ளியில் நித்தீஷ் ராணா எடுத்த முடிவுதான் சற்றே விசித்திரமானது. நன்றாக வீசியிருந்த ஹர்சித் ராணாவுக்கு ஒரு ஓவர் மிஞ்சியிருந்த நிலையிலேயே சுயாஸ் ஷர்மாவினை இம்பேக்ட் ப்ளேயராக அவருக்குப் பதிலாக உள்ளே கொண்டு வந்திருந்தார். இடைசொருகலாக அவரைக் கொண்டு வந்து விட்டதனால் இரண்டாவது பாதியில் இன்னொரு கூடுதல் பேட்ஸ்மேனை ஆடவைக்கும் வாய்ப்பினை கேகேஆர் இழந்திருந்தது. சுயாஸுக்கும் ஒரு ஓவர் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதில் அவர் 12 ரன்களை விட்டுத் தர அதோடு அவரது ஓவரும் நிறுத்தப்பட்டது. இந்தப் பாதிப்பை இறுதிவரை கேகேஆர் சந்தித்தது.

முதல் 60 பந்துகளில் 73 ரன்களை மட்டுமே எடுத்திருந்த லக்னோ அதற்கடுத்த 60 பந்துகளில் 103 ரன்களை விளாசி 177 என ஓரளவு நம்பிக்கை தரும் இலக்கை நிர்ணயித்திருந்தது. அது முழுவதுமாக பூரணின் கைங்கரியம்தான். அவரோடு இணைந்து ஆடிய பதோனி 21 பந்துகளில் 25 ரன்கள் என மெதுவாகவே ரன்களைச் சேர்த்திருந்தார். அடுத்தடுத்து வந்தவர்களும் பெரிதாக மிளிராத நிலையில் 30 பந்துகளில் பூரண் சேர்த்திருந்த 58 ரன்கள்தான் லக்னோவுக்கு பக்கபலமாக இருந்தன. குறிப்பாக கடைசி 4 ஓவர்களில் 54 ரன்களை கசிய விட்டு கேகேஆர் சறுக்கியிருந்தது.

லக்னோவுக்கு குவாலிஃபயருக்கான வாய்ப்பினைப் பெற கேகேஆரினை 79 ரன்களுக்குள் சுருட்ட வேண்டிய நிலை. கேகேஆரின் வசமிருந்த ஜேசன் ராய், ரிங்கு சிங் உள்ளிட்டவர்கள் அதனை நடக்கவிட மாட்டார்கள் என்பதே எதார்த்தம். அதேநேரம் கிட்டத்தட்ட 15 - 20 ரன்களை லக்னோ குறைவாக அடித்திருந்ததால் கேகேஆருக்கு அது பெரிய சவாலும் இல்லை என்பதால் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடம் என்பதை எல்லாம் மறந்து சற்றே கவனத்தோடே லக்னோ இரண்டாவது இன்னிங்ஸை அணுக வேண்டி இருந்தது. அதே சமயம் எட்டக்கூடிய இலக்குதான் என்றாலும் ரன்ரேட் கணக்குதான் கேகேஆரைத் தள்ளாட வைத்தது.

KKR vs LSG | Rinku Singh
KKR vs LSG | Rinku Singh

ஆர்சிபியிடமிருந்து நான்காவது இடத்தை அபகரிக்க 7.5 ஓவர்களில் 177 ரன்களை எட்ட வேண்டும் என்பது கேகேஆருக்கான சவால். அதாவது ஓவருக்கு 22 ரன்கள் வரை குவிக்க வேண்டும். ப்ரைம் டைமிலிருந்த கெய்லும் பொல்லார்டும் இருபக்கமும் நின்று ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு பௌலர்களை நையப் புடைத்தால் மட்டுமே எட்டக்கூடிய இலக்கு. கேகேஆரிடம் ப்ளைட்டைத் தவற விட்டு விடக் கூடாதென்று விரையும் பயணியின் அவசரம் தொடக்கத்தில் தெரிந்தது. லெஃப்ட் ரைட் காம்பினேஷனை மனதில் நிறுத்தி வெங்கடேஷ் முன்கூட்டி இறக்கப்பட்டிருக்க அது பெரிதாகவே பலனளித்தது. ஜேசன் ராய் மற்றும் வெங்கடேஷ் அதிரடியாகத் தொடங்கினர். பவர்பிளே முழுவதும் வரிசையாக பவுண்டரிகளின் அணிவரிசைதான். 9 பவுண்டரிகளையும், இரண்டு சிக்ஸர்களையும் விளாசியிருந்தனர்.

பவர்பிளேயின் இறுதி ஓவரில் வெங்கடேஷ் தனது விக்கெட்டை கிருஷ்ணப்பா கௌதமிடம் விட்டிருந்தாலும் அந்த சமயத்திலேயே 61/1 ரன்களை கேகேஆர் எட்டி விட்டது. எட்டாவது ஓவர் வரை இந்த அதிரடி தொடர்ந்தது. ஆர்சிபியின் நான்காவது இடம் கிட்டாதென்றாலும் போட்டியையாவது வெல்ல வேண்டுமென்ற முனைப்பில் தொடர்ந்து அதிரடியாகவே ஆடினர். 9-வது ஓவரில்தான் ரவி பிஷ்னாய் கொண்டு வரப்பட்டார். வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே நித்தீஷ் ராணா ரவி பிஷ்னாயின் கூக்ளியில் சிக்கினார். முதல் இரு பந்துகளுமே கூக்ளிதான் என்றாலும் அதனை வாசித்தறிய முடியாமல் நித்தீஷ் ராணா வெளியேறினார்.

