Published:Updated:

``இந்தியாவிடம் அல்ல; சச்சினிடம்தான் தோற்றுவிட்டோம்!''- ஆஸ்திரேலியாவைச் சம்பவம் செய்த நாள் இது!

சச்சின்
சச்சின் ( Vikatan )

இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதின. சச்சினின் புயல் வேக ஆட்டத்தால் இந்திய அணி, நியூஸிலாந்தைவிட சிறந்த ரன் ரேட்டைப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

''நாங்கள் இந்தியாவிடம் தோற்கவில்லை சச்சின் என்ற மனிதரிடம்தான் தோற்றுவிட்டோம். நான் பார்த்த சிறந்த ஆட்டம் இது. இவ்வளவு சிறந்த வீரரிடம் தோற்பதில் வெட்கம் எதுவுமில்லை. டான் பிராட்மேனுக்குப் பின் நாங்கள் பார்த்த சிறந்த வீரர் சச்சின்தான்.'' - ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் வாக் கூறிய வார்தைகள் இவை.

1998-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி ஷார்ஜாவில் கொக கோலா கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதின. சச்சினின் புயல் வேக ஆட்டத்தால் இந்திய அணி, நியூஸிலாந்தைவிட சிறந்த ரன் ரேட்டைப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

சச்சினின் பிறந்தநாளன்று நடைபெற்ற போட்டி அது. சச்சின் இரண்டு நாளைக்கு முன் ஆடிய ஆட்டம் மாதிரி மீண்டும் ஆடுவாரா இல்லை, ஆஸ்திரேலியா சச்சின் என்ற துருப்புச்சீட்டை உடைத்து வெற்றிவாகை சூடுமா என்று பரபரப்பாக நடைபெற்ற போட்டி அது.

சச்சின்
சச்சின்
Wisden

டாஸ் ஜெயித்த இந்தியா ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா, ஸ்டீவ் வாக் மற்றும் லீமேன் இருவரும் தலா 70 ரன்கள் அடிக்க, 272 ரன்களைக் குவித்தது.

இந்தியா சார்பில் சச்சின் மற்றும் கங்குலி களமிறங்கினார்கள். ஆஸ்திரேலியா குறி வைத்தது எல்லாம் சச்சின் விக்கெட்டைத்தான். அவர் விக்கெட்டை எடுத்துவிட்டால் இந்திய அணி தலைவனை இழந்த படை போல் ஆகிவிடும் என்று கணக்குப் போட்டது. கேப்டன் ஸ்டீவ் வாக், மேனேஜர் ஆலன் பார்டர் மற்றும் அனைத்து பெளலர்கள் சேர்ந்து சச்சினை எப்படி அவுட் ஆக்குவது, எந்த மாதிரி பந்துகளை அவருக்கு வீசுவது, எப்படி ஃபீல்ட் செட் செய்வது எனப் போட்டிக்கு முன் பல விதங்களில் ஆலோசனை நடத்தினர். ஆனால், அவர்கள்கூடி விவாதித்த ஒரு விஷயத்தைக்கூட களத்தில் செயல்படுத்த முடியவில்லை. செயல்படுத்தவும் சச்சின் விடவில்லை.

காஸ்ப்ரோவிச் பந்தில் கவர் டிரைவ் அடித்து தன் ரன் வேட்டையை ஆரம்பித்தார். டேமியன் ஃபிளெமிங் ஓவரில் ஸ்ட்ரெயிட் டிரைவ் ஆடிய பந்து ராக்கெட் வேகத்தில் கங்குயின் தலையைத் தாண்டிச் சென்றது.

கங்குலி 23 ரன்னில் அவுட் ஆக முந்தைய போட்டியில் கை கொடுத்த நயன் மோங்கியா இந்தப் போட்டியிலும் சச்சினுக்குக் கைகொடுத்தார். மோங்கியாவை ஒரு பக்கம் நிற்க வைத்துவிட்டு சச்சின் அடிக்கத் தொடங்கினார். 20-வது ஓவரில் வார்னே பந்தில் இறங்கி அடித்த சிக்ஸைப் பார்த்து ஆஸ்திரேலியா வீரர்கள் நொந்தேபோய் விட்டனர். `என்னடா இந்த மனுஷன் இப்படி ஆடுறார்'னு வார்னே பேய் அடித்த மாதிரி பிரமித்துப் போய் நின்றார். இத்தனைக்கும் அரவண்ட் தி விக்கெட்டில் வந்து கிராக் இருக்கும் பகுதியில் வீசிய பந்து அது. வழக்கமாக அப்படி வீசப்படும் பந்து அதிக அளவில் டர்ன் ஆகும். ஆனால் சச்சின் அதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை பந்தை பிட்ச் செய்யும்போதே இறங்கி வந்து சிக்ஸ் அடித்தார்.

