இம்ரான் கானின் அசத்தல் கேப்டன்ஷிப், இன்சமாம் உல் ஹக்கின் எழுச்சி, வாசிம் அக்ரமின் ஹீரோயிசம் எனப் பட்டையைக் கிளப்பி கோப்பையைக் கைப்பற்றியது பாகிஸ்தான். லீக் சுற்றில் அசத்திய நியூசிலாந்து அரையிறுதியில் வெளியேற, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா லீக் சுற்றோடு வெளியேறின. இந்த உலகக் கோப்பையின் சில சுவாரஸ்யங்கள்...
உலகின் மிகச் சிறந்த ரன் அவுட்!
கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த ரன் அவுட்களைப் பட்டியலிட்டால், அதில் டாப் பொசிஷனில் இருப்பது நிச்சயம் இந்த ரன் அவுட்டாகத்தான் இருக்கும். ஜான்டி ரோட்ஸ் எனும் ஏலியன் லெவல் ஃபீல்டரை, ஒட்டுமொத்த உலகத்துக்கும் அறியப்படுத்திய தொடர் இது.
இந்தத் தொடரின் ஒரு லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் அணியின் இன்சமாம் உல் ஹக், இம்ரான் கான் களத்தில் இருந்தனர். பிரயன் மெக்மில்லன் வீசிய ஒரு பந்தை, இன்சமாம் அடிக்க முயற்சி செய்தார். பந்து பேட்டில் படாமல், காலில் பட்டுச் சென்றுவிட்டது. உடனே, ரன் எடுப்பதற்காக இன்சமாம் ஓடினார். இம்ரான் கான், வேண்டாம் என்று நின்றுவிடுவார். பந்து ஜான்டி ரோட்ஸ் கைகளில் இருக்கும். இன்சமாம், திரும்பி கிரீஸ் நோக்கி ஓடுவார். எல்லோருமே ரோட்ஸ் ஸ்டம்பை நோக்கி அடிப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ரோட்ஸ் ஹேட் அதர் ஐடியாஸ்!
ஸ்டம்புக்கு அருகே வேறு தென்னாப்பிரிக்க வீரர்கள் இல்லாததால், அவரே ஸ்டம்புகள் நோக்கி வேகமாகப் பாய்ந்தார். வேட்டையாடிக்கொண்டிருக்கும் புலி, மான் மீது பாய்வதுபோல், இரண்டு கால்களையும் நீட்டி காற்றில் பறந்தார். இன்சமாம் கிரீசுக்குள் நுழைவதற்கு முன்பே, ஸ்டம்புகள் மீது பாய்ந்து அவரை ரன் அவுட் செய்தார். இன்றும் எவராலும் மறக்க முடியாத ரன் அவுட் அது!
ஒரே பாலில் 22 ரன் எடுக்க முடியுமா?
இந்த உலகக் கோப்பையின் மிகப்பெரிய சர்ச்சை, இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அரையிறுதிப் போட்டியின்போது எழுந்தது. இப்போது டக்வெர்த் லூயிஸ் (டக்வெர்த் - லூயிஸ் - ஸ்டெர்ன்) முறை பயன்படுத்துவதுபோல், அப்போது `ஆவரேஜ் ரன் ரேட்' முறை பயன்படுத்தப்பட்டுவந்தது. 90களின் தொடக்கத்தில், அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, `Most Productive Overs' (MPO) முறை நடைமுறைக்கு வந்தது. இதுதான் தென்னாப்பிரிக்காவின் உலகக் கோப்பை கனவைக் கலைத்த வில்லன்களில் முதன்மையானது.
இந்த உலகக் கோப்பையில் பல போட்டிகள் மழையால் தடைப்பட்டுக்கொண்டே இருந்தன. இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா ஆடிய லீக் போட்டியுமே மழையால் பாதிக்கப்பட்டு, MPO முறையில்தான் முடிவு எட்டப்பட்டது. சிட்னியில் நடந்த அந்த இரு அணிகளுக்கு எதிரான அரையிறுதி, மழையால் 45 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய இங்கிலாந்து, 6 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆடிய தென்னாப்பிரிக்கா, 42.5 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு, 231 எடுத்திருந்தபோது மழை மீண்டும் குறுக்கிட்டது. 13 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் பெவிலியன் திரும்பினர் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்.

அதிக நேரம் விளையாட முடியாது என்பதால், MPO முறை கணக்கில் கொள்ளப்பட்டு, இலக்கு மாற்றப்பட்டது. இலக்கு என்ன என்று எல்லோரும் ஸ்க்ரீனைப் பார்த்துக்கொண்டிருந்தனர். `22 needed from 13' என்ற வாசகத்தில், ஒரேயொரு மாற்றமாக அந்த மூன்றை மட்டும் நீக்கிவிட்டு, மற்றதை அப்படியே ஓடவிட்டனர். `22 needed from 1'. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் அதிர்ச்சியில் உறைந்தது. முதல் உலகக் கோப்பையிலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறவிருந்த தென்னாப்பிரிக்காவின் கனவைக் கலைத்தது மழை.
மார்டின் குரோவ் - ஸ்டீரியோடைப்களை உடைத்த ஜீனியஸ் கேப்டன்!
உலகக் கோப்பைக்கு முந்தைய ஒருநாள் தொடரில், இங்கிலாந்திடம் வைட்வாஷ் ஆகியிருந்தது நியூசிலாந்து அணி. ஆனால், உலகக் கோப்பையில் அனைத்து அணிகளையும் ஜஸ்ட் லைக் தட் டீல் செய்தனர். முதல் 7 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது அந்த அணி. இதற்கு மிகமுக்கியக் காரணம், அந்த அணியின் கேப்டன் மார்டின் குரோவ். இத்தொடரின் டாப் ஸ்கோரர் (456 ரன்கள்), தொடர் நாயகன் என்பதையெல்லாம் தாண்டி, கேப்டனாக அவர் செய்த விஷயங்கள் பலரையும் கவர்ந்தன. சொல்லப்போனால் பல மாற்றங்களுக்கு முன்னோடியாகவும் அவரது முடிவுகளே இருந்தன.

இப்போதெல்லாம் சில கேப்டன்கள் முதல் ஓவரையே ஸ்பின்னருக்குக் கொடுக்கிறார்கள். அந்த டிரெண்டை இந்த உலகக் கோப்பையில் தொடங்கிவைத்தார் குரோவ். ஆஃப் ஸ்பின்னர் தீபக் படேலை, அவர் தொடக்க பௌலராகப் பயன்படுத்த, தொடக்க ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தியது பிளாக் கேப்ஸ். அதேபோல், மிடில் ஆர்டரில் ஆடிக்கொண்டிருந்த மார்க் கிராட்பேக் போன்ற ஹிட்டர்களை ஓப்பனர்களாக இறக்கினார். இவரது அந்தப் புதிய யுக்திகள் நல்ல பலன் கொடுத்தது மட்டுமல்லாமல், அனைத்து ஸ்டீரியோடைப்களையும் உடைத்து, புதிய புதிய மாற்றங்களுக்கு வழிவகுத்தது.
முதன் முதலாய்..!
முதல் 4 உலகக் கோப்பைகளிலும், எல்லா அணிகளும் வெள்ளை உடை அணிந்துதான் விளையாடிக்கொண்டிருந்தன. இந்த உலகக் கோப்பையில்தான் கலர்ஃபுல் ஜெர்சிகளோடு ஒவ்வோர் அணியும் கலந்துகொண்டன. இப்போதுபோல், ஒவ்வொரு ஜெர்சியும் ஒவ்வொரு டிசைனிலெல்லாம் அப்போது இல்லை. அனைத்து அணிகளின் ஜெர்சிகளும் ஒரே பேட்டர்னில்தான் (pettern) இருக்கும். நிறம் மட்டும் மாறுபடும். அதுமட்டுமல்லாமல், முதல் முறையாக வெள்ளை நிறப் பந்துகளும் இந்த உலகக் கோப்பையின்போதுதான் பயன்படுத்தப்பட்டன.

போட்டியின் ஃபார்மட் மாறியதும் இந்த உலகக் கோப்பையில்தான். அதுவரை 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக விளையாடிக்கொண்டிருக்க, இந்த முறை 9 அணிகள் ஒரே பிரிவாக, ரவுண்ட் ராபின் முறையில் விளையாடின. ஒவ்வோர் அணியும் மற்ற அணியோடு ஒரு முறை மோதின. தென்னாப்பிரிக்க அணி பங்கேற்ற முதல் உலகக் கோப்பையும் இதுதான்.