Published:Updated:

ஜான்ட்டி ரோட்ஸ்... இவர் ஆடிய எல்லா மேட்சுமே சென்சுரிதான்... எப்படி?! அண்டர் ஆர்ம்ஸ் - 4

ஜான்ட்டி ரோட்ஸ்

ஜான்ட்டி ரோட்ஸ்: பேக்வர்ட் பாயின்ட் திசையில் இவர் நின்றால், இவரைத்தாண்டி பவுண்டரிகள் போவது என்பது பெரும் சாதனை. இவரைத் தேடி கேட்சுகள் வராது, இவர்தான் தேடிப்போவார்.

ஜான்ட்டி ரோட்ஸ்... இவர் ஆடிய எல்லா மேட்சுமே சென்சுரிதான்... எப்படி?! அண்டர் ஆர்ம்ஸ் - 4

ஜான்ட்டி ரோட்ஸ்: பேக்வர்ட் பாயின்ட் திசையில் இவர் நின்றால், இவரைத்தாண்டி பவுண்டரிகள் போவது என்பது பெரும் சாதனை. இவரைத் தேடி கேட்சுகள் வராது, இவர்தான் தேடிப்போவார்.

Published:Updated:
ஜான்ட்டி ரோட்ஸ்

ரீப்ளேஸ்மென்ட்... அவர் இல்லையென்றால் அவர் இடத்துக்கு யார்? வேலையில் தொடங்கி எல்லாவற்றிலுமே இந்த ரீப்ளேஸ்மென்ட்டை கண்டுபிடிப்பது பெரும்சவால். ஆனால், விளையாட்டு உலகில் இந்த ரீப்ளேஸ்மென்ட் டிரான்ஸ்ஃபர்மேஷன்கள் மிக அழகாக நடக்கும்.

கவாஸ்கருக்குப் பிறகு கபில்தேவ், கபில்தேவுக்குப் பிறகு சச்சின், சச்சினுக்குப் பிறகு கோலி என அடுத்து யார் என்கிற கேள்வி வரும்போதே இன்னொரு ஸ்டார் வந்துவிடுவார். ரிக்கி பான்ட்டிங், மைக்கேல், கிளார்க், ஸ்டீவன் ஸ்மித் என ஆஸ்திரேலியாவில் மட்டுமல்லாமல் உலகில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் அணியிலும் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு சூப்பர் ஸ்டார் வருவார்கள்.

ஆனால், இதுவரை இந்த வீரருக்கு மட்டும் இன்னும் சரியான ரீப்ளேஸ்மென்ட் வரவேயில்லை. மாற்று வீரர் கிடைக்கவேயில்லை. பறந்து பறந்து கேட்ச் பிடிக்க, பவுண்டரி லைனில் நின்று சாகசங்கள் செய்ய இப்போது சில வீரர்கள் இருக்கலாம். ஆனால், இவர் அளவுக்கு மிகச்சரியான, மிக முழுமையான, மிகத் திறமையான ஃபீல்டர் கிரிக்கெட் உலகில் உருவாகவேயில்லை.

ஜான்ட்டி ரோட்ஸ்... ஃபைளையிங் மெஷின் என்றுதான் சொல்லுவார்கள். 90-களில் இந்திய வீரர்கள் எல்லாம் சட்டை கசங்கிவிடுமோ என மிகவும் எச்சரிக்கையாக விளையாடிக்கொண்டிருந்த காலத்தில் பறந்து, விழுந்து, தவழ்ந்து என மைதானத்துக்குள் அழுக்குச் சட்டையோடு பந்தைத் தேடித்தேடி ஓடிக்கொண்டேயிருப்பார் ஜான்ட்டி ரோட்ஸ்.

ஜான்ட்டி ரோட்ஸ்
ஃபீல்டிங்குக்காக ஒரு அணியில் இடம்பெற்ற உலகின் முதல் கிரிக்கெட் வீரர்

பேக்வர்ட் பாயின்ட் திசையில் இவர் நின்றால், இவரைத்தாண்டி பவுண்டரிகள் போவது என்பது பெரும் சாதனை. இவரைத் தேடி கேட்சுகள் வராது, இவர்தான் தேடிப்போவார். பாயின்ட்டில், கவர் திசையில் நிற்பவர் சில நேரங்களில் கீப்பரின் அருகில் எல்லாம் போய் கேட்ச் பிடித்திருக்கிறார். பந்து கொஞ்சம் காற்றில் பறந்தால்போதும் அதைத் தன் திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்பாகப் பார்ப்பார் ஜான்ட்டி.

Jonty Rhodes
Jonty Rhodes
ICC

இவர் இருக்கும் திசையில் பந்தைத் தட்டிவிட்டு ரன் ஓடநினைத்தால் அல்ல, கிரீஸைத்தாண்டி பேட்ஸ்மேன் வந்தாலே ரன் அவுட் நிச்சயம். பாயின்ட் திசையில் நிற்பவருக்கு மூன்று ஸ்டம்ப்புகளுமே ஒன்றாகத்தான் தெரியும். டைரக்ட் ஹிட் அடிப்பது கஷ்டம். ஆனால், ஜான்ட்டியின் துல்லியமான த்ரோவால் பெயில்ஸ்கள் தெறிக்கும். முதல்முறையாக டிவி நடுவர் மூலம் கொடுக்கப்பட்ட ரன் அவுட் சச்சின் டெண்டுல்கருடையது. ரன் அவுட் செய்தவர் ஜான்ட்டி. கவரில் அடித்துவிட்டு சச்சின் சிங்கிள் ஓட முயல, ரவி சாஸ்திரி சச்சினைத் திருப்பி அனுப்ப அந்த மைக்ரோ செகண்ட் இடைவெளிகளில் ஸ்டம்ப்பைத் தகர்த்துவிட்டார் ரோட்ஸ். அதேபோல் 1992 உலகக் கோப்பையில் இன்சமாம் உக் ஹக் ரன் எடுக்க கிரீஸுக்கு ஓடிவருவதற்குள் பாயிட்ன்ட்டில் இருந்து ஓடிப்போய் ரன் அவுட் செய்திருப்பார் ஜான்ட்டி ரோட்ஸ். இப்படியெல்லாம் ரன் அவுட் செய்ய முடியும் என்பதை கிரிக்கெட் உலகம் அன்றுதான் பார்த்தது.

90'ஸில் கிரிக்கெட் பார்த்த எவருமே ஜான்ட்டி ரோட்ஸை மறக்க மாட்டார்கள். அந்தக் கால இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் வீட்டுச் சுவர்களில் சச்சின், கங்குலி, டிராவிட் என இந்திய வீரர்களுக்கு அடுத்தபடியாக இடம்பெற்றிருக்கும் ஒரே படமாக ஜான்ட்டி ரோட்ஸின் டைவிங் கேட்ச் படங்கள்தான் இருக்கும். டி20 யுகத்தில் விளையாடியிருக்க வேண்டியவர், 90-களில் விளையாடிவிட்டுப் போய்விட்டார். அன்றைய பேட்ஸ்மேன்கள் இவர் ஃபீல்டிங் நிற்கும் திசையில் பவுண்டரி அடிப்பதையே பெருமையாக நினைத்தார்கள்.

தென்னாப்பிரிக்கர்கள் விளையாட்டை அணுகும் முறை கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்த மாட்டார்கள். கிரிக்கெட், ஃபுட்பால், ஹாக்கி, ரக்பி எனப் பல விளையாட்டுகளை விளையாடி 20 வயதைத்தொடும்போதுதான் ஒரு விளையாட்டில் செட்டில் ஆவார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் ஏபி டி வில்லியர்ஸ். இவர் ஆடாத ஆட்டங்களே கிடையாது என்கிற அளவுக்கு இவரின் ஸ்போர்ட்ஸ் லிஸ்ட் பெரியது. அதேபோலத்தான் ஜான்ட்டி ரோட்ஸும். 1992 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தென்னாப்பிரிக்க ஹாக்கி அணியில் இடம்பெற்றிருக்க வேண்டியவர். அங்கே மிஸ் ஆகி 1992 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு வந்துவிட்டார். அதனால் இயல்பாகவே ஹாக்கி வீரருக்கே உரிய துருதுருப்போடு கிரிக்கெட் மைதானத்தில் ஓடிக்கொண்டேயிருப்பார் ஜான்ட்டி. அவர் இருக்கும் இடத்தில் பந்து அவரைக் கடந்துபோவதை அவமானமாக நினைப்பார்.

லோயர் ஆர்டர், வலது கை பேட்ஸ்மேனான ஜான்ட்டி டெஸ்ட், ஒருநாள் என இரண்டிலுமே 35 ரன்களை ஆவரேஜாக வைத்திருந்தார்.

ஃபீல்டிங் மட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவின் மிக முக்கியமான லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜான்ட்டி ரோட்ஸ். வலது கை பேட்ஸ்மேனான ஜான்ட்டி மூன்றாவது டவுன், நான்காவது டவுன் அல்லது ஐந்தாவது டவுன் வீரராகத்தான் களம் இறங்குவார். அப்போதைய தென்னாப்பிரிக்க பேட்டிங் லைன் அப் என்பது பவர்ஃபுல்லாக இருக்கும். ஜான்ட்டி வந்துதான் பெரிய இன்னிங்ஸ்கள் ஆடவேண்டிய கட்டாயம் இருக்காது.

Jonty Rhodes, Inzamam Ul Haq
Jonty Rhodes, Inzamam Ul Haq
ICC

கல்லினன், கிரிஸ்டன், கிப்ஸ், காலிஸ், க்ளூஸ்னர், க்ரோனியே என இத்தனை பேரையும் எதிர் அணி பெளலர்கள் அவுட் ஆக்கினால்தான் ஜான்ட்டி ரோட்ஸ் களத்துக்கு வருவார். முதலில் இவரை பேட்டிங்குக்காக எல்லாம் தென்னாப்பிரிக்க தேர்வாளர்கள் அணிக்குள் எடுக்கவில்லை. ஃபீல்டிங் ஸ்பெஷலிஸ்ட்டாகவே அணிக்குள் வந்தார். ஒரு பேட்ஸ்மேன் அரை சதம் அடிப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல ஒரு ஃபீல்டர் எதிர் அணியின் 50 ரன்களைத் தடுப்பதும் முக்கியம். அப்படி எதிர் அணியின் ஸ்கோரை எகிறவிடாமல் கவர் திசையில் நின்று காத்தவர் ஜான்ட்டி ரோட்ஸ். 96-க்குப் பிறகு பேட்டிங்கிலும் நல்ல முன்னேற்றம் காட்டினார். மிடில் ஆர்டராக வந்து 40 ரன்கள்தான் அடிப்பார். ஆனால், 60 ரன்களை ஃபீல்டிங்கில் தடுத்து சென்சுரி போட்டிருப்பார். இவர் ஓடி ரன் எடுப்பதோடு, எதிரில் விளையாடும் வீரரையும் சிங்கிள், டபுள் என ஓடவைத்து ரன்களை ஏற்றிக்கொண்டேயிருப்பார். ஜான்ட்டி ரோட்ஸ் எதிர்திசையில் இருந்தால் ஸ்ட்ரைக்கில் இருக்கும் பேட்ஸ்மேன் டொக் அடித்தாலும் ரன் எடுக்க ஓடியே ஆக வேண்டும் என்பது கட்டாயம்.

உலகம் முழுக்க ஃபீல்டிங்குக்கான பென்ச்மார்க்கை செட் செய்தவர். கிரிக்கெட் வரலாற்றில் ஃபீல்டிங்குக்காக மட்டுமே மேன் ஆஃப் தி மேட்ச் விருது வாங்கிய பெருமையெல்லாம் ரோட்ஸுக்கே உண்டு. மும்பையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 5 கேட்சுகளைப் பிடித்து மிரள வைத்திருப்பார் ஜான்ட்டி. எதுவுமே கைக்கு நேரடியாக வந்த கேட்ச்கள் இல்லை. இதில் மூன்று கேட்சுகளை அந்தரத்தில் பறந்தபடியே பிடித்திருப்பார். 245 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜான்ட்டி ரோட்ஸ் 105 கேட்ச்கள் பிடித்திருக்கிறார். ஏகப்பட்ட டைரக்ட் ஹிட் ரன் அவுட்களை நிகழ்த்தியிருக்கிறார்.

லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் பல முக்கியமான ஆங்கர் இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார் ஜான்ட்டி. டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக 1993-ல் கொழும்புவில் இவர் அடித்த சென்சுரி முக்கியமானது. தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்திருக்க வேண்டிய இந்த மேட்சின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து, கடைசிவரை களத்தில் நின்று தென்னாப்பிரிக்காவின் தோல்வியைத் தவிர்த்திருப்பார் ஜான்ட்டி. இந்த டெஸ்ட்டின் நான்காவது நாள் ஆட்டத்தின்போது இலங்கை கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா 131 ரன்கள் அடித்து, தென்னாப்பிரிக்காவுக்கு 365 ரன்கள் டார்கெட்டை கொடுத்து டிக்ளேர் செய்திருப்பார். பிட்ச் முழுக்க முழுக்க ஸ்பின்னர்களுக்கு சாதகமாக மாறியிருக்கிறது என்பதால் வெற்றி நிச்சயம் என நினைத்தார் ரணதுங்கா. ஆனால், முரளிதரனின் பந்துவீச்சை சமாளித்து 101 ரன்கள் அடித்து கடைசிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்று தென்னாப்பிரிக்காவைக் காப்பாற்றியிருப்பார் ஜான்ட்டி. டெஸ்ட்டில் இவர் இதற்கு அடுத்து 2 சென்சுரிகள் அடித்தார். இவை இரண்டுமே கூட இதேபோன்று கடுமையான சூழலில் அடிக்கப்பட்டவைதான்.

Jonty Rhodes
Jonty Rhodes

ஒருநாள் போட்டிகளில் 2 சென்சுரிகள் அடித்திருக்கிறார் ரோட்ஸ். ஒன்று பாகிஸ்தானுக்கு எதிராக, 1996-ல் நைரோபியில் அடிக்கப்பட்டது. இந்தப்போட்டியில் ஹட்ஸன், கிரிஸ்டன், சிம்காக்ஸ் என 38 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்கா இழந்துவிடும். வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், சலைன் முஸ்தாக் எனப் பாகிஸ்தானின் பெளலிங் அட்டாக் சிறப்பாக இருந்த இந்தப் போட்டியில் கல்லினனோடு பார்ட்னர்ஷிப் போட்டு 121 ரன்கள் அடித்தார் ரோட்ஸ். கல்லினனும் இந்தப் போட்டியில் சென்சுரி அடித்தார். இருவரும் சேர்ந்து 232 ரன்கள் அடித்திருப்பார்கள். ஒருநாள் போட்டிகளில் இந்த 121 ரன்கள்தான் ஜான்ட்டியின் அதிகபட்ச ஸ்கோர்.

டெஸ்ட், ஒருநாள் என இரண்டு ஃபார்மேட்டிலும் சேர்த்து 5 சதங்கள் அடித்திருக்கிறார். 5 சதங்களுமே மிக நெருக்கடியான நேரங்களில் அடிக்கப்பட்டவை.

ஒருநாள் போட்டிகளில் ஜான்ட்டி அடித்த கடைசி சென்சுரியும் இரண்டாவதுமான சதம் மிக முக்கியமானது. 2,000-களுக்குப் பிறகு அடிக்கப்பட்ட சதம் இது. இந்தக் காலகட்டத்தில் தனது பேட்டிங் ஸ்டைலையே மொத்தமாக மாற்றியிருந்தார் ஜான்ட்டி. இப்போது ஏபி டி வில்லியர்ஸ் ஆடியதைப்போல பல இன்னோவேட்டிவ் ஷாட்கள் ஆடியிருப்பார்.