சச்சின்
சச்சின்

கேப்டன் ஸ்டீவ் வாக் பெளலர்களை மாற்றிக்கொண்டே இருந்தார் எந்தப் பலனும் இல்லை. ஒரு கட்டத்தில் அவரே பந்து வீசியும் பார்த்தார் எதுவும் எடுபடவில்லை. ஆஸ்திரேலியா வைத்திருந்த அத்தனை திட்டங்ளையும் தகர்த்தார் சச்சின்.

36-வது ஓவரில் சச்சின் சதமடிக்க அணியின் ஸ்கோர் 190ஆக இருந்தது. ஒரு நாள் போட்டிகளில் தனது 15-வது சதத்தை நிறைவு செய்தார். ஒட்டுமொத்த மக்களும் ஒரு சேர எழுந்து கைத்தட்டி பாராட்டினார்கள். அந்தக் கை தட்டல்கள் அடங்கவே சில நிமிடங்கள் ஆகின.

சதம் அடித்த கையோடு அதிரடியை மீண்டும் கையில் எடுத்தார். அவரது பணி இன்னும் ஓய்ந்துவிடவில்லை என்பதை அறிந்திருந்தார். வார்னே பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசியவர், டாம் மூடி வீசிய பந்தில் இறங்கி வந்து சிக்ஸர்க்கு விளசினார். கமென்ட்ரியில் இருந்த டோனி க்ரெய்க் சச்சின் ஆட்டத்தைப் பார்த்து மிகவும் குஷியாகி `The little fellow has hit the big men for six. He is half his Size' என்றும் `Whatta player... whatta wonderful player...' என்றும் ரசனை மிகு வார்த்தைகளை ரம்மியமாகப் பேசிக்கொண்டே இருந்தார் .

காஸ்ப்ரோவிச் பந்தில் இறுதியாக அடித்த சிக்ஸ் பறந்து போய் ஆடியன்ஸ் வலையின் மிது விழுந்தது Oh it's high it's Sky. Its Bouncing into the roof. What a Six ! What a Six ! Way over the ground Stand. Into the roof.

ஷார்ஜா என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது சச்சினின் அதிரடி ஆட்டமும், டோனி க்ரெய்க்கின் கமென்ட்ரியும்தான். இந்த காம்போவைப் பிரித்தே பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அனைவரையும் ஈர்த்தது. சச்சின் களத்தில் ஆடினார் என்றால், அவர் ஆடிய ஒவ்வொரு ஷாட்ஸ்களுக்கும் டோனி க்ரெய்க் கமென்ட்ரியில் தூள் கிளப்பினார்.

Sachin 200
Sachin 200

131 பந்துகளைச் சந்தித்தவர் 12 பவுண்டரி, 3 சிக்ஸ் அடித்து 134 ரன்கள் எடுத்து கொக கோலா கோப்பையை இந்திய அணிக்குத் தனி ஆளாக வாங்கிக் கொடுத்தார்.

மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கியவர் அந்தத் தொடரில் 434 ரன்கள் அடித்து மேன் ஆஃப் தி சீரிஸ் அவார்டையும் வாங்கினார். அந்தத் தொடரை ஷார்ஜா சீரிஸ் என்று சொல்வதை விட சச்சின் சீரிஸ் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தினார். சச்சினுக்குப் பரிசாக வழங்கப்பட்ட காரில் ஏறி இந்திய வீரர்கள் அனைவரும் மைதானத்தை வலம் வந்தது இன்றும் பசுமை மாறா நினைவுகளாய்க் காட்சி அளிக்கிறது.

காலங்கள் பல கடந்தும் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஆட்டம் இது. அதைப் பற்றி நம்மைத் தொடர்ந்து பேசவைத்துக்கொண்டிருக்கும் இந்தக் கதையின் நாயகன் ஒட்டு மொத்த கிரிக்கெட்டின் நாயகன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சச்சின்!

அடுத்த கட்டுரைக்கு