Published:Updated:

போர் கண்ட சிங்கம் பேர்ஸ்டோ: 55/6 டு 264/6 - டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் நம்பமுடியாத கம்பேக்!

பேர்ஸ்டோ | ENG vs NZ

இந்தாண்டு பேர்ஸ்டோ சதம் அடித்துள்ள நான்கு போட்டிகளிலும் அணி எந்த நிலையில் இருக்கும் போது அவர் அதனைச் செய்தார் என்பதுதான் அதனைக் கூடுதல் சிறப்புடையதாக்குகிறது. நான்கு போட்டிகளின் ஸ்கோர் கார்டுகள் அதனை உரக்கவே உரைக்கின்றன.

போர் கண்ட சிங்கம் பேர்ஸ்டோ: 55/6 டு 264/6 - டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் நம்பமுடியாத கம்பேக்!

இந்தாண்டு பேர்ஸ்டோ சதம் அடித்துள்ள நான்கு போட்டிகளிலும் அணி எந்த நிலையில் இருக்கும் போது அவர் அதனைச் செய்தார் என்பதுதான் அதனைக் கூடுதல் சிறப்புடையதாக்குகிறது. நான்கு போட்டிகளின் ஸ்கோர் கார்டுகள் அதனை உரக்கவே உரைக்கின்றன.

Published:Updated:
பேர்ஸ்டோ | ENG vs NZ
உலக சாம்பியனான நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகம் இதுவரை பார்க்காத பக்கங்களை பேர்ஸ்டோ, தனது அதிரடி இன்னிங்ஸ்களால் எழுதி வருகிறார். இரண்டு அடுத்தடுத்த சதங்களை, அதுவும் 100-க்கும் அதிகமான ஸ்ட்ரைக்ரேட்டில் அடித்து அடாவடி காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து வென்ற சமயத்தில், ஷேன் வார்னே, பேர்ஸ்டோ சேர்க்கப்படாதது குறித்த விமர்சனத்தை வீசினார், "இங்கிலாந்து போதுமான அளவு அக்ரஷனை ஆட்டத்தில் வெளிப்படுத்துவதில்லை" என்று சொல்லி, அதனை வெற்றிக்கும் அவர்களுக்கும் நடுவில் நிற்கும் சுவராகக் குறிப்பிட்டிருந்தார். அதோடு டெஸ்டில், பேர்ஸ்டோவுக்கான வாய்ப்பு கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும், அவர் எல்லா ஃபார்மேட்டுக்குமானவர் என்ற கருத்தையும் முன்வைத்தார். எவ்வளவு தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இவை?! ஓராண்டுகளுக்கு முன் அவர் சொன்ன இரண்டுமே தற்சமயம் நடந்தேறி வருகின்றன.

இங்கிலாந்து அணி | ENG vs NZ
இங்கிலாந்து அணி | ENG vs NZ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்கிலாந்தும் பேர்ஸ்டோவும் ரெட் பால் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை சற்று தடுமாறியே வந்தனர். சென்ற வருடம், நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரைப் பறிகொடுத்த பின் கடும் வீழ்ச்சியை இங்கிலாந்து அணி சந்தித்தது. கடந்தாண்டு மட்டுமல்ல, ஒரு சில ஆண்டுகளாகவே பேர்ஸ்டோவின் டெஸ்ட் செயல்பாடுகளும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. 2018 நவம்பரில் தனது ஆறாவது டெஸ்ட் சதத்தை அடித்தவர், அதன்பின் 2019 - 2021 காலகட்டத்தில் ஒரு சதத்தைக்கூட அடிக்கவில்லை. இச்சமயத்தில் ஆடிய 19 போட்டிகளில் மூன்று அரைசதங்கள் மட்டுமே வந்து சேர்ந்திருந்தன. 2019 ஆஷஸ் தொடரில் அடித்த அரைசதம் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியாக அமைந்தது.

