Published:Updated:

கமல்ஹாசன் கைகொடுத்த தமிழக கிரிக்கெட் அணி... துபாயில் சாம்பியன் கோப்பை வென்று சாதனை!

நாங்கள் கலந்துகொள்ளப் போகும் போட்டிக்குச் செல்ல கடைசி நேரத்தில் உதவி கிடைக்கவில்லை. வழிதெரியாமல் தவித்துக் கொண்டிருந்தோம். கோவை போட்டிக்கு விளையாடச் சென்றிருந்தோம். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோயம்புத்தூரில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்க முயற்சி செய்தோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

துபாயில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ‘திவ்யாங் கிரிக்கெட் ப்ரிமீயர் லீக்’ (Divyang Premier League T20) கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ‘திவ்யாங் கிரிக்கெட் ப்ரிமீயர் லீக்’ டி20 போட்டிகள் துபாயில் ஏப்ரல் 8 முதல் 15 வரை நடந்தது.

இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தேர்வாகியிருந்த 90 மாற்றுத்திறனாளி வீர்ரகள் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ், கொல்கத்தா நைட் ஃபைட்டர்ஸ், மும்பை ஐடல்ஸ், குஜராத் ஹிட்டர்ஸ், ராஜஸ்தான் ராஜ்வாடா, சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் என்று 6 அணிகளாக பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகளுக்குத் தேசிய, சர்வதேசப் போட்டிகள் ஏற்கெனவே நடைபெற்றுவரும் நிலையில், இந்த ஆண்டு முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான டி.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இப்போட்டிக்குத் தமிழகத்திலிருந்து 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் என்ற அணியாகக் களமிறங்கினர். லீக் போட்டிகளின் முடிவில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ஃபைட்டர்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி, கொல்கத்தா நைட் ஃபைட்டர்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது.
உலகை ஆளும் இந்திய கிரிக்கெட்... இனி கிரிக்கெட்டின் சூப்பர் பவர் ஆஸ்திரேலியா அல்ல! #AUSvIND

கிரிக்கெட்டின் மீது தீரா ஆர்வம் கொண்ட மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் அணியில் இடம்பெற்றனர். தனி பயிற்சியாளர்கள் இல்லாமல், சுயமாகவே பயிற்சி மேற்கொண்டு தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்ட இவர்களுக்குத் துபாயில் விளையாட வாய்ப்பு கிடைத்தும், அங்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது; அங்கு நடைபெறவிருக்கும் போட்டிக்குச் செல்வதற்குத் தேவையான உதவிகள் கடைசி நேரத்தில் சென்ன சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்குக் கிடைக்காமல் போனது. நிச்சயம் ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு, கோவையில் விளையாட வந்தவர்களுக்கு வாழ்க்கை ஆச்சரியப் பரிசு ஒன்றை வைத்திருந்திருக்கிறது.

சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியினர் கோவையில் விளையாட வந்த வேளையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவையில் இருப்பதை அறிந்து அவரிடம் உதவி கேட்கலாம் என்று அணியினர் முடிவெடுத்திருக்கின்றன. அவர்களை உடனடியாக சந்தித்த கமல்ஹாசன், துபாயில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்வதற்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாக உறுதியளித்து, ஏற்பாடுகளையும் உடனே செய்து கொடுத்திருக்கிறார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“முதல்முறையாக சர்வதேசப் போட்டில் ஒன்றில் விளையாடியது மறக்க முடியாத அனுபவமாக அமைந்துவிட்டது. அதுவும் கிரிக்கெட்டின் ஜாம்பவன்கள் எல்லாம் ஆடிய ஷார்ஜா சர்வதேச மைதானத்தில், நேரடி ஒளிப்பரப்புடன் விளையாட மாற்றுதிறனாளிகளுக்கு வாய்ப்பு கொடுத்தது மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையும் கொடுத்தது.

சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் சச்சின் சிவா
சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் சச்சின் சிவா
இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதினோம். டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்வு செய்து 147 ரன்கள் குவித்தோம். அடுத்து ஆடிய கொல்கத்தா அணி 123 ரன்களில் ஆட்டமிழக்கவே 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை வென்றோம்” என்று உற்சாகம் குறையாமல் பேசுகிறார் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் சச்சின் சிவா.
சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்
சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்

“நாங்கள் கலந்துகொள்ளப் போகும் போட்டிக்குச் செல்ல கடைசி நேரத்தில் உதவி கிடைக்கவில்லை... அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று வழிதெரியாமல் தவித்துக் கொண்டிருந்தோம். கோவை போட்டிக்கு விளையாடச் சென்றிருந்தோம். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோயம்புத்தூரில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்க முயற்சி செய்தோம். உடனடியாக அனுமதி கிடைத்தது. எங்களது இக்கட்டான சூழ்நிலையை அவருக்கு விளக்கினோம். கவனமாகக் கேட்டுக்கொண்டார். நாங்கள் எப்படி விளையாடுவோம் என்பதை விசாரித்துத் தெரிந்துகொண்டார்.

நாங்கள் விளையாடும் காணொளியை ஆர்வமுடன் வாங்கிப் பார்த்தார். தன்னால் ஆன உதவியைச் செய்வதாகக் கூறி வழியனுப்பி வைத்தார். அடுத்த நாளே துபாய் போட்டிக்குச் செல்ல, சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியிலுள்ள 23 பேருக்கும் உடனடியாக உதவி கிடைத்துவிட்டது. இந்த உதவியைத் தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம். எங்கள் வெற்றியைக் கமல்ஹாசன் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்” என்ற சச்சின் சிவாவின் வார்த்தைகளில் நன்றி மேலிடுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு