Published:Updated:

கெவின் ஓ பிரையனை மறக்க முடியுமா? உலக கிரிக்கெட்டைத் திரும்பிப் பார்க்க வைத்த அந்த ஒற்றை இன்னிங்ஸ்!

கெவின் ஓ பிரையன்

புது வீரர் கெவின் ஓ பிரையன் வந்ததும் ஸ்லிப் வைக்க வேண்டும் என்று வர்ணனையில் டேவிட் லாய்ட் கூறினார். ஆனால் இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸுக்கு அதெல்லாம் தோன்றவில்லை. இன்னும் அரை மணி நேரத்தில் ஜெயித்து விடலாம் என்ற மமதையில் இருந்தார்.

கெவின் ஓ பிரையனை மறக்க முடியுமா? உலக கிரிக்கெட்டைத் திரும்பிப் பார்க்க வைத்த அந்த ஒற்றை இன்னிங்ஸ்!

புது வீரர் கெவின் ஓ பிரையன் வந்ததும் ஸ்லிப் வைக்க வேண்டும் என்று வர்ணனையில் டேவிட் லாய்ட் கூறினார். ஆனால் இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸுக்கு அதெல்லாம் தோன்றவில்லை. இன்னும் அரை மணி நேரத்தில் ஜெயித்து விடலாம் என்ற மமதையில் இருந்தார்.

Published:Updated:
கெவின் ஓ பிரையன்
மார்ச் 2, 2011 - பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு போட்டி - ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தின் கண்களும் இமைக்கக் கூட நேரமில்லாமல் டிவியை பார்த்துக் கொண்டிருந்தது. இறுதிப்போட்டியும் கிடையாது அரையிறுதியும் கிடையாது. இத்தனை ஓவரில் இத்தனை ரன்கள் எடுத்தால் qualify ஆகலாம் போன்ற ஐ.பி.எல் டிராமாவும் கிடையாது. சொல்லப்போனால் இந்தியா, பாகிஸ்தான் போன்ற முன்னணி நாடுகள் கூட இந்த ஆட்டத்தில் ஆடவில்லை. ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை கிரிக்கெட்டில் தலை காட்டும் அயர்லாந்து ஆடிய போட்டி அது. இருந்தாலும் இரண்டு மணி நேரம் எந்த ஒரு ரசிகனும் இடத்தை விட்டு நகராமல் போட்டியை ரசித்தனர். காரணம் அந்த இரண்டு மணி நேரத்தில் அயர்லாந்து கிரிக்கெட்டின் அற்புதமான வரலாறு ஒன்று பொறிக்கப்பட்டது.
கெவின் ஓ பிரையன்
கெவின் ஓ பிரையன்

இந்தியா, பாகிஸ்தான் ஆட்டங்களை எல்லாம் கல்லா கட்டுவதற்காக விடுமுறை நாள்களில் வைத்துவிட்டு சிறிய நாடுகள் ஆடும் போட்டிகளை எல்லாம் வேலை நாள்களில் வைப்பதுதான் ஐ.சி.சி-யின் தொன்றுத்தொட்டு வழக்கம். அப்படி இந்தியா - இங்கிலாந்து ஆடிய போட்டியை ஞாயிற்றுக்கிழமை நடத்திவிட்டு அடுத்த மூன்று நாள்கள் கத்துக்குட்டி அணிகள் விளையாடும் போட்டிகளை வைத்திருந்தது. கென்யா, நெதர்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகள் எல்லாம் பெரிய அணிகளின் பந்துவீச்சை எதிர்த்து 200 ரன்கள் அடித்தாலே அது பெரிய விஷயம். நினைத்தது போல வெஸ்ட் இண்டீஸ் நெதர்லாந்தை 215 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியது. இலங்கை கென்யாவை ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அடுத்த சம்பவம் தாங்கள்தான் செய்ய வேண்டும் என்று அயர்லாந்து அணிக்காகக் காத்திருந்தது இங்கிலாந்து.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அயர்லாந்து நாட்டிற்குள் மெல்லக் குடியேறி தற்போது அந்நாட்டிற்கும் சேர்த்து நாட்டாமையாக இருப்பது இங்கிலாந்து. விளையாட்டு உட்பட எல்லா விஷயத்திலும் இங்கிலாந்துதான் அயர்லாந்து மேல் ஆதிக்கம் செலுத்தும். "நீங்க சொன்னா சரிதான் எசமான்" என்ற பாணியில்தான் இப்போது வரை இருக்கிறது அயர்லாந்து. கிரிக்கெட்டை கண்டுபிடித்து பல ஜாம்பவான்களை உருவாக்கிய இங்கிலாந்து அயர்லாந்துடன் மோதும் ஆட்டத்தைக் காண யாருக்குத் தான் சுவாரஸ்யம் இருக்கும். பல அதிதீவிர கிரிக்கெட் ரசிகர்கள் கூட அன்று இங்கிலாந்து பேட்டிங்கை நிச்சயம் கண்டிருக்க மாட்டார்கள். ஸ்கோர் மட்டும் பார்த்தாலே போதும் என்றுதான் இருந்திருப்பார்கள்.