இக்காரணத்தினாலேயே அணியில் தனது இடத்தை நிலைநிறுத்தவே அவர் போராட வேண்டியிருந்தது. 2020-ல் "வருங்காலத்தை மனதில் நிறுத்தி" என்ற வாக்கியத்தோடு, அவருடனான டெஸ்ட் சம்பள ஒப்பந்தத்தைக் கூட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முறித்துக் கொண்டது. 18 மாதங்கள் ரெட் பாலைச் சந்திக்காமலே அவரது பேட் இருந்த நிலையெல்லாம்கூட நடுவில் ஏற்பட்டிருக்கிறது. பேர்ஸ்டோவோ போர் கண்ட சிங்கமாக மீண்டு, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது ரவுண்டுக்காகக் கடந்தாண்டு கிளம்பி வந்தார். ஆனாலும், பெரிதாக எடுபடவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இலங்கைக்கு எதிரான தொடரில் நான்கு இன்னிங்ஸ்களில் 28 ரன்கள், இந்தியாவுக்கெதிரான தொடரில் ஏழு இன்னிங்ஸ்களில் வெறும் 184 ரன்கள், மொத்தமே ஒரு அரைசதம் என சூன்யம் சூழ்ந்ததாகவே அவரது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், நடப்பு ஆண்டு, பேர்ஸ்டோவின் வெற்றிக் கதையைப் படித்துக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் ஆடிய ஏழு போட்டிகளில் நான்கு சதங்களை பேர்ஸ்டோ விளாசியுள்ளார்.

ஆஷஸ் தொடரில் சிட்னியில் காயமடைந்த கட்டை விரலோடு பேட் செய்து, அவமானத்தைக் கொஞ்சமாகத் துடைத்ததோடு இந்தாண்டுக்கான தனது முதல் சதத்தை அடித்து லாபம் எனத் தொடங்கினார். அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும், ஆன்டிகுவாவில் அடுத்த சதத்தை அடித்தார். ஆனாலும், அவரது மொத்தத் திறனையும் வெளிக்கொணர்ந்து, பேர்ஸ்டோவின் உண்மையான அதிரடி தோய்த்த முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டியிருப்பது நியூசிலாந்துக்கு எதிரான இந்தத் தொடர்தான்.
பேர்ஸ்டோ | ENG vs NZ
பேர்ஸ்டோ | ENG vs NZ

'சதமே சாஸ்வதம்' எனத் தொடரும் சாதனைகளுக்காக மட்டுமல்ல, சந்தர்ப்பத்தில் அணியை மீட்டெடுப்பதற்கான ஒரு சத்தமில்லா சாகசமாகவும் அவை மாறியுள்ளன. இந்தாண்டு அவர் சதம் அடித்துள்ள நான்கு போட்டிகளிலும் அணி எந்த நிலையில் இருக்கும் போது அவர் அதனைச் செய்தார் என்பதுதான் அதனைக் கூடுதல் சிறப்புடையதாக்குகிறது. நான்கு போட்டிகளின் ஸ்கோர் கார்டுகள் அதனை உரக்கவே உரைக்கின்றன. 36/4, 48/4, 56/3, 17/3 என எல்லாமும் முடிந்துவிட்ட சமயத்தில் உள்ளிறங்கி, அங்கிருந்து அணியை மேடேற வைத்திருக்கிறார்.

கடந்த 2-வது டெஸ்டின் இறுதி நாளில் 299 ரன்கள் இலக்கைத் துரத்திய போது, இங்கிலாந்து வெல்லும் என அவர்களது நாட்டு ரசிகர்களே நினைத்திருக்க மாட்டார்கள். ஐம்பது ஓவர்களில் 299 ரன்களை அடித்து அதிசயக்க வைத்த இங்கிலாந்து, தற்சமயம் கடைசி டெஸ்டிலோ 49 ஓவர்கள் ஸ்லாட்டுக்குள் 264 ரன்களை அடித்து ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கியது. இந்த இரண்டு மெகா விளாசல்களிலுமே நியூசிலாந்துக்கு தவிர்க்க முடியாத பேராபத்தை உண்டாக்கியவர் பேர்ஸ்டோ.

