Election bannerElection banner
Published:Updated:

சேப்பாக்கம் நினைவுகள்: கருண் நாயரின் 303 மட்டுமல்ல... அன்று நடந்தவை எல்லாமே அதிசயங்கள்! #INDvENG

கருண் நாயர்
கருண் நாயர் ( ICC )

4-வது நாள் ஆட்டம் தேநீர் இடைவேளை தாண்டியும், முதல் பேட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. டிக்ளேர் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாங்கள் டிக்ளேர் செய்யப் போவதும் இல்லை, உங்கள் கால்களுக்கு ஓய்வு அளிக்கப் போவதும் இல்லை என்று இந்தியா ஆட்டத்தைத் தொடர்ந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் சென்னை டெஸ்ட் நாளை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட்டும் இங்கேயே நடக்க இருக்கும் நிலையில் சேப்பாக்கத்தில் ஐந்தாண்டுக்கு முன்பு இங்கிலாந்துக்கு மறக்கமுடியாத தோல்வியைப் பரிசளித்திருக்கிறது இந்தியா. இதே மைதானத்தில், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த டெஸ்ட் போட்டி இந்தியக் கிரிக்கெட் அணிக்கும், ரசிகர்களுக்கும் பல மறக்கமுடியாத நினைவுகளைப் பரிசளித்தது.

இங்கிலாந்தை இன்னிங்ஸ் வெற்றிகண்டு சாதனை மேல் சாதனை படைத்தது இந்தியா. இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம், இந்தியா, 4/0 என்ற கணக்கில், விண்ணைத் தொடும் வெற்றியை முத்தமிட்டது.

2016-ஆம் ஆண்டு, அலெஸ்டர் குக்கின் தலைமையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி, ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அதில் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில், 3-0 என முன்னிலை வகித்த இந்தியா, ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துடன் மோத சென்னையில் முகாமிட்டது.

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது இங்கிலாந்து. அரைசதம் அடித்த ரூட்டும், ஒரு ரன்னில் அரைச்சதத்தைத் தவறவிட்ட பேர்ஸ்டோவும் ஒருபக்கம் அணியைத் தாங்கிப் பிடிக்க, மறுபக்கம் மொயீன் அலியின் சதம், இங்கிலாந்தை முதல் நாளில், 284/4 என வலுவான நிலையில் அடித்து அமர வைக்க, இந்தியாவின் பக்கமோ, மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த ஜடேஜா, தனது இருப்பை கம்பீரமாய்ப் பதிவு செய்தார்.

கருண்
கருண்
ICC

இரண்டாவது நாள் ஆட்டத்தில், பின்வரிசை வீரர்களான டாசன் மற்றும் ரஷீத்தின் அற்புத அரைச்சதங்களால், 477 என்ற வலுவான நிலையை எட்டியது இங்கிலாந்து. இதற்கு முன் 17 போட்டிகளில் தோல்வியே அடையாமல் சாதித்திருந்த கோலி படையின் சகாப்தம், அங்கேயே முற்றுப் பெற்றதோ என்ற காட்சிப்பிழை உருவானது. அதிலும் 400+ ரன்களை முதல் இன்னிங்ஸில் சேர்த்த அணியை எப்படி ஆட்டங் காண வைக்கப் போகிறது என்ற ஆவல் மேலோங்கியது.

ஓப்பனிங் இறங்கிய கேஎல் ராகுல், 22 யார்டை தனக்கே பட்டா போட்டுக் கொடுத்ததைப் போல, நிலைத்து நின்று ஆட ஆரம்பித்தார். மறுமுனையில் பார்த்தீவ் பட்டேலும் பட்டையைக் கிளப்ப, இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. பார்த்தீவ் 71 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த குட்டி வால் புஜாரா 16 ரன்களில் அவுட் ஆனார். கேப்டன் கோலி நிச்சயம் பெரிய இன்னிங்ஸ் ஆடியே ஆக வேண்டும் இல்லாவிட்டால் இந்த டெஸ்ட்டைக் காப்பாற்றமுடியாது என்ற நிலையில் அவரும் 15 ரன்களில் பிராடு பந்தில் அவுட் ஆக இந்திய ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ந்து விட்டார்கள்.