கெவின் ஓ பிரையன்
கெவின் ஓ பிரையன்

இங்கிலாந்தும் அயர்லாந்தை மிகவும் மெதுவாகதான் எதிர்கொண்டது. சற்று சுலபமான அயர்லாந்து பௌலிங்கைக் கூட பந்துக்கு வலித்துவிடக் கூடாது என்ற நினைப்பில்தான் ஆடினர். முதல் 25 ஓவர்களுக்கு ரன்ரேட் 6-ஐ விடக் குறைவாகவே இருந்தது. 'எப்படியும் அயர்லாந்தை சொற்பமாக வீழ்த்தி விடலாம். அதற்கு எதற்கு அதிகமாக ரிஸ்க் எடுத்துக் கொண்டு?' என்ற மனநிலையில்தான் ஆடினர். டிராட் 92, பெல் 81 மற்றும் பீட்டர்சன் 59 ரன்கள் எடுக்க இங்கிலாந்து இன்னிங்ஸ் 327 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

மணி 6-30. வேலை முடிந்து வீட்டுக்கு வந்து டீ, காபி எல்லாம் குடித்து முடித்து விட்டு பெரும்பான்மையான இந்தியக் குடும்பங்கள் டிவியைப் போடும் நேரம். அயர்லாந்து பேட்டிங் - அதுவும் 328 ரன்கள் டார்கெட். சுவாரஸ்யம் இல்லை என்றாலும் சீரியல் கொடுமைகளில் இருந்து தப்பிக்கதான் பலரும் வேண்டா வெறுப்பாக ஆட்டத்தைக் காண ஆரம்பித்திருப்பார்கள். முதல் பந்தை ஆண்டர்சன் வீச, அதை அயர்லாந்து கேப்டன் போர்டர்ஃபீல்ட் அடிக்க நினைத்து போல்டானார். ஆரம்பமே அயர்லாந்துக்கு ஆட்டம் கண்டது. சில பவுண்டரிகளை அடித்து விட்டு ஸ்டிர்லிங் கிளம்ப ஜாய்ஸ் மற்றும் நெய்ல் ஓ பிரையன் இணைந்து பொறுமையே பெருமை என்று ஆட ஆரம்பித்தனர். 21வது ஓவரில் நெய்ல் அவுட். 23வது ஓவரில் ஜாய்ஸ் அவுட். தேவையான ரன் ரேட் எட்டு ரன்களைக் கடந்திருந்தது.