டிரெண்ட்ப்ரிட்ஜ் டெஸ்டில் அவரது வெறியாட்டம், முதல் போட்டியில் தனது ஆட்டத்தை விமர்சித்த அத்தனை உதடுகளுக்கும் தாழ்ப்பாள் இடுவதாக அமைந்தது. 299 ரன்களைத் துரத்த வேண்டும், 93/4 என இக்கட்டான நிலைதான் என்றாலும், அவரது 136 ரன்கள், 147.8 ஸ்ட்ரைக்ரேட்டில் வந்து எல்லாவற்றையும் சுலபமாக்கின. நான்காவது இன்னிங்ஸ், ஐந்தாவது நாளின் இறுதி நொடிகள் கொண்டு வரும் அளவுக்கதிகமான பதற்றம் எதுவுமே அவரது நிழலைக் கூடத் தீண்டவில்லை. பென் ஸ்டோக்ஸுடன் நீடித்த அந்த 20 ஓவர்கள் பார்ட்னர்ஷிப்தான், இங்கிலாந்து கடந்த சில மாதங்களாக இழந்திருந்த அத்தனை நம்பிக்கை வேர்களையும் திரும்பவும் ஊன்றச் செய்தவை. 77 பந்துகளில் வந்து சேர்ந்த அந்தச் சதம், இங்கிலாந்து டெஸ்ட் வரலாற்றில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதம் என்பதோடு, போட்டியை, ஏன் தொடரையே அவர்களுக்கு வென்று தந்தது.

ஸ்டோக்ஸ் | ENG vs NZ
ஸ்டோக்ஸ் | ENG vs NZ

மைக்கேல் ப்ரேஸ்வெல்லின் பந்துகளைக் குறிவைத்ததாகட்டும், ஹென்ரியின் பந்துகளைக் கவனித்த விதமாகட்டும், நியூசிலாந்துக்கு நூழிலை வாய்ப்பைக்கூட அவர் தரவேயில்லை. தோற்று விடுவோமோ என்ற தடுமாற்றத்தை எந்த நொடியிலும் பார்க்க முடியவில்லை. வெல்ல வேண்டுமென்ற வேட்கையே இருந்தது. அதுதான் டெஸ்டில் இங்கிலாந்தின் புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதை எடுத்துரைத்தது. 'மெக்கல்லமின் தாக்கம், ஸ்டோக்ஸ் தந்த மாற்றம்' என பல பக்கத் தலைப்புகள் அடைப்புக்குறிக்குள் அலங்கரித்தாலும், தலைமையான தலைப்பு, 'பேர்ஸ்டோவின் எழுச்சி' என்பதுதான்.

அப்படியொரு வெற்றியைக் கொண்டாடித் தீர்க்கவே, இன்னமும் பல மாதங்கள் இங்கிலாந்துக்குத் தேவைப்படும் நிலையில்தான், இறுதி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கவுன்ட்டர் அட்டாக் என்பதற்கான செயல்முறை விளக்கத்தை ஹெட்டிங்லேயில் வைத்து பேர்ஸ்டோ நடத்தியிருக்கிறார். இத்தொடரில் மிட்செல்லின் மூன்றாவது சதம் இப்போட்டியில் வந்து சேர்ந்தது, போல்டின் அதிவேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்தின் டாப் ஆர்டர் சரிந்தது, டெஸ்டில் பென் ஸ்டோக்ஸின் 100-வது சிக்ஸர் வந்தது போன்றவை முக்கிய ஹைலைட்ஸ்தான் என்றாலும், அவை பேர்ஸ்டோ ஏற்படுத்திய தாக்கத்திற்கு முன் நீர்த்துப் போய்விட்டன.

329 ரன்களை முதல் இன்னிங்ஸில் குவித்த போதும், 12 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்ட போதும், தங்களது கை ஓங்கி விட்டதாகவே நியூசிலாந்து நினைத்திருந்தது. அந்தக் கைகளுக்கு ஹை ஃபைவ் கொடுத்து பின் கொஞ்சம் கொஞ்சமாக கீழிறக்கியது பேர்ஸ்டோ - ஓவர்டன் கூட்டணி. அதுவும் 55/6 என்ற புள்ளியிலிருந்து மேலும் 209 ரன்களை அதுவும் 222 பந்துகளில் குவித்ததுதான் நம்ப முடியாத கம்பேக். சில சந்தர்ப்பங்களில், ஒரு ஓவரில் 10-ஐ தாண்டி ரன்கள் எடுக்கப்பட்டது நாம் பார்த்துக் கொண்டிருப்பது டெஸ்ட் போட்டிதானா என்ற சந்தேகத்தைக் கிளப்பியது.
பேர்ஸ்டோ - ஓவர்டன் கூட்டணி | ENG vs NZ
பேர்ஸ்டோ - ஓவர்டன் கூட்டணி | ENG vs NZ

