Published:Updated:

MI vs RR: ஜாஸ் பட்லர் நிகழ்த்திய ரன் வேட்டை; மும்பை இந்தியன்ஸ் 2வது தோல்வி... எங்கே சறுக்கியது?

ஜாஸ் பட்லர் | MI vs RR

பிரசன்டேஷனில் பேசிய ரோஹித், "இது ஓப்பனிங், யூ சி எண்டிங்" என பாசிட்டிவ்வாகப் பேசிவிட்டு, "இருங்க, சூர்யகுமார் மட்டும் வரட்டும், உங்களுக்கு இருக்கு" என வார்னிங் வேறு கொடுத்தார். ஆரஞ்சு கேப் இஷானின் வசமானது மும்பைக்குக் கிடைத்த ஒரே ஆறுதல்.

Published:Updated:

MI vs RR: ஜாஸ் பட்லர் நிகழ்த்திய ரன் வேட்டை; மும்பை இந்தியன்ஸ் 2வது தோல்வி... எங்கே சறுக்கியது?

பிரசன்டேஷனில் பேசிய ரோஹித், "இது ஓப்பனிங், யூ சி எண்டிங்" என பாசிட்டிவ்வாகப் பேசிவிட்டு, "இருங்க, சூர்யகுமார் மட்டும் வரட்டும், உங்களுக்கு இருக்கு" என வார்னிங் வேறு கொடுத்தார். ஆரஞ்சு கேப் இஷானின் வசமானது மும்பைக்குக் கிடைத்த ஒரே ஆறுதல்.

ஜாஸ் பட்லர் | MI vs RR
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பிருந்தே இது ராஜஸ்தானுக்கும் மும்பைக்குமான போட்டியாகப் பேசப்பட்டதைவிட பட்லர் என்ன செய்யப்போகிறார் என்ற ஆர்வமே பலருக்கும் அதிகமாக இருந்தது. காரணம் 2016, 2017 சீசன்களில் மும்பைக்கு ஆடியவர் பட்லர். மும்பை - பட்லர் ரைவல்ரியைப் பலப்படுத்தும் விதமாகவோ என்னவோ, இந்தப் போட்டியிலும் அவரை வீழ்த்தத்தான் படாத பாடுபட்டு சொதப்பியது மும்பை. 19வது ஓவர் வரை அவர்கள் எடுத்திராத இந்த பட்லரின் விக்கெட்டே அவர்களுக்குப் பெரும் சோதனையாகிப் போனது.

ஒரு அடி வாங்கியாயிற்று. இந்தப் போட்டியில் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்ற முனைப்புடன் வந்த மும்பை கேப்டன் ரோஹித் சர்மா, டாஸ் ஜெயித்ததும் பௌலிங் என உற்சாகமானார். மாலை போட்டி என்பதால் பனிப்பொழிவு அவ்வளவாக இருக்காது, அதேபோல் மும்பையின் பேட்டிங் ஸ்ட்ராங்காக இல்லை உள்ளிட்ட காரணங்களால் டார்கெட் சேஸ் செய்வது பாதுகாப்பானது என ரோஹித் நினைத்திருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக சூர்யகுமார் யாதவ் இன்னமும் ஆடமுடியாத நிலை. கடந்த போட்டி தோல்வி என்றாலும் அந்த அணியே போதுமானது என சென்னை பாணியில் சொன்னார் ரோஹித். (அவருக்கு வேறு ஆப்ஷன்களும் இல்லை என்பது வேறு விஷயம்.) ராஜஸ்தான் அணியில் கூல்டர் நைலுக்குப் பதிலாக நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆக, அந்த அணியில் மூன்று வெளிநாட்டு ஆட்டக்காரர்கள்தான்.

