Published:Updated:

`ஸ்லோ பேட்டிங்; ஒரே ஓவரில் 11 ரன்கள்!' - அதிரவைக்கும் KPL ஸ்பாட் ஃபிக்ஸிங் #KPLSpotFixing

கர்நாடக பிரீமியர் லீக் தொடரில் நடந்த ஸ்பாட் ஃபிக்ஸிங் ஊழல் வழக்கில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட சர்வதேச புக்கி சய்யாம் என்பவரை அம்மாநில குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

கர்நாடக பிரீமியர் லீக்
கர்நாடக பிரீமியர் லீக் ( Twitter )

கே.பி.எல் எனப்படும் கர்நாடக பிரீமியர் லீக்கின் 2018 மற்றும் 2019-ம் ஆண்டு தொடர்களில் ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்த விசாரணையில், பெல்லாரி டஸ்கர்ஸ் அணி வீரர்கள் இருவர் அந்தத் தொடர்களில் 4 போட்டிகள் வரை ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. இதையடுத்து, அந்த அணியின் கேப்டன் சி.எம்.கௌதம் மற்றும் அந்த அணியின் ஆல்ரவுண்டரான அப்ரார் காஸி ஆகியோரை கர்நாடக குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இவர்கள், இந்தாண்டு நடைபெற்ற கே.பி.எல் தொடரில் பெல்லாரி டஸ்கர்ஸ் மற்றும் ஹூப்ளி டைகர்ஸ் இடையில் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

கைது செய்யப்பட்ட சய்யாம்
கைது செய்யப்பட்ட சய்யாம்

பெலகாவி பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரான அஸ்பாக் அலிதாராவின் தூண்டுதலின்பேரில், அவர்கள் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக போலீஸார் கூறுகிறார்கள். இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த ஹூப்ளி டைகர்ஸ் அணி, 152 ரன்களை பெல்லாரி டஸ்கர்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. அந்தப் போட்டியில், பெல்லாரி டஸ்கர்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. போட்டியின்போது ஸ்லோவாக பேட் செய்யும்படி சி.எம்.கௌதமுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

`தலைமை நீதிபதி கோகாய் முதல் நீதிபதி அப்துல் நசீர் வரை..!'- அயோத்தி வழக்கின் அரசியல்சாசன அமர்வு

அதேபோல், பௌலிங்கின்போது ஒரே ஓவரில் 10 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுக்கும்படி ஒரு பந்துவீச்சாளரை பௌலிங் செய்ய அழைக்க வேண்டும் என்றும் அவருக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இதற்காக அவருக்கு, ரூ.20 லட்சம் பணம் பேரம் பேசப்பட்டிருக்கிறது. அந்தப் போட்டியில், தனது முதல் ஓவரை வீசிய காஸி, 2 வைடுகள் உள்பட 11 ரன்களை வாரி வழங்கினார். இதற்காக அவருக்கு ரூ.2.5 லட்சம் முன்பணமும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் கர்நாடக போலீஸார்.

சி.எம்.கௌதம்
சி.எம்.கௌதம்
Mumbai Indians

கர்நாடக ரஞ்சி அணியின் கேப்டனாக இருந்த சி.எம். கௌதம், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியவர். காஸியும் கர்நாடக ரஞ்சி அணிக்காக விளையாடியவர். முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக நிஷாந்த்சிங் ஷெகாவத், விஸ்வநாதன் ஆகிய வீரர்களும், பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் விணுபிரசாத் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக, பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை மேற்கொள்கிறது. செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் பிரிவின் தலைவர் அஜித் சிங், ``கே.பி.எல் ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக முதற்கட்ட விசாரணை நிறைவடைந்திருக்கிறது. போலீஸாரின் விசாரணை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். அதன்மூலம் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்றும் நம்புகிறோம்'' என்று தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியிருக்கிறது.