Published:Updated:

சச்சின், கங்குலிக்கு ஏற்பட்ட அதே பிரச்னைதான்!- கபில் தேவ் ராஜினாமாவுக்கு என்ன காரணம்?

சாந்தா ரங்கசாமி ராஜினாமா செய்து சில தினங்கள்கூட ஆகாத நிலையில் தற்போது கபில் தேவ்வும் சிஏசி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கபில் தேவ்
கபில் தேவ்

உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள வினோத் ராய் குழுவின் கீழ் முன்னாள் வீரர்கள் பலரும் பிசிசிஐ அமைப்பில் பல்வேறு பதவிகளில் இருந்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் முன்னாள் கேப்டன் கபில் தேவ். இந்திய ஆண் மற்றும் பெண்கள் அணிக்குப் பயிற்சியாளர் உட்பட சில பொறுப்புகளைத் தேர்வு செய்யும் சிஏசி எனப்படும் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்தார் கபில் தேவ்.

அன்ஷுமான் கெய்க்வாட், கபில் தேவ், சாந்தா ரங்கசாமி
அன்ஷுமான் கெய்க்வாட், கபில் தேவ், சாந்தா ரங்கசாமி

அன்ஷுமான் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோரும் அடங்கியுள்ள இந்தக் குழுதான் சமீப காலமாக பயிற்சியாளர்களைத் தேர்வு செய்துவருகிறது. சமீபத்தில் ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக தேர்வு செய்ததும் இந்தக் குழுதான். இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு இந்தக் குழுவில் இருந்த சாந்தா ரங்கசாமி தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த சில தினங்கள் கூட ஆகாத நிலையில் தற்போது கபில் தேவ்வும் சிஏசி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது சர்ச்சையாக மாறியுள்ளது.

Vikatan

சர்ச்சைக்கு காரணமான விதி!

புதிய விதிமுறைகளின்படி பிசிசிஐயில் பொறுப்பில் இருக்கும் எந்த நபரும் ஆதாயம் பெறும் இரட்டை பதவிகளில் இருக்கக் கூடாது. இதனடிப்படையில் சமீபத்தில் சஞ்சீவ் குப்தா என்ற நபர் கபில் தேவ் மீதும், சாந்தா ரங்கசாமி மீதும் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. சிஏசி தலைவராக இருக்கும் அதே நேரம், கிரிக்கெட் வர்ணனையாளராகவும், மைதானங்களுக்கு விளக்கு அமைத்துக்கொடுக்கும் நிறுவனம் ஒன்றையும் கபில் தேவ் நடத்திவருகிறார். விதிமுறைப்படி இது தவறு என கபில் மற்றும் சாந்தா மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இருவருக்கும் பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்தே கபில் தேவ் ராஜினாமா முடிவு எடுத்துள்ளார். இதே விதியின் கீழ்தான் ஐபிஎல் அணிகளில் பதவி வகித்துக்கொண்டும் பிசிசிஐயிலும் பொறுப்பில் இருந்த முன்னாள் வீரர்கள் சச்சின், கங்குலி, லக்ஷ்மண் ஆகியோருக்கும் பிரச்னை ஏற்பட்டது.

கபில் தேவ்
கபில் தேவ்

இதில் கங்குலி, லக்ஷ்மண் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சச்சினோ, ``மும்பை இந்தியன்ஸ் அணியில் கவுரவ பதவியில்தான் இருக்கிறேன். அந்தப் பதவிக்காக ஒரு ரூபாய்கூட ஆதாயம் பெறவில்லை. அப்படி இருக்கையில் அதை ஆதாயம் பெறும் பதவியாக எப்படி கருத முடியும்" எனப் பிசிசிஐ-க்கு விளக்கம் அளித்தார். பின்னர் இந்த சர்ச்சை முடிவுக்குவந்தது. இந்த நிலையில், இதே பிரச்னையில் கபில் தேவ்வும் சிக்கியுள்ளது முன்னாள் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ``ராஜினாமா தேவையில்லை. ஏனென்றால் அவர்களுக்கு பயிற்சியாளர்களைத் தேர்வு செய்யும் பணி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி வருடத்துக்கு ஒரு முறை நடப்பதல்ல" என வினோத் ராய் பேசியுள்ளார்.

Vikatan