211 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்துவிட்டது. இன்னும் 266 ரன்கள் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. அனுபவம் வாய்ந்த புஜாராவும், கோலியும் அவுட் ஆக, அனுபவம் குறைந்த கேஎல் ராகுலும் புதுமுக வீரர் கருண் நாயரும்தான் களத்தில் இணைந்தார்கள். இந்த இணை என்ன பெரிய சாதனை செய்து விடப்போகிறது, இருவரையும் அவுட் ஆக்கி, எளிதாகப் போட்டியைக் கைப்பற்றிவிடலாம் என நினைத்த இங்கிலாந்து நினைப்பில் இடியை இறக்கினார்கள், இந்திய இளங்கன்றுகள்.

இங்கிலாந்து சார்பில் ஆதில் ரஷீத் மற்றும் லயாம் டாவ்சன் மாறி மாறி சுழல் பந்தை வீசிக் கொண்டிருக்க, பந்து எகிறி வந்தது. அதைச் சமாளிக்க, கேஎல் ராகுல் மற்றும் கருண் நாயர் இருவரும் தங்கள் கையிலெடுத்தது, ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகள். மிடில் மற்றும் லெக் ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பந்தை, ஸ்வீப் ஷாட் அடித்தும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடியும் பவுண்டரிகளை அடிக்க ஆரம்பித்தார்கள், இந்தியாவின் இந்த உக்தியை சமாளிக்கமுடியாமல் திணறித்தான்போனது இங்கிலாந்து.

கருண்
கருண்
ICC

இங்கிலாந்து அணி கேப்டன் குக் பெளலர்களை மாற்றிக்கொண்டே இருந்தார். ஆனால், இந்த இருவரின் விக்கெட்டுகளை எடுக்கவே முடியவில்லை. சதமடித்த ராகுல் தனது ஆட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தத் தொடங்கினார். பந்துகள் பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் பறக்க ஆரம்பித்தது. இரட்டைச் சதத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்த ராகுலின் வேகம், இந்தியர்களை நிம்மதிப் பெருமூச்சு விடச்செய்தது. 370 ரன்களை நெருங்கியாகி விட்டது. 3 விக்கெட்டுகள் மட்டும்தான் விழுந்திருக்கிறது, களத்தில் ராகுல், கருண் நாயர் நன்றாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், மற்றுமொரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது.

கேஎல் ராகுல் 199 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரஷீத் வெளியே வீசிய பந்தில் தேவையில்லாமல் தொட்டு பட்லரிடம் கேட்ச் ஆனது. ராகுல் அப்படியே களத்திலேயே குனிந்து உட்கார்ந்து விட்டார். அவரால் அவுட் ஆனதை நம்பவே முடியவில்லை, ஜீரணிக்கவும் முடியவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகுதான் எழுந்து பெவிலியனை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

இன்னும் 100 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் இருந்த இந்திய அணி அடுத்துச் செய்ததுதான் வரலாறு. கருண் நாயர் எனும் இளங்கன்று, இங்கிலாந்து வீரர்களை நாலாப்புறமும் சிதறவிட ஆரம்பித்தது. ராகுல் இருந்தவரை, அவருக்குத் துணையாக ஆடிக் கொண்டிருந்தவர், அவர் அவுட் ஆன உடன் மொத்தப் பொறுப்பையும் தன் மீது ஏற்றிக் கொண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட ஆரம்பித்தார்.

முரளி விஜய் 29 ரன்கள் எடுத்து அவுட் ஆன நிலையில், அஷ்வினைத் தடுப்பாட்டம் ஆடச் சொல்லி, அதிரடியை கருண் கையிலெடுத்தார். ஸ்பின் பெளலர்களை ஸ்வீப் ஷாட் அடித்தும், ஃபாஸ்ட் பெளலர்களை கவர் டிரைவ் அடித்தும் கதிகலங்க வைத்து, தனது முதல் சதத்தைப் பதிவு செய்த கருண், நான் இங்கு வெறும் 100 ரன்கள் அடிக்க மட்டும் வரவில்லை, சரித்திரத்தில் என் பெயரை, பெரியதாக எழுத வந்திருக்கிறேன் என வீறு கொண்டு ஆட ஆரம்பித்தார். முதல் அறிமுகச் சதம் முதல் இரட்டை அறிமுகச் சதமானது.

இரட்டை சதத்தோடும் திருப்தி கொள்ளாமல் தனது ஆட்டத்தின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினார். அஷ்வின் 67 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை 616 ரன்கள் என உயர்த்திய நிலையில் அவுட் ஆக, இங்கிலாந்து இந்தியா டிக்ளேர் செய்யும் என்று எதிர்பார்த்தது. ஏன் என்றால், அவர்கள் ஏற்கனவே 170 ஓவர்கள் பந்து வீசி, மிகவும் களைப்பாக இருந்தார்கள்.

