Published:Updated:

Kapil Dev: உலகக் கோப்பை மட்டுமா? வீரதீர கபில் தேவ் நிகழ்த்திய 5 அதி அற்புத சம்பவங்கள்!

Kapil Dev

அன்று கபில் எட்டிப்பிடித்தது பந்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் உலகக் கோப்பை கனவையும்தான்.

Kapil Dev: உலகக் கோப்பை மட்டுமா? வீரதீர கபில் தேவ் நிகழ்த்திய 5 அதி அற்புத சம்பவங்கள்!

அன்று கபில் எட்டிப்பிடித்தது பந்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் உலகக் கோப்பை கனவையும்தான்.

Published:Updated:
Kapil Dev
1959-ம் ஆண்டு பிறந்த கபில் தேவ் 80-90 களில் இந்திய அணிக்கு ஆல்ரவுண்டராகவும் ஆளுமைமிக்க கேப்டனாகவும் அதிரடி காட்டியவர். ஹரியானா மாநிலத்தில் பிறந்து இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பை பெற்று தந்த நாயகன் கபில். 16 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் 5,248 டெஸ்ட் ரன்கள், 3,783 ஒரு நாள் ரன்கள், 434 டெஸ்ட் விக்கெட்டுகள் மற்றும் 253 ஒருநாள் விக்கெட்டுகளை அள்ளியிருக்கிறார் கபில். அவர் தனது 64வது பிறந்த நாளை கொண்டாடி முடித்திருக்கும் இந்த தறுவாயில் கபிலின் தலைசிறந்த ஆட்டங்கள் பற்றிய தொகுப்பு இங்கே...

175* vs ஜிம்பாப்வே

அது 1983 உலகக்கோப்பையயின் முக்கியமான கட்டம். வெற்றி பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அணி உடன் அரையறுதியில் மோத முடியும் என்ற சூழலில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்டது இந்தியா. கபில் தேவின் இந்தியப் படை முதல் பேட்டிங் செய்தது. சுனில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த், மொஹிந்தர் அமர்நாத், சந்தீப் பாட்டீல், யஷ்பால் சர்மா என அத்தனை வீரர்களும் ஒற்றை இலக்க எண்களில் பெவிலியன் திரும்பினார்கள். 17-5 என்ற நிலையில் கேப்டன் கபில் தேவ் மைதானத்திற்குள் அடியெடுத்து வைத்தார். தடுமாறிய இந்திய அணியை மீட்டு தனது மங்கூஸ் பேட்களால் நாலா பக்கமும் பந்தைச் சிதறடித்துக் கொண்டிருந்தார் கபில்.

 கபில்தேவ்
கபில்தேவ்

இந்தியாவின் உலகக் கோப்பை கனவு முடிந்தது என்று நினைத்த ரசிகர்களுக்கு நம்பிக்கைக் கொடுத்துக் கொண்டிருந்தார் கபில். கடைசி வரை களத்தில் அதிரடி காட்டி 138 பந்துகளில் 175 ரன்கள் விளாசினார். ஹரியானா சூறாவளியின் அசுர ஆட்டத்தினால் 60 ஓவர்கள் முடிவில் 266 ரன்களை ஜிம்பாப்வே அணிக்கு இலக்காக நிர்ணித்தது இந்திய அணி. 35 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது. 16 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள், ஒரு விக்கெட் எடுத்து இந்த ஆட்டத்தின் அட்டநாயகன் விருதை பெற்றார் கபில். கபிலின் ஹீரோயிக் இன்னிங்ஸ்களை பற்றிப் பேசுகையில் ஜிம்பாபேவ்க்கு எதிரான இந்த இன்னிங்ஸுக்குத்தான் எப்போதுமே முதன்மையான இடம்.

4/90, 7/56 மற்றும் 84 ரன்கள் vs பாகிஸ்தான்:

1980-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் இரண்டு வெற்றிகள் பெற்றிருந்தது. பாகிஸ்தானிடம் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகாமல் இருக்க ஒரு அசத்தலான ஆட்டம் தேவைப்பட்டது. அந்த அசத்தலான ஆட்டத்தை ஆடி இந்திய அணியின் மானத்தை மற்றுமொரு முறை காத்திருந்தார் கபில்.

முதல் இன்னிங்ஸில் கபில் தேவ் கரங்களால் நான்கு விக்கெட்டுகள் பெற்றுக் கொடுத்தார். இரண்டாவது இன்னிங்சிலும் ஏழு விக்கெட் எடுக்க மொத்தம் 11 விக்கெட்டுகளை ஒரே ஆட்டத்தில் எடுத்தார். பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி 38 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார் கபில். பேட்டிங், பௌலிங்கில் கபில் தன் பெஸ்ட்டைக் கொடுக்க இந்தியா பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியை வென்றது. பாகிஸ்தானிடம் ஒயிட்வாஷ் ஆகாமலும் தப்பித்தது.

Kapil Dev
Kapil Dev

129 vs தென்னாப்பிரிக்கா

1992-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி அது. இரண்டாவது இன்னிங்ஸில் 27/5 என மோசமான நிலையில் இந்தியா ஆடிக் கொண்டிருந்தது. ஐந்தாவது வீரராக இந்திய அணியைக் காப்பாற்ற கபில் களம் இறங்கினார். Tail enders பேட்ஸ்மேன்களோடு கைகோத்து இந்திய அணியைச் சரிவிலிருந்து மீட்டு 129 ரன்கள் அடித்துக் கொடுத்தார். கபிலின் அதிரடியால் 215 ரன்கள் குவித்தது இந்தியா. 153 ரன்களைத் துரத்திய தென்னாப்பிரிக்கா எளிதாக வெற்றி பெற்றது. வெற்றியை இழந்தாலும் கபிலின் 129 ரன்கள் நாக் மறக்கமுடியாத ஓர் ஆட்டமாக மாறியது.

ரிச்சர்ட்ஸ் கேட்ச்:

1983 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது இந்தியா. முதலில் பேட்டிங் செய்து 183 ரன்கள் இலக்காக இந்தியா நிர்ணயித்தது. வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ரிச்சர்ட்ஸ் அதிரடி காட்டிக் கொண்டிருந்தார். இந்திய பௌலர்களால் அவரது விக்கெட்டை சாய்க்க முடியவில்லை. இந்நிலையில் மதன் லால் பந்து வீச ரிச்சர்ட்ஸ் லெக்சைடில் அடிக்க அந்தப் பந்து வானில் பறந்தது. கபில் பந்தை மட்டும் கண்ணில் பார்த்து பின்னோக்கி ஓடி அசாத்தியமான ஒரு கேட்ச்சை அற்புதமாகப் பிடித்துக் காண்பித்தார். கபில் எட்டிப்பிடித்தது பந்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் உலகக் கோப்பை கனவையும்தான்.

கபில் - கவாஸ்கர்
கபில் - கவாஸ்கர்

8-106 vs ஆஸ்திரேலியா:

1985-ம் ஆண்டில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 381 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கபில் தேவ் 8 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். கபிலின் அட்டகாசமான பந்துவீச்சால் போட்டியில் இந்திய அணியின் கையும் ஒங்கியது. இருப்பினும் இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கபில் எடுத்த அந்த எட்டு விக்கெட்டுகள் அந்தக் காலத்தில் பெரிதாகப் பேசப்பட்டது.

உங்களைப் பொறுத்தவரை கபில் தேவ் ஆடிய மறக்க முடியாத இன்னிங்ஸ் எது என்பதை கமென்ட்டில் சொல்லவும்.