Published:Updated:

`நட்ராஜ் ஷாட்' கபில்தேவுக்கு அன்று நாம் செய்தது துரோகம்... ஏனென்றால்?! #KapilDev #NatrajShot

யோசித்துப் பார்த்தால் அவர் இந்திய அணிக்கு கொடுத்ததற்கு ஈடாக எந்த பெரிய பலனையும் பெறவில்லை. அவரை பாதுகாக்க எந்த நடவடிக்கையையும் இந்திய அணி நிர்வாகம் செய்யவில்லை.

Kapil Dev
Kapil Dev ( Photo from Twitter )

கபில்தேவ் இந்திய கிரிக்கெட்டுக்குள் ஒரு வீரனாக அடியெடுத்து வைத்த காலத்தில், அதுவும் அதுவரை இந்திய கிரிக்கெட் அணி கண்டிராத ஒரு வீரனாக அடியெடுத்து வைத்த காலத்தில் இந்திய அணி நம் பழைய குடும்ப அமைப்பை ஒத்திருந்தது. பேட்ஸ்மேன்கள் கணவர்களைப்போல. வேலைக்குப் போய் வருவது மட்டுமே அவர்கள் வேலை, மற்றவை அல்ல என்பதைப் போல ரன் எடுப்பதை மட்டுமே அவர்கள் வேலையாகச் செய்வார்கள். ஃபீல்டிங் என்பது அவர்கள் அஜெண்டாவிலேயே இருக்காது. அவர்கள் அணிந்திருக்கும் ஆடையில் சிறு அழுக்குப்பட்டாலும் அது அவர்களுக்கு இழுக்கு என நினைப்பார்கள். பந்து வீச்சாளர்கள் மனைவிபோல... பந்து வீசிவிட்டு கொஞ்சம் ஃபீல்டிங்கும் செய்வார்கள். ஆனால், ரன் எடுக்கமாட்டார்கள். அந்தச் சமயத்தில் வேலைக்கும் போய், வீட்டு வேலையும் செய்யும் நவநாகரிக மங்கையைப் போல் அணிக்குள் வந்தவர்தான் இந்தியாவின் ஈடு இணையற்ற ஆல்ரவுண்டர் கபில்தேவ்.

கபில் தேவ் பயோபிக்கில் ரன்வீர் சிங்
கபில் தேவ் பயோபிக்கில் ரன்வீர் சிங்
Photo: Eanveer Singh / Twitter

கபில்தேவ் தன் 16 வயதில் ஹரியானா அணிக்கு ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஆடியபோதே பலரது கவனத்தை ஈர்த்தார். அவரின் பந்துவீச்சு வேகமும், பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கும் லைன் அண்ட் லென்த்தும் பேசுபொருளானது. பெரிய அணிகளுக்கு எதிராக எல்லாம் ஐந்து விக்கெட் சாதனையை அநாயாசமாக செய்துவந்தார். அவரை அணிக்குள் எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் தேர்வாளர்களுக்கு வந்தது. தேசிய அளவிலான பயிற்சி முகாமில் காலையில் மாங்கு மாங்கென்று 20 ஓவர்களுக்கு மேல் வீசிவிட்டு வந்தவருக்கு நான்கு சப்பாத்தியும் சப்ஜியும் காத்திருந்தது. ``நான் ஒரு வேகப்பந்து வீச்சாளன் எனக்கு இது எப்படி போதும்?'' என கபில் கேட்டதற்கு அதிகாரிகள் ``இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளன் என்ற சாதியே இல்லை'' என்று பதில் அளித்தார்கள். ``பொறுங்கள் அப்படி ஒரு சாதியை உருவாக்குகிறேன்'' என்று மனதுக்குள் சூளுரைத்திருப்பார் கபில். அந்த வெறிதான் இந்திய அணி கிரிக்கெட் உலகின் முக்கிய அணிகளுள் ஒன்றாக மாற காரணமாக அமைந்தது.

1978-ல் தன் பத்தொன்பதாவது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக கபில்தேவ் அறிமுகமானபோது, இந்திய ரசிகர்கள் அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர். இவ்வளவு வேகமாக துல்லியமாக பந்து வீச நம்மிடமும் ஆட்கள் உள்ளனரா என்பதே அனைவரின் ஆச்சர்யமும்.

பாகிஸ்தானுக்கு எதிராக அவரின் பந்து வீச்சைப் பார்த்தவுடன் பத்திரிகைகள் அவருக்கு வைத்த பெயர், `ஹரியானா எக்ஸ்பிரஸ்'.

போதாக்குறைக்கு அற்புதமான க்ளீன் ஹிட்டிங் வேறு. அதற்கு முன் நம் இந்திய பேட்ஸ்மேன்கள், தன்னிடம் டியூஷன் படிக்கும் மாணவர்கள் கிளாஸில் தவறு செய்தால் பட்டும் படாமல் அடிப்பார்களே சில ஆசிரியர்கள் அதுபோலத்தான் அடிப்பார்கள். பவுண்டரி என்பதே குறைவாகத்தான் இருக்கும். ஓங்கி அடித்தாலும், எப்படியும் தடுத்துவிடலாம் என எதிரணி வீரர்கள் நம்பிக்கையோடு விரட்டுவார்கள். ஆனால், கபில்தேவோ தன் மகளுக்கு காதல் கடிதம் கொடுத்தவனை அடிப்பதுபோல் `பளார் பளார்' என்று அடிப்பார். அடித்த உடனே அது நிச்சயம் பவுண்டரி என்பது தெரியும் என்பதால் எதிரணி வீரர்கள் பந்தைத் துரத்த மாட்டார்கள்.

Vikatan
Kapil Dev
Kapil Dev
Photo: ICC / Twitter

பெளலிங், பேட்டிங் என இரண்டின் மூலமும் மக்களிடம் பெரும் அபிமானம் பெற்ற கிரிக்கெட் வீரராக மாறினார் கபில்தேவ். எண்ணி நான்கே ஆண்டுகளில் 82-ல் அப்போதைய கேப்டன் சுனில் கவாஸ்கர் ஓய்வு எடுத்த ஒரு தொடரில் கேப்டனாக பதவியேற்றார். பின்னர் அந்த ஆண்டு மேற்கிந்திய தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். 1983 உலக கோப்பைக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டு அந்தக் கோப்பையை வென்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கிரிக்கெட் பரவ காரணமானார்.

சூட்டோடு சூடாக மேற்கிந்திய அணி, இந்திய சுற்றுப்பயணத்துக்கு வந்து, ஃபைனலில் தோற்ற பாவத்துக்கு பிராயச்சித்தம் செய்துவிட்டுப் போனது. அந்தப் படுதோல்வியின் காரணமாக கபில்தேவிடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் கவாஸ்கரிடம் கொடுக்கப்பட்டது. மீண்டும் 1986-ல் கபில்தேவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இங்கிலாந்தை அவர்கள் மண்ணிலேயே டெஸ்ட் தொடரில் வென்று சாதனை படைத்தார். ஆஸ்திரேலியாவுடன் கிட்டத்தட்ட டெஸ்ட் தொடரை வெல்லும் வரை சென்றார். பின் 1987 ரிலையன்ஸ் உலககோப்பையில் அரை இறுதிவரை அணியை இழுத்துச் சென்றார். ஆனாலும், மீண்டும் கேப்டன்சியை இழந்து 93-94 சீசன் வரை விளையாடி தன்னுடைய 35-வது வயதில் ஓய்வு பெற்றார் கபில்.

`டிசிப்ளினரி நடவடிக்கை' - கபில்தேவ் கடுப்பான டெல்லி டெஸ்ட் `சம்பவம்'! #VikatanVintage

யோசித்துப் பார்த்தால் அவர் இந்திய அணிக்கு கொடுத்ததற்கு ஈடாக எந்தப் பெரிய பலனையும் பெறவில்லை. அவரை பாதுகாக்க எந்த நடவடிக்கையையும் இந்திய அணி நிர்வாகம் செய்யவில்லை. எவ்வளவு வெறிகொண்டு போட்டாலும் முட்டிக்கு மேல் பந்து எழும்பாத ஆடுகளங்கள் மட்டும் இருக்கும் நாட்டில் யார்தான் வேகப்பந்து வீச்சாளராக வர விரும்புவார்கள்? அப்படி ஒரு தன் முனைப்போடு வந்தவரை முடிந்தவரை தட்டிக் கழிக்கவே முயன்றார்கள்.

