மே 1-ம் தேதி நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனான கே.எல்.ராகுலுக்குத் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் மே 3-ம் தேதி நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக க்ருணால் பாண்டியா லக்னோ அணியின் கேப்டனாகச் செயல்பட்டிருந்தார்.

இதனிடையே மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் கே.எல்.ராகுல் விளையாடுவாரா என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்தது. இந்நிலையில் கே.எல்.ராகுலுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்குத் தசைநார் சிதைவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதால் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து கே.எல்.ராகுல் அதிகாரபூர்வமாகவே விலகியுள்ளார்.
தற்போது கே.எல்.ராகுலுக்குப் பதிலாக இந்திய அணியின் பேட்ஸ்மேன் கருண் நாயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. கருண் நாயர் இதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார். இந்திய அணிக்காக டெஸ்ட்டில் 300 ரன்கள் அடித்த வீரர் என்பது பலருக்கும் நினைவிருக்கும்.

இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கருண் நாயர் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை. தற்போது அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு லக்னோ அணி அவரை வாங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.