தோனியின் ஓய்வுக்கு பிறகு விக்கெட் கீப்பிங் பொறுப்பு ரிஷப் பண்ட்-க்கு வழங்குவது தான் பிசிசிஐ திட்டம். தோனி இல்லாத சமயங்களில் விக்கெட் கீப்பிங் பணியை அவர் தான் செய்து வருகிறார். தோனியின் மேஜிக்குகளை ரசிகர்கள் ரிஷப் பண்டிடம் எதிர்ப்பார்க்கின்றனர். இதன் காரணமாக ரிஷப் செய்யும் சிறு சிறு தவறுகளும் ரசிகர்களுக்கு பெரிதாகத் தெரிகிறது. இந்த விவகாரங்கள் சமூகவலைதளங்களில் பூதாகரமாக வெடிக்கிறது.

வங்கதேசம் அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் ஸ்டெம்புக்கு முன்னால் பந்தை பிடித்து ஸ்டெம்பிங் செய்தார். மூன்றாவது நடுவர் இதனை கவனத்துக்கு கொண்டு வந்து நோபால் வழங்கினார். இதனால் ரிஷப் பெயர் மீண்டும் அடிப்பட்டது.. ஆனால் அடுத்த பந்திலே சமயோஜிதமாக செயல்பட்டு விக்கெட் எடுத்தார். இதேபோட்டியில் ரிஷப் செய்த மற்றொரு ஸ்டெம்பிங் போது மூன்றாவது அம்பயர் நாட்அவுட் வழங்கினார். இது ரோகித்தை கடுப்பாக்கியது. அதன்பின் மூன்றாவது நடுவர் தன் முடிவை மாற்றி அவுட் வழங்கினார்.
இதுகுறித்து பேசியுள்ள ரோஹித் சர்மா “ரிஷப் பண்ட் குறித்த பேச்சுகள் நாளுக்கு நாள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ஏன் ஒவ்வொரு நிமிடமும் எழுகிறது. அவர் களத்தில் என்ன செய்ய விரும்புகிறாரோ அதனை செய்ய நாம் அவரை அனுமதிக்க வேண்டும். தயவு செய்து அனைவரும் உங்களுடைய பார்வையை ரிஷப் மீது இருந்து விலகிக்கொள்ளுங்கள். அவர் பயமில்லாமல் விளையாடக்கூடிய கிரிக்கெட்டர். அணி நிர்வாகமும் அந்த சுதந்திரத்தை அவருக்கு அளிக்க விரும்புகிறது. அவர் மீதான உங்கள் பார்வையை விலக்கிக்கொண்டால் அவர் இன்னமும் சிறப்பாக செயல்படுவார்.

22 வயதான இளம் வீரர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தன்னுடைய தடத்தை பதிக்க முயற்சி செய்துக்கொண்டிருக்கிறார். களத்தில் அவரது செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் மக்கள் பேசுகிறார்கள். இது நல்லதல்ல. அவரது விருப்பப்படி சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும். அவருடைய தவறை மட்டும் பேசாதீர்கள் அவரது நல்ல விஷயங்களையும் பேசுங்கள். அவர் கற்றுக்கொண்டு வருகிறார்” என ரோஹித் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.