Published:Updated:

கபில் தேவ் - ஒரு தேசத்தின் பெருமை; இந்திய கிரிக்கெட் அத்தியாயத்தின் தொடக்கம்! | HBD Kapil Dev

Kapil Dev

எழுபதுகளில், எண்பதுகளில் பிறந்தவர்கள் கபில்தேவ் பெருமை பேசுவதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஆனால், தொன்னூறுகளில் பிறந்தவர்களையும் அவர் கதை பிரமிக்கவைத்திருக்கிறது. சச்சினைப் பார்த்து வளர்ந்தவர்களுக்கும் இவர்மீதான ஓர் அசாத்திய பிம்பத்தை உருவாக்கியிருக்கிறது. அதற்கு நான் சாட்சி!

கபில் தேவ் - ஒரு தேசத்தின் பெருமை; இந்திய கிரிக்கெட் அத்தியாயத்தின் தொடக்கம்! | HBD Kapil Dev

எழுபதுகளில், எண்பதுகளில் பிறந்தவர்கள் கபில்தேவ் பெருமை பேசுவதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஆனால், தொன்னூறுகளில் பிறந்தவர்களையும் அவர் கதை பிரமிக்கவைத்திருக்கிறது. சச்சினைப் பார்த்து வளர்ந்தவர்களுக்கும் இவர்மீதான ஓர் அசாத்திய பிம்பத்தை உருவாக்கியிருக்கிறது. அதற்கு நான் சாட்சி!

Published:Updated:
Kapil Dev

அக்டோபர் 17, 1994. இந்திய அணிக்காக Kapil Dev கடைசியாக ஆடிய தினம். நான் 44 நாள் குழந்தை! அதிலிருந்து சுமார் ஆறு ஆண்டுகள் கழித்துத்தான் கிரிக்கெட் பற்றி தெரிந்தது. அப்போது, இந்தியா புதிய கடவுளைத் தேர்ந்தெடுத்திருந்தது. அதற்குள் Kapil Dev வரலாறு ஆகிவிட்டார். புயல் கரையைக் கடந்ததும், மழை பொழிவதுதானே இயற்கையின் இயல்பு. ஹரியானா ஹரிகேன் ஓய்ந்ததும் சச்சின் எனும் மேகம் மொத்த தேசத்தையும் சூழ்ந்தது. அம்மேகம் பொழிந்த ரன் மழையில் ரெக்கார்டுகளும், வரலாறுகளும் அடித்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தன. அவரே ரெக்கார்ட் ஆனார். வரலாறும் ஆனார்.

அந்தச் சூழ்நிலையில் வளர்ந்த எங்கள் கிரிக்கெட் வரலாறு 21-ம் நூற்றாண்டில் இருந்துதான் தொடங்குகிறது. அதில் கபில்தேவின் பெயருக்கு முன்னால் ‘முன்னாள்’ என்ற பட்டமும் சேர்ந்துகொள்ளும். சச்சின், கங்குலி பெருமை பேசுமளவு மீடியா கபிலின் பெருமை பேசியதில்லை. அந்த 'முன்னாள்' என்ற வார்த்தை, சாதனையாளர்களுக்குக் கிடைத்த சாபக்காடேகவே எப்போதும் தோன்றியிருக்கிறது.
83 Movie
83 Movie

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிகழ்கால மோகத்திற்கு மத்தியில் கடந்த காலம் எப்படி அடிபட்டுப்போகும் என்பதற்கு பாலிவுட்டே சாட்சி. தோனியின் கதைக்குப் பிறகுதான் சச்சினின் கதை படமானது. இப்போதுதான் கபிலின் கதை வெளியாகியிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சச்சின் மாயத்துக்கும் Fatal 4 மோகத்துக்கும் இடையே வளர்ந்த எனக்குள் Kapil Dev என்ற வரலாற்றின் பிம்பம் வளர்ந்தது சாதாரண விஷயம் இல்லை. 1983 உலகக் கோப்பையை வென்று கொடுத்தார் என்ற கூகுள் fact எந்த வகையிலும் அதற்குக் காரணமாக இருந்திருக்கப் போவதில்லை. இருந்தும், Kapil Dev எப்படி என் ஆதர்சம் ஆனார்..! அதுதான் கபில்தேவ்! அதுதான் அவர் இந்திய கிரிக்கெட்டில் ஏற்படுத்திய தாக்கம்!

வெற்றியும் தோல்வியும் இங்கு ஹீரோக்களை, லூஸர்களை முடிவு செய்துவிடுவது இல்லை. அந்த வெற்றியோ, தோல்வியோ ஈட்டப்படும் விதம்தான் எப்பேர்ப்பட்ட நாயகனையும் உருவாக்குகிறது.

இந்தியா 1983 உலகக் கோப்பையை வென்றது – இதைப் படித்தால் இதில் கபில்தேவின் தாக்கம் ஒன்றும் இல்லை.

கத்துக்குட்டி இந்தியா 1983 உலகக் கோப்பையை வென்றது – இதுவும் மிகப்பெரிய சாதனை. சந்தேகம் இல்லை.

நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸை ஃபைனலில் வென்று, கத்துக்குட்டி இந்தியா 1983 உலகக் கோப்பையை வென்றது – ஆம், கபில்தேவ் எனும் மகத்தான வீரனின், கேப்டனின் சாதனை இதுதான்.

Kapil Dev
Kapil Dev
“அப்போதைய இந்திய அணி அவ்வளவு தைரியமான அணி கிடையாது. வீரர்கள் எளிதில் தளர்ந்துவிடுவார்கள். அதற்கு முன் அவர்களிடம் போராட்ட குணத்தை அதிகம் பார்த்ததில்லை. ஆனால், கபில் தேவ் அதை மாற்றினார். களத்தில் தன் வீரர்கள் சோர்ந்துபோகவே விடமாட்டார். அந்த மொத்த அணியின் திறனையும் அவர் ஒருவராகத் தூக்கி நிறுத்தினார். இந்திய அணியின் முகத்தை மொத்தமாக மாற்றினார். நிச்சயம் அவர்தான் அந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கியக் காரணம். அதுவரை இந்திய அணியிடம் இல்லாத வின்னிங் ஆட்டிட்யூடை கபில்தான் விதைத்திருப்பார்.”

இதைச் சொன்னது யார் தெரியுமா? 100 மீட்டர் தூரத்தில் அமர்ந்து போட்டியைக் கவர் செய்த பத்திரிகையாளரோ, பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவிலிருந்து தொலைக்காட்சியின் வாயிலாக போட்டியைப் பார்த்த ரசிகரோ இதைச் சொல்லவில்லை. 83 படத்தில் காட்டப்பட்டதுபோல் ஶ்ரீகாந்தும் சொல்லவில்லை.

கபில்தேவை, இந்திய அணியை, இந்தியன் அணியின் அணுகுமுறையை நேருக்கு நேர் களத்தில் நின்று பார்த்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் சொன்ன வார்த்தைகள் அவை.

3 ஆண்டுகளுக்கு முன் அவரிடம் நான் எடுத்த பேட்டியில், “1983 உலகக் கோப்பையை இந்தியா வென்றதன் காரணம் என்ன?” என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் இது! டீம் ஸ்பிரிட் என்றோ, கூட்டுமுயற்சி என்றோ அவர் பொத்தாம் பொதுவாக சொல்லியிருக்கலாம். ஆனால், ஒற்றை வார்த்தையில், கபில்தேவ் தான் காரணம் என்றார்!

Kapil Dev
Kapil Dev

கபில்தேவின் பெருமையை முழுமையாக அறியவேண்டுமெனில், அவர் எப்படி என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று தெரியவேண்டுமெனில், கொஞ்சம் அவரை விட்டு இன்னொரு ஜாம்பவானைப் பற்றிப் பேசவேண்டும். விவியன் ரிச்சர்ட்ஸ் பற்றி, அவர் ஆடிய அந்த மகத்தான வெஸ்ட் இண்டீஸ் பற்றிப் பேசவேண்டும்.

இந்த நூற்றாண்டில் கிரிக்கெட் பார்த்த எங்களுக்கு மஞ்சள் உடை அணிந்த அந்த பான்ட்டிங்கின் அணிதான் சிம்மசொப்பனம். அதுபோல், எங்கள் முந்தைய தலைமுறைக்கு கிளைவ் லாய்டின் வெஸ்ட் இண்டீஸ். எங்களிடம் 2K கிட்ஸ் கிரிக்கெட் பற்றிப் பேசினால், “அந்தக் காலத்துல சச்சின், கங்குலி ஓப்பனிங் பார்ட்னர்ஷிப், டிராவிட் – லட்சுமண் பார்ட்னர்ஷிப்” என இந்திய அணி பற்றிப் பேச ஆயிரம் கதைகள் இருக்கும். யுவராஜ், ஜாஹிர், சேவாக் என நிறைய பெருமைகள் பேசுவோம். ஆனால், எங்களின் முந்தைய தலைமுறையின் கிரிக்கெட் கதைகள் கரீபீய தீவுகளைச் சுற்றி வட்டமிடுபவையே!

கிளைவ் லாயிட், கார்டன் கிரீனிட்ஜ், ஆண்டி ராபர்ட்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், ஜோயல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங், மால்கம் மார்ஷல் என அதுவொரு Cult! ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியைப் பார்க்கும்போதும் அவர்களைப் பற்றிய ஏதோவொரு விஷயம் சொல்வார்கள். கிரிக்கெட்டை முதன்முதலில் காட்டிய அப்பாவிலிருந்து, ஊரில் கிரிக்கெட் பேட்டோடு சிறுவர்களுடன் சுற்றித் திரியும் பெருசுகள் எல்லோரும் அந்தக் கதையைத்தான் சொல்வார்கள்.
Kapil Dev
Kapil Dev

சிறுவயதில் பந்து பொறுக்கிப் போட போகுமிடத்தில் நிறைய கதை கேட்டிருக்கிறேன். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று டெமோவும் பார்த்திருக்கிறேன்! சதீஷ் என்றொரு முரட்டு பேட்ஸ்மேன் இருந்தார். எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் ஏனோ தானோவென்று நடந்து வந்து, லுங்கியை மடித்துக் கட்டிவிட்டு அசால்டாக பவுண்டரி அடிப்பார். அங்கு அவர் பெயர் ரிச்சர்ட்ஸ். காட்டுத்தனமாக வீசும் ராஜேந்திரன் அங்கிளின் பெயர் மார்ஷல். இப்படியான வீரர்கள் எங்கள் தலைமுறையிலும் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு சேவாக், அக்தர், கெய்ல், லீ என்று வெவ்வேறு நாட்டு வீரர்களின் பெயர்கள் வைத்திருப்போம். ஆனால், முந்தைய தலைமுறையில் எல்லோருமே கரீபிய ஜெராக்ஸ்தான்! இவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மேட்சைப் பார்க்கும்போதும் அந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் பெருமையைச் சொல்லும் அப்பா. இவர்களுக்கு மத்தியில் வளர்ந்தவனுக்கு அந்த வெஸ்ட் இண்டீஸ் அணி பிரமிப்பைக் கொடுக்காவிட்டால்தான் ஆச்சர்யம்.

அந்த அணியின் மீது அப்படியொரு பிம்பத்தை உருவாக்கியவர்கள், இன்னொரு கதையும் சொல்வார்கள். அந்த மகத்தான அணியை மண்டியிடச் செய்த மாவீரனின் கதை. கபில்தேவின் கதை. ரிச்சர்ட்ஸ் சொன்ன விஷயங்களையேதான் அவரும் சொல்லியிருக்கிறார்.

"அப்போதைய இந்திய அணி அவ்வளவு தைரியமான அணி கிடையாது. வீரர்கள் எளிதில் தளர்ந்துவிடுவார்கள். அதற்கு முன் அவர்களிடம் போராட்ட குணத்தை அதிகம் பார்த்ததில்லை!"
இந்த போர்ஷனைப் பற்றி மிகவும் விரிவாக, கோபமும் ஆதங்கமும் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

அதன்பிறகு கபில் பற்றிப் பேசும்போது சந்தோஷமும் பெருமையும் கலந்து வெளிவரும். அதற்கும் மேல், அவர்கள் அந்தக் கதைகளைச் சொல்லும்போதெல்லாம் அவர் மீதான மரியாதை வெளிப்படும்.

அந்த மரியாதையை என் தந்தையின் கண்களில் மட்டும் பார்க்கவில்லை. அந்தக் கதை சொன்ன சீனியர்களின் கண்களில் மட்டும் பார்க்கவில்லை. அன்றைய பேட்டியில் கபில்தேவ் பற்றிப் பேசியபோது, ரிச்சர்ட்ஸ் கண்களிலும் அந்த மரியாதை தெரிந்தது. “நான் அவரைப் பார்த்து வியந்திருக்கிறேன்” என்று அவர் சொன்னது, கபிலின் கேட்ச் பற்றிச் சொல்லும்போது எவ்வளவு உண்மை என்று புரிந்தது.

Kapil Dev
Kapil Dev
உலகக் கோப்பை பைனலில் தன்னுடைய கேட்சைப் பிடித்த இந்தியக் கேப்டன் பற்றி ரிச்சர்ட்ஸ் சொன்ன வார்த்தைகள் இவை:
“உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அந்த இடத்தில் அமர்நாத், கவாஸ்கர் போன்றவர்களில் யாரையாவது பார்த்திருந்தால், `நிச்சயம் எனக்கு வாய்ப்பு இருக்கிறது’ என்று நினைத்திருப்பேன். ஆனால், அந்த இடத்தில் கபில்தேவைப் பார்த்த நொடியே எனக்கு வாய்ப்பு இல்லை என்பதை முடிவு செய்துவிட்டேன். அவர் கேட்சைப் பிடிப்பதற்கு முன்பே என் கிளவுஸ்களை நான் கழற்றி நடக்கத்தொடங்கிவிட்டேன். பெவிலியன் நோக்கி நடக்கும்போது ரசிகர்கள் எழுப்பிய பெரும் சத்தம், அவர் அதைப் பிடித்துவிட்டார் என்பதை உறுதி செய்தது. கபில் நிச்சயம் அதைத் தவறவிடமாட்டார் என்று எனக்குத் தெரியும்”.
விவியன் ரிச்சர்ட்ஸ்

நான் வியந்து பார்க்கும் தந்தையின் கண்களில் மரியாதை வெளிப்படுகிறது. அவர் வியந்து பேசிய ரிச்சர்ட்ஸ் எனும் ஜாம்பவானின் கண்களில்கூட மரியாதை வெளிப்படுகிறது. அப்படியெனில் கபில்தேவ் அவர்களின் மனதில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும்!

கபில்தேவ் அவருக்கான மரியாதையை மட்டும் சம்பாதிக்கவில்லை. இந்திய அணிக்கும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மரியாதை கிடைக்கக் காரணமாக இருந்தார். பல சூப்பர் ஸ்டார்கள் இருந்தாலும், அதுவரை கத்துக்குட்டியாக, போராடத் தெரியாதவர்களாக, போராட விரும்பாதவர்களாக, லூஸர்களாக மட்டுமே அறியப்பட்ட இந்திய அணிக்கு, உலகச் சாம்பியன் எனும் மாபெரும் அந்தஸ்தை ஏற்படுத்திக்கொடுத்தார். அதையெல்லாம்விட கரீபியர்களின் கதைகளை மட்டுமே பேசிக்கொண்டிருந்த என் முந்தைய தலைமுறைக்கு இந்திய கிரிக்கெட்டைப் பற்றிப் பேசுவதற்கான கதை ஒன்றை அமைத்துக் கொடுத்தார். இந்தியக் கிரிக்கெட்டுக்கு ஒரு தொடக்கம் ஏற்படுத்திக்கொடுத்தார்.

Kapil Dev with the 1983 World Cup
Kapil Dev with the 1983 World Cup

யோசித்துப் பார்த்தால் என்னுடைய கிரிக்கெட் 21-ம் நூற்றாண்டில் இருந்துதான் தொடங்குகிறதா? என் தலைமுறையின் கிரிக்கெட் சச்சினில் இருந்தா தொடங்குகிறது! நிச்சயம் இல்லை. தொடர்ந்து கிரிக்கெட் பார்ப்பதற்கு வேண்டுமானால் சச்சின், கங்குலி, டிராவிட் போன்றவர்கள் காரணமாக இருக்கலாம். ஆனால், முதல் முறை பார்த்தது, அதை ரசித்தது நம் முந்தைய தலைமுறையின் வாயிலாகத்தான் இருக்கும். பெரும்பாலும் அப்பாக்களின் கண்களின் வழியாகத்தான் இருக்கும்.

என் கிரிக்கெட் அப்படித்தான் தொடங்கியது. கபில்தேவினால் பெருமை கொண்ட கண்களின் வழியே!