கருண்
கருண்
ICC

4-வது நாள் ஆட்டம் தேநீர் இடைவேளை தாண்டியும், முதல் பேட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. டிக்ளேர் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாங்கள் டிக்ளேர் செய்யப் போவதும் இல்லை, உங்கள் கால்களுக்கு ஓய்வு அளிக்கப் போவதும் இல்லை என்று இந்தியா ஆட்டத்தைத் தொடர்ந்தது.

250 ரன்களை கடந்திருந்த கருண் நாயர், இனிமேல் வீசப்படும் ஒவ்வொரு பந்தும், தனது 300 ரன்களை எடுப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்பு என்பதை உணர்ந்து அதிரடியாக ஆட ஆரம்பித்தார். மறுபுறம் பெரிய முன்னிலை பெற வேண்டும் என ஜடேஜா பந்துகளை சிக்ஸர்களுக்கு விளாசி, டெஸ்ட் போட்டியை 50 ஓவர் போட்டிகள் ஆட்டம் மாதிரி ஆட ஆரம்பித்தார்.

இறுதியாக ஆதில் ரஷீத் பந்தில் பவுண்டரி அடித்து, தனது முச்சத்ததைப் பதிவு செய்து, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் சதத்தை முச்சதமாக பதிவு செய்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸின் கேரி சோபர்ஸ், இங்கிலாந்தின் பாப் சிம்சன் மட்டுமே இச்சாதனையைச் செய்திருந்த நிலையில், கருண் நாயரும், அந்தப் பட்டியலில் இணைந்தார். அன்று சேப்பாக்கம் திருவிழாக்கோலம் பூண்டது.

இன்னும் ஒருநாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியிருக்கிறது, இங்கிலாந்து 282 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஒன்று போட்டியில் இந்தியா வெற்றிபெறும் அல்லது டிரா ஆகும் என்ற நிலையில் ஆடத்தொடங்கிய இங்கிலாந்து ஓப்பனர்கள், அவ்வளவு சீக்கிரத்தில் இந்தப் போட்டியை நாங்கள் விட்டுக் கொடுத்து விடமாட்டோம் என்று சூளுரைத்தது போல் இருந்தது.

94 ஓவர்களில், 39 ஓவர்கள் விக்கெட் இழப்பின்றி தாக்குப் பிடித்துவிட்டது இங்கிலாந்து. இந்தியா சார்பாக அஷ்வின், ஜடேஜா, மிஸ்ரா என 5-வது நாள் சுழலும் பிட்ச்சில், மாற்றி மாற்றி பந்துவீசியும் குக் மற்றும் ஜென்னிங்ஸை அசைக்க முடியவில்லை.

5-வது நாள் மதிய உணவு முடிந்து ஆட்டம் தொடங்கிய நிலையில் முதல் இன்னிங்ஸில், நன்றாகப் பந்து வீசிய ஜடேஜா மீண்டும் இந்தியாவுக்கு கைகொடுத்தார், அதுவும் பெரிதாக.

குக் விக்கெட்டை வீழ்த்தியவர் வரிசையாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை சரிக்க ஆரம்பித்தார். ஜென்னிங்ஸ், ஜோ ரூட் என ஸ்டார் பேட்ஸ்மேன்களை காலி செய்தார். இஷாந்த் ஷர்மா, தன் பங்கிற்கு பேர்ஸ்டோவை அவுட் ஆக்க, தேநீர் இடைவெளியின் போது 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது இங்கிலாந்து.

ஒரு செஷன் மட்டும் இருக்கும் நிலையில், இந்தியா 6 விக்கெட்டுகளை வீழ்த்துமா இல்லை இங்கிலாந்து தடுப்பாட்டம் ஆடி போட்டியை டிரா செய்யுமா என்று எண்ணிய நிலையில், சூப்பர் கிங்ஸ் சிங்கம் ஜடேஜா மீண்டும் கைகொடுத்தார். அடுத்தடுத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்கி, மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியை அடையச் செய்தார்.

கேஎல் ராகுல் 199, கருண் நாயர் 304, ஜடேஜாவின் 10 விக்கெட்டுகள் என பல சரித்திரச் சம்பவங்கள் நடந்த சேப்பாக்கத்தில் மற்றும் இரு சுவாரஸ்யமான இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளை விரைவில் காண இருக்கிறோம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு