எதிராளியை வெற்றிகொள்ள, எப்போதும் எதிராளியைவிட முந்தியிருப்பது ஒருவழி. இன்னொரு வழி, வெற்றி பெறுகிற முனைப்பை எதிராளிக்கு ஏற்படுத்திய நம்பிக்கைப்புள்ளியை வெட்டி எறிவது. இந்த இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தவர் ஜோஷ் ஹேசல்வுட். அவரே நேற்றைய போட்டியின் மாற்றத்தின் நாயகனாகவும் மாறிப் போனார்.
சென்னையில் சாம் கர்ரனுக்குப் பதிலாக பிராவோ மீண்டும் அணிக்குள் இடம்பெற்றார். பல நாள்களுக்குப் பிறகு, இந்த சீசனை வைத்துச் சொல்வதாயின் சில மாதங்களுக்குப் பின்னர், தன் இரண்டாவது வெற்றியை இரு தினங்களுக்கு முன்னர்தான் பதிவு செய்திருந்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். வார்னருக்கு மாற்றாக வந்திருந்த ஜேசன் ராய், அந்த வெற்றியை சன்ரைசர்ஸ்க்குப் பெற்றுத்தந்திருந்தார். அதனாலேயே, எந்த மாற்றமும் இல்லாமல், அப்படியே களம் இறங்கியது சன்ரைசர்ஸ். "நாங்கள் எங்களுக்குக் கிடைத்த சிறப்பான பெர்பாமன்ஸ்களை மேலும் அதிகரித்துக்கொள்ள விரும்புகிறோம். அதனால், அதே அணியுடன் களமிறங்குகிறோம்" என டாஸின் போது அதையே குறிப்பிட்டார் வில்லியம்சன்.
ஹேசல்வுட் வீசிய முதல் பந்தை சாஹாவால் கனெக்ட் செய்ய முடியவில்லை. அவுட்சைடு ஆஃப் திசையில், மீண்டும் ஒரு லெந்த் பாலை வீசினார். ரன்கள் இல்லை. அடுத்த பந்தை மிடில் லைனில் வீசினார். ம்ஹூம். ரன்கள் இல்லை. இரண்டாவது பந்தைப் போலவே தான் நான்காவது பந்தையும் வீசினார். ஆனால், அது ஸ்டம்ப் நோக்கி நகர்ந்தது. தடுப்பாட்டம் ஆடினார் சாஹா. ஐந்தாவது பந்து ஜஸ்ட் மிஸ். நான்கு பந்துகள் டாட் ஆடியதன் விளைவாக, இந்தப் பந்தை எப்படியும் அடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் சாஹா. ஆனால், அவரால் இன்சைடு எட்ஜில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. மீண்டுமொரு லெந்த் பால். ராயால் அதைத் தொட முடியவில்லை. இந்த ஓவரில் விட்டதை எடுக்க, அடுத்த சஹாரின் ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார் சாஹா.
ஹேசல்வுட் வீசிய அடுத்த ஒவரின் முதல் பந்தை ஃபிலிக் செய்ய முயன்றார் ராய். ஆனால், அவரையும் தோனியையும் கடந்து பைஸில் பவுண்டரிக்கு சென்றது. மீண்டும் நல்ல லெந்தில் ஒரு அவுட்சைடு ஆஃப் பந்து. ராய் அடித்ததும், அது நேராக ஃபீல்டருக்கு சென்றது. ஹேசல்வுட் தொடர்ந்து வேரியசன்களை மாற்றிக்கொண்டே இருந்தார். அவரின் பந்துகளை கனெக்ட் செய்வதே பெரும்பாடாக இருந்தது. "இரண்டு பேராலும் பெரிதாக கனெக்ட் செய்ய முடியவில்லை. இந்த ஓவரில் விக்கெட் விழும் என நினைக்கிறேன். இருவருமே ஹேசல்வுட்டின் பந்துகளை மீட் செய்திருக்கிறார்கள். ஜேசன் ராய் பொறுப்பற்ற முறையில் ஏதாவது செய்வார்" என டக் அவுட் கமெண்ட்டரியில் சொல்லிக்கொண்டு இருந்தார் பிரெட் லீ. இத்தனை ஆண்டு அனுபவம் பொய்த்துவிடுமா என்ன?
அவுட்சைடு ஆஃபில் மீண்டுமொரு பந்து. இறங்கி வந்து மிட்விக்கெட் திசையில் ஓங்கி அடிக்க முயன்றார் ராய். பந்து மேலே எழும்பவில்லை. பேட்டில் பட்டு, கூலாக கேப்டன் கூல் வசம் சென்று விழுந்தது. ராயுடன் இணைந்து வீழ்ந்தது சன்ரைசர்ஸ். கடந்த போட்டியில் வெற்றிக்கு வித்திட்டவர், இந்த முறை அந்த பிரெஷரை ஹேண்டில் செய்யாது, அடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார்.
டி20க்களில் ஒரு பிரேக்த்ரூ மட்டுமே எப்போதும் போதாது. கார்க், வில்லியம்சன், சாஹா மூவரும் 76 ரன்களுக்குள்ளாகவே அவுட்டாகிவிட்டனர். மீண்டுமோரு லோ ஸ்கோரிங் மேட்ச் என முடிவாகிவிட்ட நிலையில், அதை மாற்ற களமிறங்கினார்கள் அபிஷேக்கும், அப்துல் சமதும். ஆறாவது ஓவருக்குப் பின்னர், 14வது ஓவரில்தான் இரண்டு பவுண்டரி சன் ரைசர்ஸ்க்குக் கிடைத்தது. ஹேசல்வுட்டின் பந்தையும் சிக்ஸருக்கு விளாசினார் அப்துல். ஆனால், அடுத்த ஐந்து பந்துகளில் இரு பேட்டர்களாலும் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஹேசல்வுட்டின் கடைசி ஓவர். க்ரீஸுக்குள் நின்றபடியே சிக்ஸருக்கு விளாசினார் அபிஷேக். முந்தைய பந்து வீச்சுக்கும், இதற்கும் பெரிய வித்தியாசமில்லை என்றாலும், மிடில் ஸ்டிக் நோக்கி வீசப்பட்ட பந்தைத் தூக்கி அடிக்க முயன்றார் அபிஷேக். ஆனால், அது லாங்க் ஆனில் நின்றுகொண்டிருந்த டுப்ளெஸ்ஸியின் கைகளில் லேண்டானது. கிட்டத்தட்ட ஒய்டாக ஒரு பந்து சமதுக்கு. சமத்தாக அதைத் தொட்டார் சமத். மொயின் அலியின் அட்டகாசமான கேட்ச்சில் சமதும் க்ளோஸ். சரிவிலிருந்து மீண்டுவிட்டதோ என எண்ணிய நிலையில், இரண்டு வீரர்களையும் ஒரே ஓவரில் முடித்துக்கட்டினார் ஹேசல்வுட்.

மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்து, ஆட்டத்தை மொத்தமாய் சென்னைப் பக்கம் திருப்பிய ஹேசல்வுட்தான் நேற்றைய போட்டியின் மாற்றத்திற்கான நாயகன். சென்னை பிளேஆஃப்ஸ் தகுதிபெற்றதிலும், சன்ரைசர்ஸ் எலிமினேட் ஆனதிலும், இவரின் பங்கு அதிகம்.