MI vs RR
MI vs RR

எக்ஸ் மும்பை இந்தியன் ஜாஸ் பட்லரும், மும்பை உள்ளூர் பிளேயர் யசஷ்வி ஜெய்ஸ்வாலும் முதல் ஆளாக வாள் தூக்கி நின்றனர். புதிய பிட்ச் என்பதால் பும்ராவின் ஸ்விங்க் ஜாலம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல் ஓவரின் 3-வது பந்திலேயே லெக் சைடில் சென்ற யார்க்கரை செல்லமாகத் தட்டிக் கொடுத்து பவுண்டரி அடித்து ஆஃப் தி மார்க் ஆனார் பட்லர். அடுத்த ஓவரில் சாம்ஸ் வீசிய பந்தில் பட்லருக்கு அடிபட, இந்தா பழிக்குப் பழி என மேட்சின் முதல் சிக்ஸரையும் அவரே அடித்தார். ராஜஸ்தானுக்கு மொமன்டம் கிடைத்துவிடுமோ என எல்லோரும் எதிர்பார்க்க, அது எப்படி என ஜெய்ஷ்வால் நடையைக் கட்டினார். பும்ரா பந்தில் இன்ஃபீல்டில் 'எப்ப வேலை வரும்' எனக் காத்திருந்த டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் அவர். 'என்ன செட்டிங்கா?' எனக் கோபத்துடன் உள்ளே வந்த படிக்கல் தன் இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்து பிரஷர் ஏறாமல் பார்த்துக்கொண்டார்.

பசில் தம்பியின் ஓவரில் பட்லரின் கண்ணில் ஏதேச்சையாக ஸ்கோர்போர்டு பட்டுவிட, 'என்ன வெறும் 17 ரன்கள்தானா' என நினைத்தாரோ என்னவோ 4, 6, 6, 4, 6 என டக்கென பீஸ்ட் மோடுக்கு மாறினார். லாங் ஆனில் இரண்டு சிக்ஸ்ர்கள், மிட் விக்கெட்டில் ஒரு சிக்ஸ் என பசில் தம்பியின் நம்பிக்கையை முற்றிலுமாகச் சிதைத்தார். 'பவர்ப்ளே ஓவர்னா அடிக்கணும்' என அந்த ஓவரில் மட்டும் 26 ரன்கள் வந்தன.

இது சரி வராது எனப் பயந்த ரோஹித், பவர்ப்ளேவுக்கு உள்ளாகவே முருகன் அஷ்வினுக்கு ஹாய் சொன்னார். அந்த ஓவரில் நான்கே ரன்கள். பட்லருக்கு ராங்-ஆன் எல்லாம் வீசியவர், படிக்கல்லுக்கும் பிரஷர் ஏற்றினார். இதனாலோ என்னவோ, பவர்ப்ளேவின் கடைசி பந்தில் புல் ஷாட் ஆடுகிறேன் என புல் ஷாட்டின் ஓனரான ரோஹித்திடமே கேட்ச் கொடுத்து 7 ரன்களில் பை சொன்னார் படிக்கல். பட்லரின் அந்த 26 ரன்கள் ஓவர் உபயத்தில் 6 ஒவர்களில் 48/2 என ராஜஸ்தானின் ஸ்கோர் இருந்தது.
MI vs RR
MI vs RR

பின்பு பட்லரும் கேப்டன் சஞ்சு சாம்சனும் ஜோடி சேர்ந்தனர். அடுத்த மூன்று ஓவர்களுக்கு நான்கு பவுண்டரிகளும் சில சிங்கிள்களும் போதுமானது என்ற அமைதி காத்தவர்கள், மில்ஸ் வீசிய 10வது ஒவரில் 14 ரன்களையும், முருகன் அஷ்வின் வீசிய 11வது ஓவரில் 21 ரன்களையும் கணக்கில் எழுதிக் கொண்டனர். மிட்விக்கெட்டில் சிக்ஸர், லாங் ஆஃபில் சிக்ஸர் என சாம்சன் சாகசம் செய்ய, எக்ஸ்ட்ரா கவரில் சிக்ஸரும், துணைக்கு வெவ்வேறு திசைகளில் இரண்டு பவுண்டரிகளும் எனப் பயங்காட்டினார் பட்லர். தேவை பட்லரின் விக்கெட்டே என்ற நிலை மாறி, 'சாம்சன் விக்கெட் கிடைச்சாலும் ஓகேண்ணே' என இறங்கி வந்தது மும்பை. 11-வது ஓவரில் நூறு ரன்களைக் கடந்தும் ஓவருக்கு ஒரு பவுண்டரியோ, சிக்ஸரோ வந்துகொண்டே இருந்தன. பிரஷர் குக்கர், மும்பை பக்கமே விசில் அடித்ததே தவிர, ராஜஸ்தான் பக்கம் சத்தமே கேட்கவில்லை.

இங்கேதான் ரோஹித்தின் கேப்டன்சி மூளையில் பல்ப் எறிந்தது. எதிர்பாராத டெலிவரிகளை மட்டுமே வீசும் பொல்லார்டுக்கு மீண்டும் ஒரு ஓவர் கொடுத்தார். பேஸ் என்ற வார்த்தையே இல்லாமல் அவர் வீசிய பந்தில் சாம்சன் புல் ஷாட் ஆட முற்பட, திலக் வர்மாவிடம் பந்து தஞ்சம் அடைந்தது. அடுத்தது களம் எட்டுல சண்டை என்பதுபோல, ஹெட்மெயர் - பொல்லார்ட் யுத்தம் ஆரம்பமானது. பொல்லார்டின் நான்காவது ஓவர். எதிரில் ஹெட்மெயர். பொல்லார்டைக் கணித்து ஆடுவதில் ஹெட்மெயருக்கு பழுத்த அனுபவம் என்பதால் துவம்சம் செய்தார். இரண்டு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள், போதாக்குறைக்கு பைஸாக 4 ரன்கள் என மொத்தம் 26 ரன்களைக் கட்டுச்சோற்றாகக் கட்டிக்கொண்டு கிளம்பியது ராஜஸ்தான்.

MI vs RR
MI vs RR

மில்ஸ் வீசிய ஓவரிலும் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என ஜாலி செய்தார் ஹெட்மெயர். அதே ஓவரில் ஹெட்மெயர் எல்பிடபிள்யூ என மும்பையே குதூகலமாக, 'இருங்க ரிவ்யூ எடுக்கறேன்' என நகராமல் நின்றார் மனிதர். பேக் பேடில் பந்து பட்டாலும், இம்பேக்ட் லைனைவிட்டு வெளியே என்பதால் நாட்-அவுட் என சிக்னல் வந்தது. 'கொஞ்சம் ஓவராத்தான் போறீங்க' என உஷ்ணமான ரோஹித், 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டும் எடுத்திருந்த பும்ராவிடம் பந்தை வாலன்டியராகத் திணித்தார்.

முதல் பந்தே இன்ஸ்விங்கிங் யார்க்கர். 99 ரன்னில் இருந்த பட்லர் லெக் சைடில் தட்டி சிங்கிள் எடுக்க, ஒட்டுமொத்த மும்பை அணியும் எல்பிடபிள்யூ அப்பீல் செய்தது. அம்பயர் நாட் அவுட் என்று சொன்னாலும் விடாப்பிடியாக ரிவ்யூ செல்ல, செஞ்சுரி அடித்தும் பேட்டைத் தூக்காமல் வெயிட் செய்தார் பட்லர். 'இன்சைட் எட்ஜ்தான் போங்க போங்க' என தேர்ட் அம்பயர் மும்பை வீரர்களை விரட்டிவிட, பட்லர் பேட்டை உயர்த்திக் கொண்டாடினார்.

கோபம் கொப்பளிக்க பும்ரா வீசிய அடுத்த பந்தில் ஹெட்மெயர் அவுட். ஆனால் 14 பந்துகளில் 35 ரன்களை அடித்துவிட்ட ஹெட்மெயர் ஏற்கெனவே மும்பைக்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுத்துவிட்டார் எனலாம். 'யுத்தம் தொடர்கிறது' என பும்ரா விடாது யார்க்கர் வீச, ஐபிஎல் 2022-ன் முதல் செஞ்சுரி அடித்த பட்லரும் அவுட். போதாக்குறைக்கு அடுத்த பந்தில் அஷ்வினும் ரன் அவுட்டாகி நடையைக் கட்டினார். 4 ஓவர்கள் 17 ரன்கள் 3 விக்கெட்டுகள் என அற்புதமாக தன் ஸ்பெல்லை முடித்தார் பும்ரா. பட்லர், ஹெட்மெயர் ஜோடி களத்தில் இருக்கையில் 220 கூட சாத்தியமே என்று இருந்த நிலை, இப்போது 200 சாத்தியமா என்று மாறிப்போனது. ஒரே ஓவரில் மாற்றியவர் பூம் பூம் பும்ரா!

கடைசி ஓவரில் மில்ஸும் இரண்டு விக்கெட்டுகளைக் கழற்றிவிட 20 ஓவர்களில் 193 ரன்கள் எனத் திருப்திப்பட்டுக்கொண்டது ராஜஸ்தான். ஒருவேளை 20 ரன்கள் குறைவோ என ராஜஸ்தான் ரசிகர்கள் லைட்டாகப் பீதியாக, 'சேச்சே 20 ரன்கள் ஜாஸ்தி' என்பதுபோல அமைந்தது மும்பையின் இன்னிங்ஸ்.
MI vs RR
MI vs RR

இஷான் கிஷன், போல்ட் வீசிய முதல் ஒவரிலியே பவுண்டரியுடன் தொடங்க, 'தம்பி ஃபோர்னா, அண்ணன் சிக்ஸ்' என்பதாக அடுத்த பிரசித் கிருஷ்ணா ஓவரில் பந்தைச் சிரமப்பட்டு பவுண்டரி தாண்டி விழ வைத்தார் ரோஹித். ஆனால், அதே ஓவரில் வெளியே சென்ற பந்தை பாயின்ட் ஃபீல்டரான பராக்கின் தலைக்கு மேல் அடிக்கிறேன் என அவரிடமே கேட்ச் கொடுத்து பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேவுக்கு உள்ளாகவே சைனியும் கொண்டுவரப்பட, இஷான் 6, 4, 4 எனக் கொண்டாடினார். ஃப்ரீஹிட் எல்லாம் வந்தது கூடுதல் போனஸ். ஆனால் அதே ஓவரில் சுதாரித்த சைனி, அன்மோல்ப்ரீத் சிங்கை லாஃப்ட் ஷாட் ஆடவைத்து கேட்ச் கொடுக்க வைத்தார். இன்னும் பிரஷர் வேண்டுமே என பவர்ப்ளேவுக்கு உள்ளாகவே ரவிச்சந்திரன் அஷ்வினும் அட்டெண்டன்ஸ் போட்டார். வெறும் 5 ரன்கள்தான் வந்தன. பவர்ப்ளே முடிவில் மும்பையின் ஸ்கோர் 50/2.

ஐந்து பந்துகளுக்கு ஒரு பவுண்டரி எனப் பங்கு பிரித்து ஸ்கோரை உயர்த்திய மும்பை, பின்பு ஒரே ஓவரில் இரண்டு பவுண்டரிகள் எனக் கியரை மாற்ற முற்பட்டது. சஹால் ஓவரில் சாத்தியப்பட்ட அந்த பார்முலா அஷ்வின் ஓவரில் சிரமமாக இருந்தது. 12 ஓவர்கள் தாண்டிய பின்னர் ஸ்கோர் போர்டு 112/2 என்றது. அற்புதமாக கேட்சுகள் பிடித்த திலக் வர்மா, பேட்டிங்கில் 47 ரன்களை 25 பந்துகளில் கடந்திருந்தார். மற்றொரு புறம் போல்ட் வீசிய 13-வது ஓவரில் பவுண்டரி அடித்து 50 ரன்களைக் கடந்தார் இஷான்.

அதே ஓவரின் கடைசி பந்தில் அவர் கொடுத்த கேட்சை சைனி பிடித்தபோது அவர் உடம்பின் மொத்த எடையும் அவரின் கழுத்தில் அழுத்தம் கூட்ட, நார்மலாகச் சற்றே சிரமப்பட்டார் சைனி. ஆனால், இஷான் அவுட் என்பது ராஜஸ்தான் எதிர்பார்த்த அந்த மேஜிக்கல் மொமன்ட்.

MI vs RR
MI vs RR
மற்றொரு பக்கம் 50 ரன்களைக் கடந்து, அடுத்து 60 என வேகமாக கியரை மாற்ற முயன்ற திலக் வர்மாவின் ஸ்டம்புகளைத் தகர்த்தார் அஷ்வின். ஆனால், அவரே முன்வந்து இளம் வீரரான திலக் வர்மாவைப் பாராட்டவும் செய்தார். காரணம் 33 பந்துகளில் அவர் சேர்த்த 61 ரன்கள். மும்பை டக்-அவுட் திலக்கிற்கு எழுந்து நின்று மரியாதை செய்தது. ஸ்கோர் 15 ஓவருக்கு 136/4.

அதன்பிறகு மும்பைக் கொஞ்சம் போராடினாலும், அவர்கள் இந்த ஆட்டத்தில் இனி இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. தன் கடைசி ஓவரை வீச வந்த சஹால், மும்பையின் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் முடித்து வைத்தார். டேவிட் 1 ரன், சாம்ஸ் டக் அவுட் என அடுத்தடுத்து வெளியேற சஹாலுக்கு ஹாட்ரிக் வாய்ப்பு ஜஸ்ட் மிஸ்ஸானது. ஓரே ஒரு ஆளாக, வெள்ளையடிக்கும் கோபாலாக பொல்லார்ட் மட்டும் பந்துகளைத் தடவிக் கொண்டிருந்தார். 19வது ஓவரை 10 பால் ஓவராக பிரசித் கிருஷ்ணா வீசியும், அதில் 10 ரன்கள் மட்டுமே வந்தன.

கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவை. களத்தில் பொல்லார்ட். முதல் பந்தே அகலப்பந்து. மும்பை ரசிகர்கள் ரசல் கடந்த மேட்ச்சில் ஒரே ஓவரில் 30 ரன்கள் அடித்ததையெல்லாம் நினைவில் கொண்டுவந்து சிரமப்பட்டு நம்பிக்கையை வரவைத்து காத்திருந்தனர். ஆனால், சைனி வீசிய அடுத்தடுத்த பந்துகள் டெத் ஓவர் எப்படியிருக்க வேண்டுமென்பதற்கான எடுத்துக்காட்டு. கடைசி பந்தில் பொல்லார்டும் அவுட்டாக, 23 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

MI vs RR
MI vs RR

பிரசன்டேஷனில் பேசிய ரோஹித், "இது ஓப்பனிங், யூ சி எண்டிங்" என பாசிட்டிவ்வாகப் பேசிவிட்டு, "இருங்க, சூர்யகுமார் மட்டும் வரட்டும், உங்களுக்கு இருக்கு" என வார்னிங் வேறு கொடுத்தார். ஆரஞ்சு கேப் இஷானின் வசமானது மும்பைக்குக் கிடைத்த ஒரே ஆறுதல். மும்பையின் மிடில் ஆர்டரில் பிரச்னை என்று சொல்வதா, இல்லை மிடில் ஆர்டரே இல்லை என்று சொல்வதா என்பதுதான் புரியவில்லை. சந்தேகமே இல்லாமல் ஜாஸ் பட்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

ஐபிஎல் 2022-ல் 9 ஆட்டங்கள் முடிந்துவிட்ட நிலையில், சென்னை, மும்பை போன்ற முக்கிய அணிகள் தங்களின் கணக்கைத் தொடங்காமல் இருப்பது இந்த சீசனை இன்னமும் சுவாரஸ்யமாக்கி இருக்கிறது.