Published:Updated:

`அரைகுறையான கேள்வி; சர்ச்சையை உருவாக்க வேண்டுமா?'- கோலி, செய்தியாளர் இடையே நடந்த வாக்குவாதம்

கோலி
கோலி ( AP )

ஏற்கெனவே 2018-ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்குப் பின்னர் கோலி செய்தியாளரிடம் ஆவேசமாகப் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றியுடன் தொடங்கியது. அதன் பின்னர் எல்லாம் நியூசிலாந்து அணியின் ஆதிக்கம்தான். ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நியூசிலாந்து அடுத்ததாக டெஸ்ட் தொடரையும் 2-0 என கைப்பற்றியது.

நியூசிலாந்து அணி
நியூசிலாந்து அணி

கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றுவந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளிலே இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் வீழ்ந்தது. இந்திய நியூசிலாந்து டெஸ்ட் தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் எனப் பலரும் கணித்திருந்த நிலையில், இந்த அணி பெரிதாக எந்தச் சவாலும் அளிக்காமல் இரு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி குறைந்தபட்சம் நியூசிலாந்து அணிக்கு சவால் அளித்திருக்க வேண்டும். ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். பந்துவீச்சாளர்கள் டெயிலென்டர் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் திணறினர். இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணியின் டெயிலென்டு வீரர்கள் அமைத்த பார்ட்னர்ஷிப் அந்த அணிக்கு பெரிய அளவில் உதவியது.

`மீண்டும் ஒயிட்-வாஷ்...!' -இந்திய அணியை வீழ்த்தியது நியூசிலாந்து #NZvInd

இந்த நிலையில், போட்டி முடிந்த பின்னர் பேசிய இந்திய அணியில் கேப்டன் கோலி, ``முதலாவது இன்னிங்ஸில் சிறப்பாகவே விளையாடினோம். இந்த நேரத்தில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களுக்கு கிரெடிட் தர வேண்டும். மிகச் சிறப்பாக பந்துவீசி பேட்ஸ்மேன்களை நெருக்கடியிலே வைத்திருந்தார்கள். அவர்களின் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக வழக்கமான ஷாட்களை ஆட முடியவில்லை. ரன் தேவை என்றால் வித்தியாசமான ஷாட்கள் விளையாட வேண்டியிருந்தது.

கோலி
கோலி
ICC

இரண்டு விஷயங்கள் எங்களை தோற்கடித்தது. ஒன்று, நாங்கள் திட்டமிட்டதைச் சரியாக செய்யாதது, மற்றொன்று அவர்கள் சிறப்பாக விளையாடியது. இந்த இரண்டு விஷயங்கள் சேர்ந்து எங்களை வீழ்த்திவிட்டது. அவர்களின் நேர்த்தியான பந்துவீச்சு எங்களை தவறு செய்ய வைத்தது. இந்திய அணியின் பந்துவீச்சுக்குப் பக்கபலமாக, பேட்ஸ்மேன்கள் செயல்படவில்லை. இது கட்டாயம் ஏமாற்றம்தான். வெளிநாடுகளில் டெஸ்ட் தொடரை வெல்ல, பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டும் சம பலத்துடன் இருக்க வேண்டும். இந்தத் தொடரில் செய்த தவறுகள் தொடர்பாக ஆராயவேண்டியுள்ளது. அதிலிருந்து பாடம் கற்று எதிர்காலத்தில் சிறப்பாக விளையாடுவோம்.

பயமுறுத்தும் பிட்ச்... ஃபார்முக்கு வருவாரா கோலி... விக்கெட் எடுப்பாரா பும்ரா?! #INDVsNZ

நாங்கள் டாஸ் முடிவுகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளும் அணி கிடையாது. ஆனால், இரண்டு போட்டிகளிலும் தொடக்க நாளின் முதல் 2 மணி நேரம் அவர்கள் எங்கள் மீது ஆதிக்கம் செலுத்த டாஸ் முடிவு காரணமாக அமைந்துவிட்டது. கடந்த சில சீஸன்களாக நாங்கள் சிறப்பாக விளையாடி வந்திருக்கிறோம். அந்த வகையில் இந்தத் தொடரிலும் எங்கள் திட்டத்தைச் சரியாக அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இந்த முறை எங்களால் அதைச் செய்ய முடியவில்லை.

கோலி, புஜாரா
கோலி, புஜாரா
AP

இந்தத் தொடரில் செய்த தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்புவோம். டி20 தொடர் சிறப்பாக அமைந்தது. ஒருநாள் தொடரில் சில இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். அதுவும் ரோஹித் இல்லாத போதும், நானும் அதிக ரன்கள் சேர்க்காத நிலையிலும் இளம் வீரர்கள் அணியை சிறப்பாகக் கொண்டு சென்றனர். இது இந்த சுற்றுப்பயணத்தில் சில பாஸிட்டிவ் விஷயங்கள். ஆனால், டெஸ்ட் தொடரில் நாங்கள் விளையாட விரும்பிய ஆட்டத்தை ஆடவில்லை. நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து முன்னேற முடியும்" என்றார்.

`அந்த 3 விக்கெட்டுகளும் 120 ரன்களும்!' - டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் தோல்வி குறித்து கோலி

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேசுகையில், ``இந்தியா உலக தரமிக்க அணி என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி ஓர் அணியை வீழ்த்துவது நல்ல உணர்வைத் தருகிறது. ஜேமிசன் பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் கலக்கிவிட்டார், அவரது உயரம் அவருக்கு ப்ளஸ். அனைத்துப் போட்டிகளிலும் சில விஷயங்களைக் கற்பது என்பது அவசியம். இந்த இரு போட்டிகளும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது" என்றார்.

கோலி
கோலி
AP

இந்த நிலையில், இரண்டாம் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், நியூசிலாந்து வீரர்கள் ஆட்டமிழக்கும்போது கோலி களத்தில் ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். குறிப்பாக நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ஆட்டமிழந்தபோது அதிக ஆவேசத்துடன் ரசிகர்களை நோக்கி கத்தினார். மேலும், தனது வாய் மீது விரலை வைத்து சைலன்ட் என்பது போல் சைகை காட்டினார். களத்தில் கோலியின் ஆக்ரோஷம் அனைவரும் அறிந்ததே. அதே நேரம் செய்தியாளர் சந்திப்பில் கோலி எப்போதும் அமைதியாகதான் பதில் அளிப்பார். ஆனால், இன்று அவர் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு காட்டமான பதில் அளித்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டிக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் களத்தில் கோலி நடந்துகொண்டவிதம் தொடர்பாக பேசிய செய்தியாளர் ஒருவர், ``விராட், களத்தில் நீங்கள் வில்லியம்சன் ஆட்டமிழந்தபோது நடந்துகொண்ட முறை சரிதானா..? இந்திய அணியின் கேப்டனாக நீங்கள் களத்தில் ஒரு சிறந்த உதாரணமாக இருக்க வேண்டாமா?" எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு கோலி, ``நீங்க என்ன நினைக்கிறீர்கள்?" என பதில் கேள்வி கேட்டார்.

அதற்கு அந்தச் செய்தியாளர், ``நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டேன்" என்றார்.

கோலி - ``நான் உங்களிடம் பதிலை எதிர்பார்க்கிறேன்!"

செய்தியாளர் -``நீங்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்."

கோலி
கோலி
AP

கோலி - ``களத்தில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொண்டு நீங்கள் இன்னும் சிறப்பான கேள்விகளுடன் வர வேண்டும் என நினைக்கிறேன். இங்கு நீங்கள் அரைகுறையான கேள்விகளுடனோ அரைகுறையான தகவல்களுடனோ வரக் கூடாது. அதேபோன்று உங்களுக்கு ஒரு சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்றால், அதற்கு இது இடம் கிடையாது. நான் போட்டி நடுவரிடம் பேசிவிட்டேன், நடந்தவற்றில் அவருக்கு எதுவும் தவறாகத் தெரியவில்லை. நன்றி" என்றார் ஆவேசமாக.

ஏற்கெனவே 2018-ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்குப் பின்னர் கோலி செய்தியாளரிடம் ஆவேசமாகப் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு