உடைவாளை ஒப்படைத்து, ஒதுங்குவதாகச் சொன்ன சேனைத் தலைவனை ராஜகுருவாக்கியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். டி20 லீக் அணிகளுக்கும் அதனுடன் பயணிக்கும் வீரர்களுக்குமான நட்பு, பொதுவாக ரயில் ஸ்நேகம்தான். அதன் ஆயுட்காலம் சொற்பமே. தேசிய அணிகளில் ஆடும் வீரர்களின் மீது ஏற்படும் அதிதீவிர அபிமானம், அவர்கள்மீதும் அரும்புவதுகூட அரிதுதான். ஆனால், கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக மும்பை அணியின் முதுகெலும்பாகப் பொல்லார்டுதான் வலம் வந்திருக்கிறார். அதுவும் அவர்மீதான ரசிகர்களின் நேசமோ அளப்பரியது.
2010-ல் மும்பையின் கரை தொட்டு இந்தக் காட்டாறு ஓடத் தொடங்கிய போது, எதிரணிகளுக்குத் தெரியாது தங்களது கிழக்கிலும் இனி அஸ்தமனமே என்று. குறிப்பாக, சி.எஸ்.கே-வுக்குத் தெரியாது தங்களது கோப்பைக் கனவுகளுக்குக் கல்லறை கட்டவே கிளம்பி வந்திருக்கிறார் என்று. மும்பை நிர்வாகமோ, ரசிகர்களோகூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், இந்தக் காட்டு வெள்ளம் இத்தனை காலம் வடியாமல் தன்னுடைய தாக்கத்தை எல்லாத் திக்கிலும் எதிரொலிக்க வைக்கும் என்று. காலங்கள் ஓடினாலும் நீர்த்துப் போகாமல் மும்பை வாங்கியுள்ள ஐ.பி.எல் கோப்பைகளிலும், சாம்பியன்ஸ் டிராபிகளிலும் பொல்லார்டின் பெயர் ஏதோ ஒருமுனையில் எழுதப்பட்டுக்கொண்டேதான் இருந்திருக்கிறது.

பேட்ஸ்மேனாக, பௌலராக, ஃபீல்டராக என ஏற்ற எந்தக் கதாபாத்திரத்திலும் இவர்மீது பாய்ந்த வெளிச்சம் மங்கவேயில்லை. அதைப் பன்மடங்காக அணியின் பக்கம் எதிரொளிக்கவும் வைத்திருக்கிறார்.
டெத் ஓவர்கள் மரண பயம் காட்டுபவை, முந்தைய பேட்ஸ்மேன்கள் செய்த தவறுகளையும் ஈடுகட்ட வேண்டும், தன்னுடைய ஸ்ட்ரைக்ரேட்டை ஜெட்டில் ஏற்றி, அணியின் ரன்ரேட்டை ராக்கெட்டில் ஏற்றி, வெல்வதற்கான உத்தரவாதமுள்ள இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அதிலும் சேஸிங் என்றாலோ, நாக் அவுட் போட்டிகள் என்றாலோ, அழுத்தம் கொதிகலனாகச் சூடேற்றும். இத்தனையையும் தாக்குப்பிடிக்கும் ஒரு ஃபினிஷராக, கண்டிஷனில் உள்ள என்ஜினாக தனது ஆட்டத்திலும் அதே வெப்பத்தின் கூறுகளைப் பொல்லார்டு பலமுறை திணித்திருக்கிறார், பயத்தின் அர்த்தத்தை எதிரணிக்குப் புகட்டியிருக்கிறார், நின்று ஆட்டங்காட்டியிருக்கிறார், வெறும் ஆறு பந்துகளுக்குள் ஆட்டத்தின் போக்கையே தனது கைக்குள் கொண்டுவந்திருக்கிறார்.
CSK's Nightmare ஆக அவர்களது தூக்கத்தையே தொலைக்க வைத்தவர் பொல்லார்டுதான். அவர் மட்டும் இல்லையென்றால் இன்னமும் ஒரு சில கோப்பைகள் சி.எஸ்.கே-வின் வசமாகியிருக்கும்.
10 பந்துகளில் 27 ரன்களை விளாசி, சி.எஸ்.கே-வைத் தோல்வியின் விளிம்புக்கு நகர்த்திய 2010 ஃபைனலைச் சொல்வதா?
32 பந்துகளில் 60 ரன்களை அடித்து நொறுக்கி, Wagon Wheel-ன் எல்லா மூலைகளையும் அளந்து கோப்பையை மும்பையின் கையில் வாங்கித் தந்த 2013 ஃபைனலைச் சொல்வதா?

எனது இருப்பு ஒன்றே அணியை சாம்பியனாக்கப் போதுமானது என இன்னுமொரு மும்பை - சி.எஸ்.கே என்கவுண்டரில் 200 ஸ்ட்ரைக்ரேட்டோடு நிரூபித்து, இன்னுமொரு கோப்பையை வென்றதைச் சொல்வதா?
2018-ல் மோசமான ஃபார்மால் இருட்டிலிருந்து, பின்பு மீண்டெழுந்து, 2019 இறுதிப்போட்டியில் மற்றவர்கள் சராசரி ஆட்டத்தை வெளிப்படுத்த, "சி.எஸ்.கே-வை நான்தான் சிதறடிப்பேன்" என இறுதி நேரத்தில் இறங்கி வந்து அடித்து ரன்னேற்றிய அந்த பிரமாண்ட ரட்சிக்கும் பறவையைப் பாராட்டித் தீர்ப்பதா?
எதைச் சொல்வது? எதை விடுவது?
பேட்ஸ்மேனாக மட்டுமல்ல, சமயத்தில் பௌலராகவும் மும்பை இவரால் மோட்சம் அடைந்திருக்கிறது. ஸ்லோ பிட்ச்களில் இவரது ஸ்லோ பால்கள் ஸ்லோ மோஷனில் பேட்ஸ்மேனுக்கான ஸ்லோ பாய்சனாக மாறியிருக்கின்றன. அவர் மும்பைக்காக எடுத்துள்ள அந்த 69 விக்கெட்டுகளுமே திருப்புமுனையாக மிகத் தேவையான தருணத்தில்தான் வந்து சேர்ந்திருக்கின்றன.
ஃபீல்டராகவோ லாங் ஆனும் லாங் ஆஃபும் இவரது கோட்டை. அதைத் தகர்த்து முன்னேற பந்தே சற்று யோசிக்கும். தடுக்கப்பட்ட ரன்கள் ஒவ்வொன்றும் நமது கணக்கில் எடுக்கப்பட்ட ரன்கள் எனச் சொல்லப்படுவதுண்டு.
ஒவ்வொரு போட்டியிலும் 10 - 15 ரன்கள் பொல்லார்டின் அதிவேகப் பாய்ச்சலால் தடுக்கப்பட்டிருக்கின்றன. ஹர்ஷா போக்லே ஒருமுறை, "பொல்லார்டால் ஒரு கேட்சைப் பிடிக்க முடியாதென்றால், அது பிடிக்கவே முடியாததாகத்தான் இருந்திருக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

அணிக்கு எல்லாமுமாக இருப்பவர்தான், பல சமயங்களில் அணியை அரியணையை அலங்கரிக்க வைத்தவர்தான், ஆனாலும் அதுகுறித்த அகந்தையோ பெருமிதமோ சிறிதளவும் இருக்காது. அணிக்குத் தன் பங்கிற்கு என்ன செய்ய வேண்டும் என யோசித்திருக்கிறாரே தவிர, அதிலிருந்து தனக்கான லாபம் என்ன என கேப்டன் பதவியின் பக்கம் அவரது பார்வைகூடப் படிந்ததில்லை. அது பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டிருக்கிறது. 2019-ல் ரோஹித்தின் காயத்தால் பொல்லார்டு தற்காலிக கேப்டனாக்கப்பட்டார். தோல்வி நிச்சயம் எனக் கருதப்பட்ட போட்டியில் 157 ஸ்ட்ரைக்ரேட்டில் வந்த 83 ரன்களால் அணியை வெல்லவும் வைத்தார் பொல்லார்டு.
அதன் பிறகு, "நிரந்தரக் கேப்டனாகும் எண்ணம் உள்ளதா?" என்ற கேள்விக்கு, "ரோஹித்தான் எப்போதும் கேப்டன், அவர் சரியாகி வந்ததும் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அணிக்கான அடுத்த பணி என்ன என யோசித்தவாறு ஃபீல்டிங்குக்கு நகர்வேன்" எனக் கூறியிருப்பார்.
ப்ளேயிங் லெவனிலேயே உட்கார வைக்கப்படாமல்,வெளியே அமர வைக்கப்பட்ட போட்டியில்கூட தண்ணீர் பாட்டில்களோடு ட்ரிங்ஸ் பிரேக்கில் நடு மைதானத்தில் நின்றுகொண்டிருப்பார். கட்டப்பா, கர்ணன் எனப் என்ன பெயரிட்டு அழைத்தாலும், அணிக்கான ரட்சகன் இவர் என்பதே உண்மை, அதுவும் சுய சாதனைகள் மீதோ, தனது நலம் குறித்த சிந்தனைகள் மீதோ எண்ணத்தைப் படியவிடாத சுயநலமற்ற டீம் பிளேயர். இந்த ஒரு காரணத்திற்காகவே காலமெல்லாம் அவரை மும்பை கொண்டாடலாம், அவர்கள் கொண்டாடியும் வருகிறார்கள்.
2015-ல் அவரது உச்சத்தையும் மும்பை பார்த்திருக்கிறது, 2018-ல் அவரது சறுக்கலையும் சந்தித்திருக்கிறது. ஆனால், அவரை எந்த நிலையிலும் மும்பை அணி விட்டுத் தரவில்லை, அவரும் எந்த நிலையிலும் மும்பை இந்தியன்ஸ் தவிர்த்து வேறு அணியை நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

அணியின் மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, எழுச்சி, வீழ்ச்சி என அத்தனை உணர்வுகளிலும் அவரும் நிழலாகத் தொடர்ந்திருக்கிறார். கண்ணீரையும் ஆனந்தத்தையும் சமமாகப் பங்கிட்டிருக்கிறார். 15 டி20 தொடர்களில் பல அணிகளுக்காக ஆடியிருக்கிறார்தான், பல சாதனைகளையும் நிகழ்த்தியிருக்கிறார்தான். அவரது கேமியோக்களும் மேஜிக்கல் ஸ்பெல்களும் இன்னமும் அவரது பெயரைப் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றனதான். எனினும், மும்பை இந்தியன்ஸுக்கும் அவருக்குமான பந்தம் பணத்தினால் கட்டமைக்கப்பட்டதில்லை. மும்பைக்காக ஆட முடியாவிட்டாலும், மும்பைக்கு எதிராக ஆட என்னால் முடியாது என்ற அவரது ஒவ்வொரு வார்த்தையும் அந்த ஆழமான நேசத்தின் சாட்சியங்கள்தான். அக்மார்க் முத்திரை பதித்த அன்பு மொழிதான் அது.
அவர் ஆடும் காலகட்டத்தில் 'இதுதான் அவரது ரோல்' என்று மும்பை வரையறுத்ததில்லை. மேலிருந்து கீழ் வரை எங்கு வேண்டுமானாலும் ஆட வைக்கப்பட்டிருக்கிறார். எல்லா சமயங்களிலும் ஏதோ ஒரு வகையில் தன்னாலான தாக்கத்தை ஏற்படுத்தியும் இருக்கிறார். ஸ்னோ பௌலிங்கில் கட்டைகளை அடித்து நொறுக்கும் பந்துபோல பெரிய அதிர்வுகளையே ஆட்டத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார். அவர் ஏற்படுத்திய அதிர்வலைகள் எத்தனையோ அணியினை இன்னமும் நினைத்த மாத்திரத்தில் பயங்கொள்ள வைத்துக்கொண்டிருக்கின்றன.
இப்போதுகூட அவரது ஓய்வு, சி.எஸ்.கே உள்ளிட்ட பல அணிகளை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கிறது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் தனது சாமர்த்தியத்தையும் அன்பையும் ஒருங்கே இங்கே காட்டிவிட்டது. அவரைப் பயிற்சியாளர் ஆக்கி களத்துக்குள் செய்த மாயங்களை வெளியிலிருந்தும் அவர் தொடர வழி செய்திருக்கிறது. அதிலும் அணி, அடுத்த நிலைக்கு நகர வேண்டுமென்பதற்காக இந்த ஓய்வு என அவர் சொன்னதிலிருந்து அணியின் நலன்மீதான கலப்படமற்ற காதல் இன்னுமொரு முறை நிருபிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சம்பவங்களின் சாம்ராட்டை, பட்டாக் கத்தியாக காற்றைக் கருணையின்றிக் கிழிக்கும் அவரது பேட்டினை, பந்தை ஆயுதமாக்கி விக்கெட்டுகளை வேட்டையாடும் லாகவத்தை, எல்லைகளை ஆக்கிரமிக்கும் அந்த ஃபீல்டிங்கை, எல்லாவற்றுக்கும் மேலாக என்டர்டெய்னராக களத்தில் அவரது குறும்புத்தனங்களை... இப்படி அத்தனையையும் நாம் மிஸ் செய்யப்போகிறோம்.
அவரது இரண்டாவது இன்னிங்ஸ் வரும் ஐ.பி.எல்-லிலேயே தொடங்கவிருக்கிறது. அதிலும் அவர் மாஸ் காட்ட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.