ஐ.பி.எல் என்று சொன்னால் உங்களுக்கு எந்த வீரர் நினைவுக்கு வருவார்?
தோனி, கோலி, ரெய்னா, ரோஹித், பும்ரா….
வெளிநாட்டு வீரர்கள் என்றால்?
கெய்ல், டி வில்லியர்ஸ், மலிங்கா, பிராவோ, நரைன், வார்னர்…
அந்தப் பட்டியல் இப்படியாக நீளும். நூற்றுக்கணக்கான ஸ்டார் பிளேயர்கள் ஆடிய ஒரு தொடரில் இவர்கள் சட்டென ஞாபகம் வருவதற்குக் காரணம் - எண்கள்.
ஒன்று, இவர்களெல்லாம் டாப் ரன் ஸ்கோரர்களாக இருப்பார்கள். இல்லை பர்ப்பிள் கேப் வின்னர்களாக இருப்பார்கள். அட்டகாசமான, அமர்க்களமான, விவேகமான, வீரமான… அஜித் படத்தின் இன்னபிற டைட்டில்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அப்படியான பர்ஃபாமென்ஸ்களைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் மாஸ்டர்பீஸ் பர்ஃபாமர்களாக இருந்திருப்பார்கள்.

பொலார்ட் அப்படியில்லை. சீசனுக்கு 450 ரன், 4 மேன் ஆஃப் தி மேட்ச் அவார்ட் போன்ற பர்ஃபாமென்ஸ்களெல்லாம் வராது. சதங்கள் வாய்ப்பே இல்லை - அட, இந்தக் கடைசி சென்னை போட்டியில்தான் முதல் முறையாக 80 ரன்களைத் தாண்டியிருக்கிறார். ஒரு சீசனில் அடித்த அதிகபட்ச ஸ்கோரே 420 ரன்கள்தான். 150 ஐபிஎல் இன்னிங்ஸுக்கு மேல் விளையாடிய பேட்ஸ்மேன்களில் குறைந்த ரன் எடுத்திருப்பவர் இவரே. 2000 ரன்களுக்கு மேல் கொடுத்த பௌலர்களில், குறைவான விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பதும் இவரே.
நம்பர்கள் இவருக்குச் சாதகமாக இல்லையென்றாலும், கிரிக்கெட் வல்லுநர்களிடம் ‘ஆல்டைம் ஐபிஎல் லெவனைத் தேர்ந்தெடுங்கள்’ என்று சொன்னால், எல்லோரும் அதில் பொலார்ட் பெயரை சேர்ப்பார்கள். ஏனெனில், பொல்லார்டே ஒரு மாஸ்டர்பீஸ்!
'‘என்ன பொலார்ட் மாஸ்டர்பீஸா. கெய்ல் மாதிரி 175 அடிச்சிருக்காரா, ஏபிடி மாதிரி புயல்வேக சதம் அடிச்சிருக்காரா, இல்ல மலிங்கா மாதிரி ஸ்டம்புகளை சிதறவிட்டிருக்காரா’ என்று நீங்கள் கேட்கலாம். ‘'மாஸ்டர்பீஸுக்கு அர்த்தம் தெரியுமா முதல்ல’' என்றுகூடக் கேட்கலாம்.
நாம் ஏன் முதலில் அதற்கான அர்த்தத்தைப் பற்றிப் பார்க்கக்கூடாது. மாஸ்டர்பீஸ் - இந்த வார்த்தைக்கான அர்த்தம் புரிந்துகொள்ள ஒரு கதை சொல்லவா!!
O.Henry என்ற அமெரிக்க எழுத்தாளர் சுமார் 100 வருடங்களுக்கு முன்னால் ‘The Last Leaf’ என்று ஒரு கதை எழுதியிருந்தார். நம்மில் பலரும் 12-ம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் அந்தக் கதையைப் படித்திருப்போம். அதைத்தான் இப்போது நான் சொல்லப்போகிறேன்.
கிரீன்விச் என்ற கிராமத்தில் வசித்துவரும் பெர்மான் என்ற ஓவியருக்கு மாஸ்டர்பீஸ் ஓவியம் ஒன்று வரையவேண்டும் என்று ஆசை. அதற்காகப் பல வருடங்களாகத் தவம் கிடக்கிறார். அவருக்குப் பக்கத்து வீட்டில் இருக்கும் ஜான்சி என்ற இளம் பெண் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். மிகவும் கஷ்டப்படும் ஜான்சி, வீட்டுக்கு வெளியே சுவற்றில் படர்ந்திருக்கும் ‘ஐவி’ கொடியைப் பார்த்துக்கொண்டே இருப்பாள்.
பனிக்காலத்தில் அதன் இலைகள் ஒவ்வொன்றாக விழத்தொடங்க, தன் தோழியிடம், ''இந்தக் கொடியின் கடைசி இலை விழும்போது நான் இறந்துவிடுவேன்'' என்று சொல்லிக்கொண்டே இருப்பாள். யார் என்ன சொன்னாலும் அவளுக்கு நம்பிக்கை பிறக்காது. ஒவ்வொரு இலையாக விழுந்து, கடைசியில் ஒரேயொரு இலை மட்டும்தான் எஞ்சியிருக்கும். நாள்கள் கடக்கும். ஆனால், அந்த இலை விழாது. கொஞ்சம் கொஞ்சமாக ஜான்சிக்கு நம்பிக்கை பிறக்கும். விரைவில் குணமாகிவிடுவாள்.

அவள் குணமானவுடன், ஓவியர் பெர்மான் நிமோனியாவால் இறந்துவிட்டார் என்ற செய்தி வரும். விசாரித்தால், கடும் பனிக்கு நடுவே, எதிரில் இருக்கும் அந்தச் சுவற்றில் இரவு முழுவதும் அந்த இலையை வரைந்துகொண்டிருந்தார் என்று அவர்களுக்குத் தெரியவரும். ஜான்சியின் மனநிலை அறிந்து குளிரைப் பொருட்படுத்தாமல், உண்மையான இலை போலவே ஓர் ஓவியத்தை வரைந்திருப்பார் பெர்மான். எந்த இலை, ஜான்சிக்கு நம்பிக்கை கொடுத்து உயிரைக் காப்பாற்றியதோ, அது ஓர் ஓவியம். பெர்மான் வரைந்த மாஸ்டர்பீஸ் ஓவியம்!
ஒட்டுமொத்த உலகமும் கொண்டாடும் விஷயங்கள் மட்டுமே மாஸ்டர்பீஸ் அல்ல. தனி ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் விஷயங்களுமே மாஸ்டர்பீஸ்தான். அந்த வகையில் பொலார்ட் எத்தனை மாஸ்டர்பீஸ்களைக் கொடுத்திருக்கிறார் என்பது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்குத் தெரியும்.
சாதாரணமான போட்டிகளில் சாதனைகள் செய்பவர் அல்ல அவர். ஹீரோவைக் குறிவைத்து வரும் புல்லட், அவர் நெற்றியை அடையும் நெரத்தில், குறுக்கே பாயும் பராக்கிரமசாலி அவர். தன் ஒட்டுமொத்த வித்தையையும் முக்கியமான போட்டிகளில் ஒட்டுமொத்தமாக இறக்குவார்.
சூப்பர் கிங்ஸுக்கு எதிராக கடைசியாக அடித்த அந்த 87 ரன்களெல்லாம் வெறும் சாம்பிள்தான். ஐபிஎல் இறுதிப் போட்டியின் வரலாற்றை எடுத்தால் தெரியும் கரண் ஏட்ரியன் பொலார்ட் செய்திருக்கும் சம்பவங்கள் பற்றி.
ஒரு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில், 10-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்கள் மட்டுமே எடுத்த ஒரு அணியால் வெற்றி பெற முடியுமா! சாம்பியன் ஆக முடியுமா! அந்த சூழ்நிலையில் பொலார்ட் என்ற போர்வீரனை நிறுத்தினால் நிச்சயம் முடியும். 32 பந்துகளில் 60 ரன்கள். 148 என்ற டீசன்ட் ஸ்கோர் எடுக்கிறது மும்பை இந்தியன்ஸ். சாம்பியனும் ஆகிறது.

ஒவ்வொரு இறுதிப் போட்டியிலும் பௌலர்களுக்கு மரண பயத்தைக் காட்டியிருக்கிறார் பொலார்ட். 2015 ஃபைனலிலும் இவர்தான் டாப் ஸ்கோரர். 2010 ஃபைனலில்கூட இவர் விக்கெட்டை வீழ்த்தியதுதானே சென்னையை வெல்லவைத்தது.
பேட்டிங்கால் மட்டுமல்ல, தன் ஒற்றை கேட்சாலும்கூட ஆட்டத்தின் போக்கை மாற்றியிருக்கிறார் இவர். 2017 ஃபைனல் - 50 பந்துகளில் புனேவுக்கு 59 ரன்கள் தேவை. ரஹானே, ஸ்டீவ் ஸ்மித் பார்ட்னர்ஷிப் 54 ரன்கள் எடுத்திருக்கும். ஆட்டம் முழுக்கவும் புனேவின் கைகளில் இருக்கும். ஒரு அசத்தலான டைவிங் கேட்ச், ரஹானேவை வெளியேற்றும். மும்பை மீண்டும் ஆட்டத்துக்குள் வரும். பின்னர் வழக்கம்போல், ஆட்டத்தை மாற்றும் மும்பை இந்தியன்ஸ். அன்று, ஜான்சன், மலிங்கா, பொலார்ட் போன்றவர்கள் கடைசி கட்டத்தில் மிரட்டினார்கள். ஆனால், ஆட்டத்தை மாற்றியது என்னவோ இவர் பிடித்த கேட்ச்தான். சிவாஜி ஸ்டைலில் சொல்லவேண்டுமென்றால், விதை பொலார்ட் போட்டது!

வெற்றி பெறவைப்பார் என்பதைத்தாண்டி, இந்த 12 ஆண்டுகளில் என்ன மாதிரியான தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருக்கிறார் என்பது முக்கியமானது. தன் அதிரடியால், அசத்தல் கேட்சுகளால் அவர் அணியை வெற்றி பெற மட்டும் வைக்கவில்லை. அணிக்கு உத்வேகம் அளிப்பவர், அணியின் மனநிலையை அப்படியே மாற்றக்கூடியவர்.
ஐபிஎல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், ஒவ்வொரு சீசனும் எப்படியும் ஒரு விருது வாங்கிவிடுவார். ஆரஞ்ச் கேப், தொடர் நாயகன் போன்ற விருதுகள் இல்லாவிட்டாலும், Catch of the season, Super Striker of the season, Most catches of the season, Debut performance of the season என்று விருதுகளை அடுக்கிக்கொண்டே இருந்திருக்கிறார். அதனால்தான், இன்னும் மும்பை இந்தியன்ஸின் அசைக்க முடியாத வீரராக, துணைக் கேப்டனாக விளங்குகிறார்.
மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மிகப்பெரிய போட்டியாக நினைப்பது, இறுதிப் போட்டிகளையும், சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டிகளையும்தான். அந்தப் போட்டிகளை இவரைப் போல் யாரும் மும்பைக்கு வென்றுகொடுத்ததில்லை. அதனால், மும்பை ரசிகர்களுக்கு கெய்ரான் பொலார்ட் எப்போதுமே மாஸ்டர்பீஸ்தான்!