பவர்பிளேவுக்கு உள்ளே இரு ஓவர்களையும் அதன்பின் ஒரு ஓவரையும் க்ருணால் பாண்டியா வீசியிருந்தார். அந்த மூன்று ஓவர்களில் 25 ரன்களையும் கொடுத்திருந்தார். ஜேசன் ராய் ஹாட்ரிக் பவுண்டரிகளோடெல்லாம் சுற்றலில் விட்டார். அதற்கான பழிவாங்கும் படலமாக தனது ஸ்பெல்லின் இறுதிப் பந்தில் 45 ரன்களை எடுத்து களத்தில் இருந்த ஜேசன் ராயினை க்ருணால் வெளியேற்றினார். 10 ஓவர்கள் முடிந்திருந்த நிலையில் 82/3 என எட்ட வேண்டிய இலக்கில் கிட்டத்தட்ட சரிபாதியினை கேகேஆர் எட்டியிருந்தது.

KKR vs LSG
KKR vs LSG

இதன்பிறகு ஆட்டத்தை லக்னோ இறுக்கிப் பிடித்தது. ரன்ரேட் சரியத் தொடங்கியது. ஜேசன் ராய் ஆட்டமிழந்த போது 8.2 ஆக இருந்த ரன்ரேட் குர்பாஸ் வெளியேறுகையில் 8-க்கு இறங்கி ரசல் 15.4 ஓவரில் வெளியேறும் போதோ 7.8-க்கு இறங்கிவிட்டது. இது தேவைப்படும் ரன்ரேட் தொடர்ந்து அதிகரிக்க வழிவகுத்து விட்டது. அதுவும் டெத் ஓவர்களில் நுழையும் சமயத்தில் ரசலின் விக்கெட் வீழ்ந்ததும் கேகேஆருக்கு சற்றே பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. ஆனாலும் கூட இந்த சீசன் முழுவதும் பல சம்பவங்களை அணிக்காக செய்த ரிங்கு சிங் களத்தில் நின்றதால் கேகேஆரின் பக்கம் கொஞ்சமாக நம்பிக்கை மீதயிருந்தது.

லக்னோ தனது முதல் பாதியில் சறுகி இரண்டாவது பாதியில் மீண்டிருந்தது. கேகேஆரோ சரிபாதி ஆட்டத்தைச் சரியாகவே ஆடியிருப்பினும் நடுவிலே கொஞ்சமாய் கோட்டை விட்டிருந்தது. அதனை நேர் செய்ய ரிங்கு சிங் இறுதி ஓவர்களில் நிரம்பவே மெனக்கெட வேண்டியிருந்தது. நவீன் வீசிய போட்டியின் 19-வது ஓவரை டார்கெட் செய்து 20 ரன்களைச் சேர்த்து விட்டார். இறுதி ஓவரில் 21 ரன்களை எட்டினால் வெற்றி என்ற நிலை கேகேஆருக்கு. யாஷ் தயாலின் ஓவரில் நடந்ததன் மீட்டுருவாக்கம் யாஷ் தாக்கூரின் ஓவரிலும் நடக்கும் என நினைத்தால் ஒரு ரன் வித்தியாசத்தில் கேகேஆர் தோல்வியைத் தழுவியது. இம்பேக்ட் ப்ளேயர் விஷயத்தில் கேகேஆர் செய்த தவறு இறுதி ஓவரில் பௌலரான வைபவினை மறுபக்கம் இருக்க வைத்து அதனால் ரிங்கு சிங் ஸ்ட்ரைக்கினை தானே தக்க வைத்துக் கொள்ள இரு பந்துகளை டாட் பால் ஆக்கும் வரை நீண்டது.

33 பந்துகளில் 67 ரன்களை சேர்த்த ரிங்கு சிங்கின் ஆட்டம் வீணானதென்றாலும் இந்திய அணிக்கான ஒரு சிறந்த ஃபினிஷர் உருவாகி வருவதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். வாழ்வில் கடந்த பாதை தந்த அனுபவமோ என்னவோ அழுத்தத்தைக் கையாளுவது அவருக்கு மிக இயல்பாக வருகிறது. தோனிக்குச் சொல்லப்பட்டது போல இறுதி ஓவர்களில் ரிங்கு சிங் களத்தில் இருந்தால் பதற்றம் பௌலருக்கே.
ரிங்கு சிங்
ரிங்கு சிங்

த்ரில் வெற்றியோடு எலிமினேட்டர் சுற்றுக்குத் தகுதி பெற்ற லக்னோ ப்ளே ஆஃபிற்கு ஓரிடம் மட்டுமே மிஞ்சியிருப்பதை உறுதி செய்துள்ளது. தலா 14 புள்ளிகளோடு உள்ள மும்பையும் ஆர்சிபியும் தத்தமது இறுதி ஆட்டத்தில் தனித்தனியாக மீதமுள்ள ஓர் இடத்துக்காக மோதவுள்ளன. ஆர்சிபி ஆட இருப்பது நடப்பு சாம்பியனான குஜராத்துடன் என்பதால் சவால் சற்று அதிகமே.

ராஜஸ்தானுக்கான வாய்ப்பும் நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதால் மும்முனை போட்டியில் வெளியிருந்து அந்த அணியும் சன்ரைசர்ஸுக்கும், குஜராத்திற்கும் தனது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டிருக்கும்.