"அது அவ்ளோ தான்... டைம் முடிஞ்சுது" என எழ நினைத்த என்னை, "என்ன செய்றாங்கனு பாத்துட்டாச்சு போலாம்" என புதுப்பேட்டை திரைப்பட பாணியில் சமாதானம் சொல்லி அமர வைத்தது மனது. அப்படி எத்தனை பேர் என்னுடன் அமர்ந்து அந்த ஆட்டத்தைப் பார்த்தார்களோ, அனைவரும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். இனி நிச்சயம் இப்படி ஒரு ஆட்டத்தைக் காண முடியாது யாராலும். சரி கதைக்கு வருவோம். இன்னமும் 222 ரன்கள் தேவை 166 பந்துகளில். தலையில் வித்தியாசமான ஆரஞ்சு நிற டை அடித்து வாட்டசாட்டமான ஆள் ஒருவர் புதிதாகக் களமிறங்கினார். கெவின் ஓ பிரையன் என இவரது பெயரை வர்ணனையில் கூறினார்கள்.

கெவின் ஓ பிரையன்
கெவின் ஓ பிரையன்

புது வீரர் வந்ததும் ஸ்லிப் வைக்க வேண்டும் என்று வர்ணனையில் டேவிட் லாய்ட் கூறினார். ஆனால் இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸுக்கு அதெல்லாம் தோன்றவில்லை. இன்னும் அரை மணி நேரத்தில் ஜெயித்து விடலாம் என்ற மமதையில் இருந்தார். முதல் பந்தே ஸ்லிப் இல்லாததால் அவுட் ஆகாமல் தப்பித்தார் கெவின். ஐந்து விக்கெட்டுகள் விழுந்திருந்தாலும் பரவாயில்லை என அடித்து ஆட, யார்டி ஓவரில் இரண்டு பவுண்டரிகள், ஸ்வான் ஓவரில் இரண்டு சிக்சர்கள், ஆண்டர்சன் ஓவரில் 17 ரன்கள் எனப் பறந்தன. ஆபத்தை இங்கிலாந்து உணர்வதற்கு முன்னரே அரைசதம் கடந்தார் கெவின்.

இங்கிலாந்து மெல்ல கனவு உலகத்தில் இருந்து முழிக்க ஆரம்பித்தது. நிலைமையை இன்னும் மோசமாக்க கெவின் 93 ரன்களில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கேப்டன் ஸ்ட்ராஸ் தவற விட்டார். இதைப் பயன்படுத்தி 50 பந்துகளில் சதம் கடந்தார். உலகக்கோப்பைகளில் அப்போது அடிக்கப்பட்ட அதிவேக சதம் அதுதான். 13 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்களுடன் 66 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் கெவின் ஓ பிரையன். குசக் மற்றும் மூனி என இரண்டு அயர்லாந்து வீரர்கள் கடைசியில் அயர்லாந்தை ஐந்து பந்துகள் மிச்சமிருக்கும் நிலையில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

சின்னசாமி மைதானம் முழுக்க திருவிழா போல் இருந்தது. அயர்லாந்து ரசிகர்கள் மட்டுமில்லாது மொத்த உலகமும் இந்த வெற்றியைக் கொண்டாடியது. டிவியை அணைத்து விட்டு தூங்கச் சென்றவர்கள் எல்லாம் மறுநாள் காலையில் வருத்தப்பட்டனர். எங்களுக்கு இதுவே உலகக்கோப்பை வென்றது மாதிரிதான் என இங்கிலாந்தை வீழ்த்தியதும் பல அயர்லாந்து நாட்டவர்கள் துள்ளிக் குதித்தனர். கெவினின் இந்த ஆட்டத்தை ஒரு பந்து கூட விடாமல் பார்த்தவன் என்ற பெருமை இன்னமும் எனக்கு உண்டு.

இது நடந்து பதினொரு ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு இது போல கெவின் ஓ பிரையன் பெரிய சாகசங்கள் எதுவும் அவ்வளவாக செய்யவில்லை. இருந்தாலும் இன்னமும் களத்தில் கெவின் ஓ பிரையன் இருக்கிறார் என்றால் எதிரணிக்கு ஒரு குட்டி பயம் வரத்தான் செய்யும். அந்தப் பயத்தை பலர் மனதில் கெவின் விதைத்த நாள் மார்ச் 2, 2011.