கடந்த போட்டியிலாவது பேட்டிங்கிற்கான சூழ்நிலை ஓரளவு சிறப்பாகவே இருந்தது. இதனால் பதற்றத்தை நியூசிலாந்தின் பக்கம் எதிரொளிக்கச் செய்து பேர்ஸ்டோ வெற்றி பெற்றார். ஆனால், இப்போட்டியில் நிலை அதுவல்ல. பந்துகள் நன்றாகவே ஸ்விங் ஆகின. பேர்ஸ்டோ, இன்கமிங் டெலிவரிகளில் கொஞ்சம் திணறித்தான் போயிருந்தார். ஆனால், அது எதுவுமே திருப்பி அடிப்பதிலிருந்து அவரைக் கட்டிப் போடவேயில்லை. போன போட்டியைப் போலவே ப்ரேஸ்வெல்லின் சுழலும் பந்துகள் ரன் சூடு வாங்கின. கவரிலும், தேர்ட் மேன் ஏரியாவிலும் நின்ற ஃபீல்டர்களுக்கு அதிகமாகவே வேலையுமிருந்தது. பல நேரங்களில் அவர்களைத் தாண்டி, பவுண்டரி லைனைத் தீண்டி ரன்களும் களவாடப்பட்டன.

கிட்டத்தட்ட 106 ஓவர்களில்தான் நியூசிலாந்து 264 ரன்களைக் கடந்திருந்தது. ஆனால் அந்த இடத்தை எட்ட இங்கிலாந்து எடுத்துக் கொண்டது 49 ஓவர்களும், சில மணிநேரங்களும்தான். பேர்ஸ்டோ என்னும் பேரலையில் எந்த நியூசிலாந்து பௌலரும் தப்பிப் பிழைக்கவில்லை. வெறும் 95 பந்துகளில் தனது சதத்தைக் கடந்தார் பேர்ஸ்டோ. பேக் டு பேக் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 100-க்கும் அதிகமான ஸ்ட்ரைக்ரேட்டோடு சதத்தினைத் தொட்டவர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தினார். அறிமுக வீரரான ஓவர்டன்னுடனான கூட்டணியின் மூலம், ஏழாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்களில் நினைவு கூரத்தக்கதாகவும், இதனை மாற்றி எழுதினார். 5000 டெஸ்ட் ரன்கள் என்ற மைல்கல்லும் பேர்ஸ்டோவால் எட்டப்பட்டது.

இந்த டெஸ்டில் கூட இன்னமும் இங்கிலாந்து 65 ரன்கள் பின்தங்கிதான் இருக்கிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில்கூட இன்னமும் எட்டாவது இடத்தில்தான் நீடிக்கிறது. என்றாலும், பேர்ஸ்டோ இந்த இரண்டு இன்னிங்ஸ்கள் மூலமாக புதிதாக அணிக்குள் கொண்டு வந்திருக்கும் இந்த நேர் அதிர்வுகள்தான் எதிரணிகளை உலுக்குகின்றன. காலாவதியாகி விட்டதாகக் கருதப்பட்ட இங்கிலாந்தின் ரெட் பால் கிரிக்கெட்டுக்கு அது புது ரத்தம் பாய்ச்சி வருகிறது. டெஸ்டில் இங்கிலாந்து அடுத்த சுற்றைத் தொடங்கி விட்டது, அதுவும் அதிரடியாக!

வரவிருக்கும் போட்டியில், இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத்தலில் ஒன்றாக பேர்ஸ்டோவின் பேட்டிங் இருக்கும். சமீபத்தில், ஐபிஎல்லில் கற்றுக் கொண்டதாக அவர் சொன்ன பாடத்தை இந்தியாவுக்கே அவர் கற்றுத் தரும் போட்டியாகக்கூட அது மாறலாம்.