2002-ல் ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டி அது. முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்காவுக்கு மிகப்பெரிய ஷாக்கைக் கொடுத்தது நியூசிலாந்து. கிப்ஸ், கிரிஸ்டன், காலிஸ், மெக்கின்ஸி என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நான்கு பேருமே கிட்டத்தட்ட சிங்கிள் டிஜிட்டில் காலி. 35 ரன்களுக்கு 4 விக்கெட்கள் அவுட். மார்க் பவுச்சருடன் சேர்ந்து அணியை மீட்டெடுத்தார் ஜான்ட்டி ரோட்ஸ். கடைசிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்று 107 ரன்கள் அடித்தார். அணியின் ஸ்கோர் 270 ஆனது. தென்னாப்பிரிக்கா இந்தப் போட்டியில் வெற்றிபெற்றது. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடிப்பதைவிட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதில் கவனம் செலுத்தி அற்புதமாக ஆடியிருப்பார்.

Jonty Rhodes
Jonty Rhodes

கேப்டன் ஹான்ஸி க்ரோனியேவுடன் சேர்ந்துதான் அதிக ரன்கள் அடித்திருக்கிறார் ஜான்ட்டி ரோட்ஸ். மேட்ச் ஃபிக்ஸிங் புகார்களில் சிக்கி க்ரோனியே வெளியேற்றப்பட்டதுமே மனதளவில் கொஞ்சம் பலவீனமானார் ஜான்ட்டி. 2003 தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளைத்தான் தனது கடைசி கிரிக்கெட் தொடராக அறிவித்திருந்தார் ரோட்ஸ். ஆனால், உலகக்கோப்பையின் ஆரம்பத்திலேயே கையில் காயம் ஏற்பட கடைசித்தொடரை விளையாடாமலேயே ஓய்வுபெற்றார்.

கிரிக்கெட்டுக்குப் பிறகு என்ன செய்வீர்கள் என்று ஜான்ட்டி ரோட்ஸிடம் ஒருமுறை கேட்கப்பட்டது. ``எனக்கு அம்பயரிங் செய்யும் அளவுக்குப் பொறுமையில்லை. பயிற்சியாளராக இருக்கக்கூடிய மனப்பக்குவமும் இல்லை. கிரவுண்டில் நிறைய பேசுவேன். ஆனால், மைக் முன்னால் என்னால் பேச முடியாது என்பதால் கமென்ட்டேட்டராகவும் இருக்க முடியாது. சர்ஃபிங்கில் கவனம் செலுத்தலாம் என இருக்கிறேன்'' என்றார் ஜான்ட்டி. சொன்னதுபோலவே உலகம் முழுக்க சர்ஃபிங் போட்டிகளில் மிக ஆர்வமாகப் பங்கேற்றுவருகிறார் ஜான்ட்டி. சென்னை கோவளம் கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சர்ஃபிங் போட்டிகளுக்குத் தவறாமல் வந்து அட்டென்டன்ஸ் போட்டுவிடுவார்.

Jonty Rhodes
Jonty Rhodes

ஜான்ட்டி ரோட்ஸ் எனும் வீரர்கள் எல்லாம் ஆயிரத்தில் அல்ல; கோடிகளில் ஒருவர். எல்லா வீரர்களுக்கும் ரீப்ளேஸ்மென்ட் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இந்தக் கோடிகளில் ஒருவருக்கு ரீப்ளேஸ்மென்ட் எல்லாம் அவ்வளவு சாதாரணமானதல்ல. தன்னுடைய ரீப்ளேஸ்மென்ட்டை கண்டுபிடிக்கும் பெரும்சவாலை கிரிக்கெட் உலகத்துக்குக் கொடுத்திருக்கிறார் ஜான்ட்டி ரோட்ஸ். தேர்வாளர்கள் தேடிக் கொண்டேயிருக்கிறார்கள்... தேடல்கள் தொடரும்... முடியுமா எனத் தெரியாது!