வேகப்பந்து வீச்சாளருக்கு இன்னொரு முனையிலும் நல்ல துணை இருந்தால்தான் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியைக் கொடுத்து விக்கெட்களை வீழ்த்த முடியும். உதாரணத்துக்கு டென்னிஸ் லில்லி – ஜெஃப் தாம்சன் முதல் வாசிம் அக்ரம்-வக்கார் யூனூஸ், அம்புரோஸ்- வால்ஷ், ஆலன் டொனால்ட் – ஷான் போலக், மெக்ராத் – ப்ரெட் லீ என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், கபில்தேவ் தன் உச்சபட்ச ஃபார்மில் இருந்தபோது அப்படி ஒரு துணை அமையவே இல்லை. மதன்லால், மொஹிந்தர் அமர்நாத் போன்றவர்கள்தான் அவருக்கு அடுத்த ஓவரை வீசுவார்கள். ஒரு முறை விவியன் ரிச்சர்ட்ஸ், மதன்லாலிடம் சென்று, ``ஆஃப் ஸ்பின் போடுவதற்கு எதற்கு இவ்வளவு தூரம் ஓடி வருகிறீர்கள்'' எனக் கேட்டதாகக் கூடச் சொல்வார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு ரோஜர் பின்னி, சேத்தன் ஷர்மா என பெளலர்கள் வந்தாலும் அவர்களும் தங்கள் திறமையைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தவில்லை.

Kapil Dev
Kapil Dev
Photo: ICC / Twitter

ஒற்றை ஆளாகத் தொடர்ந்து பந்து வீசி, காலில் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்குப் போனது கபிலின் நிலை. அதனால் அவர் வேகம் குறைந்தபோது அவுட் ஸ்விங்கர் என்னும் ஆயுதத்தை எடுத்தார். இந்திய மைதானங்களில் அது பெரும் பலனை அளிக்காவிட்டாலும் வெளிநாட்டு மைதானங்களில் நல்ல பலனைத் தந்தது. 1991-92ல் அவரது கடைசி ஆஸ்திரேலிய பயணத்தில் கூட ஆலன் பார்டர் போன்ற முன்னணி வீரர்கள் அலறும்படி இருந்தது அவரது பந்து வீச்சு.

கபில்தேவ் ஓய்வு பெறும்போது டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகள் (434) எடுத்த பந்து வீச்சாளராக ஓய்வுபெற்றார். 6 ஆண்டுகள் கழித்தே அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டது. 434 விக்கெட்டுகளில் பாதிக்கும் மேலான விக்கெட்டுகளை உயிரற்ற இந்திய ஆடுகளங்களில்தான் வீழ்த்தினார். சக வீரர்களின் ஒத்துழைப்பின்மை, உடன் வீசத் தகுதியான பந்துவீச்சாளர் இல்லாதது, கிரிக்கெட் வாரியத்தின் பாரபட்சம் இத்தனையையும் தாண்டித்தான் அவர் இந்தச் சாதனையைச் செய்தார். 434 விக்கெட்டுகள் மட்டுமல்ல ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ரன்களையும் டெஸ்ட் மேட்ச்களில் அவர் குவித்திருந்தார். எப்போதெல்லாம் இந்திய அணி தடுமாறுகிறதோ அப்போதெல்லாம் தன் பங்களிப்பை சரியாகச் செய்துவிடுவார் கபில்தேவ்.

கபில் தேவ்
கபில் தேவ்
Photo: S.Kumaresan / Vikatan
Vikatan

1986-ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு விளையாட வந்திருந்தது. முதல் இன்னிங்ஸில் அவர்கள் இமாலய ஸ்கோரை குவிக்க, அடுத்து விளையாடிய இந்திய அணி தடுமாறியது. கபில்தேவ், மனீந்தர் சிங் உள்ளிட்ட பந்து வீச்சாளர்களை அடுத்த முனையில் நிறுத்தி 119 ரன்களைக் குவித்து ஃபாலோ ஆனில் இருந்து காப்பாற்றினார். 91-ல் இந்தியா, இங்கிலாந்துக்குச் சென்றிருந்தபோது, ஃபாலோ ஆனைத் தவிர்க்க 24 ரன்கள் தேவை, ஒரு விக்கெட் மட்டுமே கைவசம். அந்த ஒவரின் கடைசி நான்கு பந்துகளில் தொடர்ந்து நான்கு சிக்ஸர்களை அடித்து ஃபாலோ ஆனில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றினார். அடுத்த ஓவரின் முதல் பந்தில் மறுமுனையில் நின்றவர் அவுட். 1983 உலக கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக 17 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறியபோது 175 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெறச் செய்த ஒரு சம்பவமே அவர் பெயரை காலம் முழுவதும் சொல்லிக்கொண்டிருக்கும்.

Vikatan

கபில்தேவின் பௌலிங், பேட்டிங்போல குறிப்பிட வேண்டிய ஒன்று அவரது ஃபீல்டிங். 1983 உலகக்கோப்பை ஃபைனலில் அவர் விவியன் ரிச்சர்ட்ஸ்க்குப் பிடித்த ரன்னிங் கேட்ச் உடனடியாக எல்லோரது நினைவுக்கும் வரும். அவுட்ஃபீல்டில் சிறப்பாக ஃபீல்ட் செய்யக்கூடியவர் கபில்தேவ். அப்போதைய இந்திய அணி வீரர்கள் பவுண்டரி லைனில் இருந்து பந்தை எறிந்தால் அது விக்கெட் கீப்பரிடம் வரும்போது, ஸ்டேஷனில் வந்து நிற்கும் பேசஞ்சர் டிரெய்னின் வேகத்தில்தான் வந்து சேரும். ஆனால், கபில்தேவ் ஒன் பவுன்ஸில் விக்கெட் கீப்பரின் இடுப்புக்கு வந்து சேரும்படி எக்ஸ்பிரஸ் வேகத்தில் எறிவார்.

கபில்தேவ் ஓய்வுபெற்ற பின்னும் அவருக்கு எந்தவித கெளரவத்தையும் இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுக்கவில்லை. தன் முனைப்பாக இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்) எனும் 20-20 தொடரைத் தொடங்கி நடத்தினார். அதற்கு மைதானங்கள் கிடைக்கவிடாமல் இடையூறு செய்ததோடு, அதில் விளையாடும் வீரர்களுக்கும் எதிர்காலத்தில் இந்திய அணியில் வாய்ப்பு இல்லை என மிரட்டியது பிசிசிஐ. அதற்குப்போட்டியாக இந்தியன் பிரிமியர் லீக்கையும் தொடங்கியது. 1983-க்குப் பின் மூலை முடுக்கெல்லாம் இந்தியாவில் கிரிக்கெட்டை மக்கள் ஆட ஒரு காரணமாய் இருந்தது, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் நம்மால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் எனக் காட்டியது, வேகப்பந்து வீச்சில் நம்மாலும் சாதிக்க முடியும் எனப் பல ஃபாஸ்ட் பெளலர்கள் வர உந்து சக்தியாக இருந்தது, இப்போது கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல் ஆரம்பித்து கோடி கோடியாய் சம்பாதிக்க ஒரு காரணமாய் இருந்தது என கபில்தேவின் சாதனைகள் பல.

Kapil Dev
Kapil Dev
Photo: Kapil Dev / Twitter

ஆனால் குயுக்தி, குள்ளநரித்தனம் எதுவுமில்லாத சுத்த வீரனான கபில்தேவுக்கு கிரிக்கெட் வாரியம் செய்தது பச்சைத் துரோகம். அவருக்கு எந்த அங்கீகாரத்தையும் கொடுத்துவிடக் கூடாது என்பதில் கூட்டணிப் போட்டு உழைத்தார்கள். கபில் எதையும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. எதிர்மறை வியூகங்கள், எதிர் அணியை வெறுப்பேற்றுவது போன்ற செயல்களைச் செய்யாமல் கிரிக்கெட்டை நேசித்து ஆடிய வீரன் கபில்தேவ்.

நெஞ்சுக்கு பவுன்சர் போட்டால், குழி தோண்டி படுத்துக்கொள்கிற பேட்ஸ்மேன்கள் இருந்த காலத்தில், பவுன்சரைக் கண்டதும் கண்கள் மின்ன, ஓரடி பின் சென்று, வலது காலால் மைதானமே அரை இன்ச் உள்ளே போகும் படி ஆக்ரோஷமாக அழுத்தி, இடது காலை தூக்கி நடராஜர் நர்த்தனம் போல் நிறுத்தி சண்ட மாருதமாய் பேட்டை சுழற்றுவார் கபில்தேவ்.

அப்போது ஸ்கொயர் லெக்கிற்கும் ஃபைன் லெக்கிற்கும் இடையே எத்தனை ஃபீல்டர்களை நிறுத்தினாலும் பந்து அவர்களை முறியடிக்கும். அந்த நேரத்தில் அவரின் ஆட்டத்தைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துபோனார் கபில்தேவ். அந்த உள்ளங்கள் போதும்... கபில்தேவின் பெருமையைக் காலம் முழுக்கச் சொல்லும்!